மணிப்பூர் கலவரம்: ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்!
மணிப்பூர் கலவரம்:
ஒன்றிய பாஜக அரசைக்
கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்!
மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டத் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் கோ.சக்திவேல், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் வீரமோகன், பக்கிரிசாமி, இராமச்சந்திரன், சேவையா, கிருஷ்ணன், விஜயலட்சுமி, ஏஐடியூசி நிர்வாகிகள் கோவிந்தராஜன், அன்பழகன், துரை.மதிவாணன், பேராசிரியர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மூத்த தலைவர் ஜி.கிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். முடிவில், மாநகர துணைச் செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் நன்றி கூறினார்.
மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக மெய்;த்திக் இன மக்களுக்கும் குக்கி மற்றும் நாக பழங்குடி இன மக்களுக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அம்மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இக் கலவரத்தில் சுமார் 250க்கு மேற்பட்ட தேவாலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இரு தரப்பிலும் 150க்கு மேற்பட்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர் கலவரத்தினால் சொந்த மாநிலத்திலேயே அம்மக்கள் அகதிகளாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.