ரயிலில் மர்ம சூட்கேஸ் … சிக்கிய 10 கிலோ கஞ்சா !
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உத்தரவின் பேரிலும், துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி மேற்பார்வையிலும், ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுகுமாரன், தலைமை காவலர் ஆனந்த், காவலர்கள் கண்ணதாசன், ராஜ்குமார் மற்றும் திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் இரயில் நிலையங்களில் தொடர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இரயில் பயணிகளின் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல்-4 ஆம் தேதியன்று திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5-இல் நின்றிருந்த 20849 புவனேஸ்வர் – ராமேஸ்வரம் விரைவு ரயிலின் பொதுப்பெட்டியில் கேட்பாரற்று ட்ராலி சூட்கேஸ் ஒன்று கிடந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
இரயில் நிலையத்தில் கண்டறியப்பட்ட மர்ம சூட்கேஸால் பரபரப்பு தொற்றியது. மர்ம சூட்கேஸை போலீசார் சோதனையிட்டதில், அதில் தலா 2 கிலோ எடையுடைய 5 பாக்கெட்டுகளில் மொத்தம் 10 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதன் மதிப்பு சுமார் 5 இலட்சம் ஆகும். கைப்பற்றப்பட்ட கஞ்சாவை போதைப்பொருள் நுண்ணறிவு போலீசார் வசம் சட்ட ரீதியான நடவடிக்கையின் பொருட்டு ஒப்படைத்தனர். எங்கிருந்து இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டது? இரயிலில் கொண்டு வந்தது யார்? யாரிடம் ஒப்படைப்பதற்காக எடுத்து வரப்பட்டது? இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
-நிகழன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.