“எல்ஜிஎம் படம் பார்த்துவிட்டு சந்தேகம் கேட்ட என் மகள்” டிரைலர் ரிலீஸ் விழாவில் கேப்டன் தோனி ‘கூல் ஸ்பீச் ‘
“எல்ஜிஎம் படம் பார்த்துவிட்டு சந்தேகம் கேட்ட என் மகள்”
முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை அன்று கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது.
“தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத் தயாரிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கும் மாபெரும் கிரிக்கெட் வீரரான தல தோனி அவர்கள், தன் மனைவி சாக்ஷி தோனியுடன் சேர்ந்து தயாரித்திருக்கும் LGM திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலரை திரை பிரபலங்கள், ஊடக, பத்திரிக்கை, இணைய நிருபர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.
LGM திரைப்படம் காமெடிக் காட்சிகள் நிறைந்த குடும்பத்தோடு கண்டு ரசிக்கக் கூடிய ஒரு திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நாயகன் நாயகியாக ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரத்தில் நதியா, யோகி பாபு மற்றும் ”மிர்ச்சி” விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்கி இருப்பதோடு, இசையும் அமைத்திருக்கிறார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இப்படத்தின் தயாரிப்பாளருமான தோனி பேசும் போது, நான் இப்படத்தைப் பார்த்து விட்டேன். இது மிகச் சிறப்பாக உருவாகி இருக்கிறது. நான் என் மகளோடு அமர்ந்து இப்படத்தைப் பார்த்தேன். அவள் என்னிடம் சில சந்தேகங்கள் கேட்டாள். அவளுக்கும் படம் பிடித்திருக்கிறது. இது ஒரு ஜாலியான திரைப்படம். மொத்தத்தில் அனைவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
எனக்கு என் தயாரிப்பு அணியை பார்க்கும் போது பலம் வருவது போல் உணர்கிறேன். அவர்கள் இந்த தயாரிப்புப் பணியை கையாண்ட முறையைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.
இயக்குநர் ரமேஷ் தமிழ்மணியும் ஒரு கட்டிடக்கலை நிபுணர் தான். என் மனைவி என்னிடம் படத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று சொன்ன போது, நான் அவளிடம் சொன்னது ஒன்று தான். படத் தயாரிப்பு என்பது நீ நினைப்பது போல் வீட்டு சுவருக்கு வெள்ளையடிக்கின்ற விசயம் இல்லை. நீ முதலில் ஒரு கலர் அடிப்பாய், பின்னர் அது நன்றாக இல்லை என்று வேறு கலர் அடிப்பாய். பின்னர் தான் தோன்றும் முதல் கலரே இதைவிட நன்றாக இருந்தது என்று. பின்னர் நீ மீண்டும் முதல் கலரையே அந்த சுவற்றுக்கு அடிப்பாய். படத் தயாரிப்புப் பணியில் அப்படி செய்ய முடியாது. கதை என்ன, யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை நீயே முடிவு செய். இதை தயாரிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால், பின்னர் எதைப் பற்றியும் யோசிக்காதே, அந்த வேலையை தொடங்கிவிடு, மற்ற எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று சொன்னேன். படக்குழுவினர் சொன்ன நாட்களுக்குள் படத்தை முடித்திருப்பதற்கு அதுவும் முக்கியமான ஒரு காரணம்.
நான் என் குழுவினரிடம் ஒரு விசயத்தில் உறுதியாக இருக்கும்படி கூறினேன். அது உணவு. நடிகர்களுக்கான உணவோ, அல்லது மொத்த படக்குழுவினருக்கான உணவோ, யாருக்கான உணவாக இருந்தாலும் அது உயர்ந்த தரமான உணவாக இருக்க வேண்டும் என்பது தான். நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போதும் எதிர்பார்ப்பது நல்ல தரமான உணவு மட்டும் தான்.
சாக்ஷி இப்படத்தின் கதையை என்னிடம் கூறினார், அதன் பின், இப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்தோம்.
எனக்கு விதியின் மீது நம்பிக்கை உண்டு. என்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் சென்னையில் தான், நான் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்ததும் சென்னையில் தான். நினைத்துப் பார்த்து சந்தோஷப்படும் பல சம்பவங்கள் சென்னையில் நடந்துள்ளது. தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் அரவணைப்பும் நம்பவே முடியாத ஒன்று. மேலும், தமிழ் நாடு என்னை தத்தெடுத்துள்ளது. இந்த ஆண்டு நாங்கள் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு பின்னர் சாம்பியன் ஆனது மறக்க முடியாத தருணம். நான் செல்லும் இடமெல்லாம் சிஎஸ்கே-வின் அன்பு என்னை தொடர்கிறது. இதெல்லாம் தான் இப்படத்தை தமிழில் தயாரிக்க காரணம்.இப்படம் வெகு சீக்கிரத்தில் வெளியாக இருக்கிறது. மிகவும் ஜாலியான திரைப்படமாக இது இருக்கும். மூன்று நபர்களுக்கு இடையேயான சமன்பாடு தான் இத்திரைப்படம். அந்த மூவர் மகன், மருமகள், மாமியார், அம்மா மற்றும் மனைவிக்கு நடுவில் ஷாண்ட்விச் போல் மாட்டிக் கொண்டவர் தான் மகன். இதைத்தான் இப்படம் கலகலப்பாக பேசுகிறது.