நம்ம ஸ்கூல் திட்டம் மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது நல்ல திட்டம்தானே! எனத் தோன்றும்……
நம்ம ஸ்கூல்!
சமீபத்தில் ‘நம்ம ஸ்கூல்’ எனும் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கிவைத்தது.
மறுநாள், பலரும் இந்தத் திட்டம் குறித்துப் பேசவில்லை. இதில் இடம்பெற்றுள் ‘ஸ்கூல்’ ஆங்கில வார்த்தை! என்பதில்தான் கவனம் செலுத்தினார்கள்.
இந்தத் திட்டத்தின்படி அரசு பள்ளிகளை, தனியார், மற்றும் தனியார் நிறுவனங்கள் தத்தெடுத்துக் கொள்ளலாம். அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டுமான வசதிகளைச் செய்து தரலாம்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது நல்ல திட்டம்தானே! எனத் தோன்றும். இதற்கு முன்பும் அரசுப் பள்ளிகளுக்குச் சமூகப் பங்களிப்புகள் இருந்தே வந்திருக்கிறது. ஆனால் இம்முறை, அது சமூகப் பங்களிப்பு என்றில்லாமல் தனியார் பங்களிப்பாக மாறியிருக்கிறது.
முன்பெல்லாம் அரசுப்பள்ளி ஒன்றுக்குத் தனியார் நிறுவனங்கள் உதவுவதாக இருந்தால், அவை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மூலம், பொறியாளர் ஒருவரிடம் கொட்டேஷன் பெற்று, அதற்குரிய நிதியைத் தலைமையாசிரியர் மற்றும் SMC தலைவர் இருவரது ஜாயின்ட் அக்கௌண்ட்டுக்கு அனுப்பிவைப்பார்கள்.
தலைமையாசிரியர் அந்நிதியைக் கட்டுமான நிறுவனத்துக்கு அனுப்பிவைப்பார்.
ஆனால் நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷனில் நேரடியாகத் தனியார் நிறுவனமே கட்டிடம் கட்டும் வேலையில் ஈடுபடும்.
இது அரசு பள்ளிகளைப் படிப்படியாகத் தனியார் மயமாக்குவதற்கான ஒத்திகை. கல்வி, மருத்துவம், போன்ற சேவைத்துறைகளில் முதலீடு செய்வதை அரசு செலவினமாகக் கருதுவதையே இத்திட்டம் வெளிப்படுத்துகிறது.
ஒரு பக்கம் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறும் தமிழக அரசு, அதன் செயல்திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இன்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறையில் நடைபெற்றுவரும் எண்ணும் எழுத்தும், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன் போன்ற பல திட்டங்கள் ‘தேசியக்கல்விக் கொள்கை’ யின் அடிப்படையில் அமைந்தவையே.
வகுப்பறைகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. குறைந்த கூலிக்கு ஆசிரியர்களை நியமிக்கலாமா? யோசிக்கிறது அரசு. இந்நிலையில் பள்ளிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதைத் தனியார்களிடம் தள்ளிவிட்டுத் தன் பொறுப்பை அரசு தட்டிக் கழிக்கக்கூடாது ! என்பதே நமது விருப்பம்.
– கரிகாலன், ஆசிரியர் LMC மேல்நிலைப்பள்ளி, சீர்காழி
(முகநூலில்)