உப்பிலியபுரத்தில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம். !
உப்பிலியபுரத்தில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம். 7 வது நாளாக கறவை மாடுகளை முன்னிறுத்தி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து 7 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வரும் போராட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கியக்கோரிக்கைகளாக, “தமிழக அரசு நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு மூன்றாயிரம் எனவும் கரும்பு டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் எனவும், பசும்பால்ஸ்டர் 50 ரூபாய் ,எருமை பால் 75 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும் ,பனை மற்றும் தென்னை மரத்திலிருந்து கள் மற்றும் பதநீர் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
நல்லெண்ணெய் , கடலை எண்ணெய் , தேங்காய் எண்ணெய் வகைகளை உழவர்களிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்து அதனை மானிய விலையில் நியாய விலைகடைகளில் விற்பனை செய்ய வேண்டும் , 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து வேளாண்மை பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் , உழவர்களின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்ய வேண்டும் , உழவர்களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி தொடர்ந்து 7-வது நாளாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் போராட்டம் செய்தனர்.
பால் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கறவை மாடுகளை முன்னிறுத்தி , கோஷங்கள் எழுப்பினர்.மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு செவி சாய்க்காவிட்டால் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போராட்டம் நடைபெறும் எனவும் விவசாயிகள் கூறினர். 7. ம் நாள் காத்திருப்பு போராட்டத்திற்கு பொம்மனப்பாடி அழகேசன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி , ஜெயராஜ், அவைத் தலைவர் நடராஜன் , பொன்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ராமராஜ், காளிமுத்து, நல்லுசாமி, அறிவழகன் , பழனிசாமி, ஜெயக்குமள் , அன்புச்செல்வன் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் என போராட்டத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மணி நன்றி கூறினார்.