பாஜக கூட்டணியில் ‘நாம் தமிழர்’ கட்சி’ களம் மாறும் தமிழக அரசியல்
பாஜக கூட்டணியில் ‘நாம் தமிழர்’ கட்சி’ களம் மாறும் தமிழக அரசியல்
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உலகச் செஸ் போட்டி தற்போது நடந்து வருகின்றது. இந்தப் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருகை தந்திருந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடியிடம் உள்ள வெறுப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அன்பு பாராட்டி நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தார். இந்த நிகழ்வையொட்டி, திமுக, பாஜக கூட்டணி அமையப்போகிறது என்று கொளுத்திப் போட்டார்கள். திமுக தரப்பில், “அதற்கு வாய்ப்பே இல்லை”, என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். பாஜக தரப்பில் மௌனம் காக்கப்பட்டது.
சென்னை வந்திருந்த பிரதமர் மோடியைச் சென்னை விமானநிலையத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மோடி, பழனிசாமியிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மறுநாள் அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தில்லி திரும்பிய போது சென்னை விமானநிலையத்தில் அதிமுகவின் ஒருங்கி ணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவரை சந்தித்து வழி யனுப்பி வைத்தார். அப்போது மோடியும் பன்னீரும் சில நிமிடங்கள் உரையாடிக் கொண்டி ருந்தார்கள். இது அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப் பட்டது. இந்த நிகழ்வுகளை வைத்து மோடி, ஓ.பி.எஸ். பக்கம் ஆதரவு நிலை எடுத்துள்ளாரோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த மோடியைத் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் பலரும் சந்தித்தார்கள். மாநில அரசியல் மற்றும் அதிமுக பிளவு குறித்து அதிகம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. “அதிமுக பிளவில் நாம் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டியதில்லை. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது இருவரையும் ஒன்றாக்க முயற்சி செய்வோம். அதிமுக சின்னம் இரட்டைஇலை யாரிடம் உள்ளதோ அவர்களிடம் நாம் கூட்டணி வைத்துக்கொள்வோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் தான் தமிழ்நாட்டில் கூட்டணி அமையும். கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பாஜக 20 மக்களவைத் தொகுதியில் போட்டியிடும். அதிமுக பிளவினால் ரொம்பவும் பலவீனப்பட்டுள்ளது. அதன் தொண்டர்கள் போகும் திசையறியாது திகைத்து நின்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாஜகவுக்குத்தான் வாக்களிப் பார்கள். திமுகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்.
எனவே, மாநிலத்தின் கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டுங்கள்” என்று மோடி அறிவுரை கூறியுள்ளார். பாஜக தலைமையில்தான் மாநிலத்தில் கூட்டணி உறுதியாகி விட்டது என்று மாநிலப் பாஜக தலைமை பெருமகிழ்ச்சி கொண்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் அதிமுகவின் ஒரே உறுப்பினராக உள்ள தேனி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் இரவீந்திரநாத்தை அதிமுகவிலிருந்து நீக்கி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர் இரவீந்திரநாத் சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், “அதிமுகவில் இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு கிடையாது. அண்மையில் கூட்டப்பட்ட பொதுக்குழுக்கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இல்லாமல் நடைபெற்றுள்ளது. மேலும், கட்சியிலிருந்து நான் நிரந்தரமாக நீக்கப்பட நான் கட்சிக்குச் செய்த துரோகம் குறித்து எந்தக் குற்றச்சாட்டும் எனக்கு வழங்கப்படவில்லை. நான் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படவில்லை. இது குறித்து எந்த விசாரணைக்கும் நான் அழைக்கப்படவில்லை. இப்படிக் கட்சியின் எந்தப் படிநிலைகளையும் எடப்பாடி பழனிசாமி பின்பற்றாமல் என்னை நினைத்த மாத்திரத்தில் கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக அறிகிறேன். எனவே என் கருத்தை அறியாமல் சபாநாயகர் எந்த முடிவையும் அறிவிக்கவேண்டாம்” என்று குறிப்பிட்டிருந்தார். சபாநாயகர் இரவீந்திரநாத்தை அதிமுகவிலிருந்து நீக்கவில்லை.
“நான் அதிமுக உறுப்பினராகவே நாடாளுமன்ற மக்களவையில் இருக்கிறேன்” என்று கடந்த 29.07.2022ஆம் நாள் தில்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது இரவீந்திரநாத் கூறியுள்ளதன் மூலம் மோடியின் ஆதரவு பன்னீர்செல்வத்திற்குக் காட்டப்பட்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது. சென்னையில் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்திற்கு அதிமுகவின் இருஅணிகளையும் அழைக்கப்பட்டதும் பன்னீர்செல்வத்திற்கு மோடி அரசின் ஆதரவு பச்சைக்கொடியாகவே அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்று 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கணிப்பை நடத்தி முடித்துள்ளது. அதில் பாஜக 362 இடங்களைப் பெற்று மிகப்பெரும் வெற்றியைப் பெறும் என்ற முடிவை வெளியிட்டுள்ளது.
தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டும் பாஜக அதிக இடங்களை வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றும் ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பாஜக வெற்றி பெறும் அந்த ஒரு தொகுதி கன்னியாகுமரியாக இருக்கலாம் அல்லது கோவையாக இருக்கலாம். ஆனால் அதிமுகவின் இரு அணிகள் ஒரு இடத்தைக்கூடப் பிடிக்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
“திமுக கூட்டணியில் காங்கிரஸ் கடந்த தேர்தலின்போது 9 இடங்களில் வெற்றி பெற்றதுபோல் இப்போது வெற்றிபெறக்கூடாது என்ற எண்ணத்தில்தான் பாஜக திமுகவோடு நெருக்கும் காட்டுவது போல் நடிக்கின்றது. திமுக காங்கிரஸ் கட்சியை வரும் தேர்தலில் கழற்றிவிட வேண்டும் என்று பாஜக விரும்புகிறது” என அரசியல் ஆய்வாளர் இரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில், தமிழ் மாநிலக் காங்கிரஸ், தேமுதிக, புதிய தமிழகம், குடியரசு கட்சி, பாஜக ஆதரவு முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை இணைக்கத் தமிழ்நாடு பாஜக முயற்சிகளை எடுத்து வருகிறது.
பாஜக கூட்டணியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘நாம் தமிழர்’ கட்சி இணைய உள்ளது என்ற செய்தி அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது. காரணம், இதுவரை தனித்துப் போட்டி என்று முழங்கி வந்த சீமான், வெற்றி இல்லாமல் வாக்கு வங்கியை உயர்த்தாமல் அரசியல் செய்யமுடியாது என்ற பேருண்மையை விளங்கிக் கொண்டிருக்கிறார் என்று ‘நாம் தமிழர்’ கட்சி வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுகவைத் தோற்கடிக்கவேண்டும், திமுகவை அப்புறப்படுத்தவேண்டும் என்று அண்ணன் சீமான் விரும்புகிறார். நோக்கம் நல்ல நோக்கம்தான். ஆனால் தனிமனிதச் சீமானால் அது முடியாது. தேசியக் கட்சியான பாஜகவின் துணையால்தான் சீமான் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்” என்று நேரடியாகவே கூறி, பாஜக கூட்டணிக்குச் சீமானை அழைத்துள்ளார்.
சீமான் இதற்கு இதுவரை நேரடியாகப் பதில் சொல்லாமல், “பாஜகவினர் அவர்கள் எண்ணத்தை, ஆசையைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதில் என்ன தவறு உள்ளது? இதுவரை ‘நாம் தமிழர்’ கட்சி தனித்து நிற்பது என்ற முடிவில் மாற்றம் இல்லை. காலம் சரியான பதிலைச் சொல்லும்” என்று சீமான் கூறியுள்ளார். அண்மையில், உலகச் செஸ் போட்டியைத் தொடக்கி வைக்கச் சென்னை வந்திருந்த மோடியின் படங்கள், போஸ்டர் மற்றும் பதாகைகளில் இடம் பெறவில்லை என்பதற்குச் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துப் பேசியுள்ளார்.
“ஐயா மோடியை விழாவுக்கு அழைப்பு கொடுத்து வரவழைத்தது திமுக. விழா பதாகைகளில் ஏன் ஐயா மோடியின் படம் இடம் பெறவில்லை. ஐயா மோடி யை அழைத்து அவமானப்படுத்த வேண்டுமா? கொரோனா தொற்றால் விமானநிலையம் சென்று முதல்வர் வரவேற்கவில்லை. சரி. விழா மேடையில் ஐயா மோடியின் படம் வைக்கவேண்டாமா? பிரதமரை அழைத்து அவருக்குரிய சிறப்பினைச் செய்யத் திமுகவிற்குப் பண்பாடு தெரியவில்லை. இந்த மண்ணின், இந்த நிலத்தின் பிள்ளைகள் நாங்கள். தமிழர்களுக்குரிய பண்பாடு கடை பிடிக்கப்படவில்லை என்பது இந்த நிலத்தின் பிள்ளைகளுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் வேதனையைத் தருகின்ற செயலாக உள்ளது. அடுத்தமுறை ஐயா மோடி தமிழகம் வரும்போது நானே நேரில் சென்று வரவேற்பேன்” என்று சீமான் கர்ஜித்துள்ளார். சீமானின் ஆவேசத்திற்குத் திமுக பதில் எதுவும் அளிக்காமல் மௌனமாகவே இருக்கிறது.
சீமான் மோடியின் பக்கம் சாய்வதற்கு ஆரம்பப் புள்ளியைப் போட்டுவிட்டார் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சீமானை வைத்துப் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் அல்லது இரண்டு இடத்தில் வெற்றி பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம் நிறைவேறுமா? என்பது பெரிய கேள்வி தான். என்றாலும் பாஜக தலைமையில் கூட்டணி அமையப் போவது உறுதி. சீமானின் ‘நாம் தமிழர்’ பாஜக கூட்டணியில் இணையப்போவதும் உறுதியாகி உள்ளது என்பதுதான் தற்போதைய அரசியல் களநிலவரம்.