அங்குசம் பார்வையில் ‘மை லார்ட் ‘
தயாரிப்பு: ‘ஒலிம்பியா மூவிஸ்’ ஜெயந்தி அம்பேத்குமார் & அம்பேத்குமார். எழுத்து -இயக்கம்: ராஜு முருகன். நடிகர்-நடிகைகள்: எம்.சசிகுமார், சைத்ரா ஆச்சர், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், ஜெயப்பிரகாஷ், கோபி நைனார், வசுமித்ரன் ஒளிப்பதிவு: நீரவ் ஷா, இசை: ஷான் ரோல்டன், எடிட்டிங்: சத்யராஜ் நடராஜன், காஸ்ட்யூம் டிசைனர்:டி.ஆர். பூர்ணிமா, ஆர்ட் டைரக்டர்: முனி பால்ராஜ் பிஆர்ஓ: யுவராஜ்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அனாதையாகிவிட்ட முத்துச் சிற்பியை [ சசிகுமார்] வளர்க்கிறார் கோவில்பட்டியில் தீப்பெட்டி கம்பெனி நடத்தும் வள்ளலார் பக்தரான திருநாவுக்கரசு என்ற பெரியவர். தான் இறக்கும் தருவாயில் தனது மகள் சுசீலாவை [ சைத்ரா ஆச்சர்] முத்துச்சிற்பியின் கையில் ஒப்படைத்து “இவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடு” எனச் சொல்லிவிட்டு கண் மூடுகிறார் திருநாவுக்கரசு. தன்னை வளர்த்த பெரியவரின் வாக்கைக் காப்பாற்ற சுசீலாவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்க்கிறார் முத்து. ஆனால் சுசீலாவின் மனதிலோ முத்து தான் இருக்கிறார். இதைத் தெரிந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு ரேஷன் கார்டு எடுத்து தனி வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் ஒன்றிய அமைச்சர் சுஜாதா மோகனுக்கு [ ஆஷா சரத்] ஒரு கிட்னி செயல் இழந்து டயாலிசிஸ் மூலம் உயிர் வாழ்கிறார். அப்போது அன் அஃபீஷியலாக கிட்னி விற்கும் புரோக்கர்கள் மூலம் கோவில்பட்டியில் இருக்கும் முத்துச்சிற்பியின் கிட்னியும் பீகாரில் இருக்கும் ஒரு பெண்ணின் கிட்னியும் ரத்த வகை மூலம் 99% ஒத்துப் போவது தெரிந்து பீகாருக்கு ஒருவரும் கோவில்பட்டிக்கு இருவரும் போகிறார்கள்.
கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இருக்கும் முத்து, ‘மக்கள் குத்து’ பத்திரிகை ஆசிரியர் குரு சோமசுந்தரத்தின் உதவியுடன் திடீரென உயிருடன் வந்து போராட்டம் நடத்துகிறார். அவரை அள்ளிப்போட்டு ஸ்டேஷனுக்கு கொண்டு போகிறது போலீஸ். அங்கேயே வந்து முத்துவைக் காப்பாற்றி அவரிடம் கிட்னிக்கு ரேட் பேசுகிறார்கள் ஒன்றிய அமைச்சரின் ஆட்கள். “எனக்கு ரேஷன் கார்டு வாங்கிக் கொடுங்க, கிட்னி தர்றேன். கிட்னிய மட்டுமில்ல இதயம், கல்லீரல், கணையம் எல்லாத்தையும் தர்றேன்” என்கிறார் முத்துச் சிற்பி.
கிட்னியைக் கொடுக்கும் அளவுக்கு ரேஷன் கார்டுக்கு அப்படியென்ன வேல்யூ? ஒன்றிய அமைச்சருக்கு கிட்னி கொடுத்தாரா முத்து? இதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘மைலார்ட்’.
“அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை” என்ற வள்ளலாரின் தத்துவம் தான் இந்த ’மைலார்ட்’ -ன் மிக முக்கிய மேட்டர். இதை முன்னிலைப்படுத்தி இரக்கமும் ஈகை குணமும் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் இயல்பிலேயே இருக்கும் குணம், அதிலும் மனிதம் மட்டுமே அவர்களிடம் இருக்கும் குணம் என்பதைச் சொன்னதற்காகவே இயக்குனர் ராஜுமுருகனை மனம் திறந்து பாராட்டலாம். ஒன்றிய அமைச்சர் சுஜாதா மோகன் என்ற அதிகாரத் திமிர், ஆணவம் இதெல்லாம் இப்போதைய நிர்மலா சீத்தாராமனை அப்படியே நினைவுபடுத்துகிறது. அதற்கு ராஜு முருகனுக்கு மீண்டும் ஒரு பாராட்டு. உயிர் வதையுடனும் மருத்துவ உதவியுடனும் வாழந்தாலும் அருகிலேயே பெண் சாமியார், ஐயர்களின் பூஜை, பரிகாரங்கள், தீர்த்த நீர், இவற்றின் உதவியுடனும் வாழும் சங்கிகளின் வேஷத்தையும் கலைத்திருக்கிறார் ராஜுமுருகன்.
முத்துச் சிற்பியாக நம்ம சசிகுமார். மனுஷனுக்கு இந்த மாதிரி கேரக்டர்கள் தானா வந்து அமையுது. அதை கச்சிதமாக பயன்படுத்துவதில் மீண்டும் மீண்டும் வெற்றியைப் பெறுகிறார் சசிகுமார். சில இடங்களில் நடிப்பில் லேசாக செயற்கைத்தனம் எட்டிப் பார்க்கத்தான் செய்யுது. சுசீலாவாக சைத்ரா ஆச்சர். அச்சு அசல் கோவில்பட்டி மனுஷியாக..தீப்பெட்டி கம்பெனி தொழிலாளியாக, வள்ளலாரின் பக்தையாக வாழ்ந்திருக்கிறார்.
க்ளைமாக்ஸில் சசிகுமாரிடம் , “அந்தம்மா[சுஜாதா மோகன்] பண்ணிய கொடுமைக்கு அவரோட பிள்ளைகளே கிட்னியை தரமாட்டேங்குறாங்க. நீங்க ஏன் தர்றீங்க?” சைத்ரா கேட்கும் போது, “அது அவர்களோட குணம், இது நம்மளோட குணம்” சசிகுமார் சொல்லும் இந்தப் பதில் தான் இந்தப் படத்தின் உயிர்நாடி. ஆனால் இடைவேளை வரையும் அதற்குப் பின் க்ளைமாக்ஸ் வரையும் சரி, எந்த ஒரு காட்சியும் மனசை உலுக்கும் விதமாக இல்லை என்பது நமக்கே தெரியும் போது நாயகன் சசிகுமாருக்கும் இயக்குனர் ராஜு முருகனுக்கும் தெரியாமல் இருக்குமா என்ன? மற்றபடி பத்திரிகையாளராக வரும் குருசோமசுந்தரம், சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதியாக வருபவரின் ஒரு டைப்பான மேனரிசம், ஐகோர்ட் நீதிபதியாக வரும் ஜெயப்பிரகாஷின் மனிதாபிமானம், வக்கீலாக வரும் கோபி நைனார் என எல்லா கேரக்டர்களுமே கனகச்சிதம்.
அங்குசம் பார்வையில் ‘மை லார்ட் ‘ 45/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.