உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு நந்தவனம் அறக்கட்டளை சார்பில் தமிழ்மாமணி விருது வழங்கும் விழா !
நந்தவனம் அறக்கட்டளை சார்பில் தமிழ்மாமணி விருது “தாய் மொழி காக்க ஒன்றிணைவோம்” – பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் உரை
உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் நந்தவனம் அறக்கட்டளை சார்பில் 23-2-2025 ஆம் நாள் தமிழுக்கு ஆக்கப் பணிகள் செய்தவர்களுக்கு தமிழ்மாமணி விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் என்.நல்லுசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். எனர்ஜி ஃபுட் நிறுவனர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார். முகம்மது அபுபக்கர் சித்திக் வாழ்த்துரை வழங்கினார். திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் பணிநிறைவு பெற்ற பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் சிறப்புரையாற்றினார். நந்தவனம் அறக்கட்டளையின் தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் வரவேற்புரையாற்றினார்.
பழனி சோ. முத்துமாணிக்கம், ஆ. செல்லப் பெருமாள் (புதுச்சேரி) சி. இராமு (தேனி) கவிஞர் ஆதிரன் (புதுச்சேரி) கவிநிலா மோகன் (தஞ்சாவூர்) இரஜகை நிலவன் (மும்பை) திருக்குறள் நாவை சிவம் (மணப்பாறை) காசி. சு. நாகலிங்கம் (தேவக்கோட்டை) பால இந்திரகுருக்கள் (ஆஸ்திரேலியா) கோமதி சங்கரன் (மலேசியா) கு. ஞானசேகரன் (தஞ்சாவூர் ஆகியோருக்கு தமிழ் மாமணி விருது வழங்கப்பட்டது, சமூக சேவகர் சங்கர் மற்றும் அப்தூல் ரகுமான் ஆகியோருக்கு வெற்றித் தமிழன் விருதுகளைச் சிறப்பு விருந்தினர் முன்னாள் அமைச்சர் என்.நல்லுசாமி விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இவ் விழாவில் கலந்து உரையாற்றிய பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்,“மொழி என்பது நம்முடைய கருத்தை ஏந்தி செல்லும் வாகனம் அல்லது கருவி என்று பொதுப்படையாக் கூறிவருகிறார்கள். மொழி என்பதுதான் மனித வாழ்வியலுக்குத் தேவையான மரபுகளையும், பண்பாடுகளையும் உருவாக்கித் தருகிறது. உலகில் தமிழ் உட்பட 7 செம்மொழிகள் உள்ளன. அதில் தமிழ் மட்டும்தான் 16 வகையான பெருமைகளைக் கொண்டு ‘உயர்தனிச் செம்மொழியாக’ திகழ்ந்து வருகின்றது. தமிழ் இந்தியாவின் ஆட்சிமொழியாக இல்லை. ஆனால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஆட்சிமொழியாக உள்ளது. பல நாடுகளில் அலுவல் மொழியாகவும் உள்ளது. இந்தப் பெருமை உலகில் தமிழ் தவிர்த்து வேறு எந்த மொழிக்கும் இல்லை என்பது சிறப்பான செய்தியாகும்.
உலகத்தில் ஏறத்தாழ 6500 மொழிகள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் 2000த்திற்கும் உட்பட்ட மொழிகளே வரிவடிவம் பெற்று எழுத்து மொழிகளாக உள்ளன. உலகின் செம்மொழி என்ற பெருமையுடைய பிரன்சுமொழியின் வரிவடிம் ஆங்கிலம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தமிழ்மொழிக்கு தொன்மை, பழமை, இலக்கணம், பிற மொழிகளிடம் கடன்பெறாத சொல் வளம் போன்ற கூறுகள் உள்ளன.
உலக மொழிகளில் வரிவடிவம் பெற்ற மொழிகளுக்கு எழுத்து இலக்கணம், சொல்லுக்கான இலக்கணம் உள்ளது. தமிழ்மொழி மட்டும்தான் கூடுதலாக பொருள் என்னும் வாழ்வியலுக்கு இலக்கணம் சொல்லக்கூடிய தகுதியுடைய மொழியாக உள்ளது. உலகத் தாய்மொழி நாளில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் தாய்மொழியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம்தான் உலக மொழிகளின் தாய்மொழியான தமிழ்மொழியைக் கொண்டாடி வருகின்றோம்.
அமெரிக்காவில் தற்போது 95 அகவை நிரம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் மொழியியல் அறிஞர் நோம் சோம்ஸ்கிக்கு உலகில் உள்ள இலக்கண, இலக்கிய வளம் கொண்ட 44 மொழிகள் எழுத, படிக்க, பேசத் தெரியும். 90களில் கல்கத்தாவில் ஒரு பல்கலைக்கழகம் சிறப்பு முனைவர் பட்டம் வழங்கியது. அந்த விழாவில் பேசியசோம்ஸ்கி, உலக மொழிகள் 44 மொழிகளை ஆராய்ந்து பார்த்த நான், உலக மொழிகள் அனைத்திருக்கும் வேர் சொற்களைக் கொடுத்த மொழியாக இருமொழிகள் மட்டுமே உள்ளன.
ஒன்று ஆப்பிரிக்காவில் பேசப்படுகின்ற சுவாஹிலி மொழி. மற்றொன்று இந்தியாவில் தமிழர்களால் பேசப்படும் தமிழ்மொழியாகும். உலக மொழிகளுக்குத் தாய்மொழியாக இந்த இருமொழிகளும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். தமிழர்கள் இதைக் கூறினால் இவர்களுக்கு மொழி வெறி உள்ளது என்று நம்மைக் குறைத்து மதிப்பீடுவார்கள்.
பீகார் சட்டமன்றத்தில் லாலு முதல்வராக இருக்கும்போது, பீகாரின் தாய்மொழியான பேஜ்புரிக்கு அதிக நிதியை ஒதுக்கினார். மைதிலி மொழி பேசக்கூடிய பிரமாண சட்டமன்ற உறுப்பினர் எழுந்து நீஷபாசையான பேஜ்புரிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களின் தேவபாஷையான மைதிலி மொழிக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறியபோது, லாலு எழுந்து உள்ள மொழி தேவபாஷை என்றால் எங்கள் தாய்மொழி பேஜ்புரி ‘ஜனபாஷா’ என்று பெருமையோடு குறிப்பிட்டார். தாய்மொழியை இழிவு செய்யும் போக்கும் இங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 1947 ஆகஸ்ட்டு 14ஆம் பாக்கிஸ்தான் விடுதலை அடைந்தபோது, அதன் அதிபர் முகமதுஅலி ஜின்னா உருது ஆட்சி மொழி என்றார்.
கிழக்கு பாக்கிஸ்தானில் வங்க மொழி ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று ஒரு இளைஞன் தன் குரலை உயர்த்திக் கூறினான். 1952ஆம் ஆண்டு பிப்.21ஆம் நாள் வங்க மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து பேரணியாக சென்றபோது துப்பாக்கிச் சூட்டில் 4 மாணவர்கள் இறந்துபோனார்கள்.
இதனைத் தொடர்ந்து 1956ஆம் ஆண்டுகளில் கிழக்கு பாக்கிஸ்தானில் வங்க மொழி ஆட்சி மொழி என்று அறிவிக்கப்பட்டது. என்றாலும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று 1971ஆம் ஆண்டு மொழிக்காக வங்கதேசம் உருவாக்கப்பட்டது. போராட்டத்தை முன்னெடுத்த முஜ்புர் ரகுமான் முதல் அதிபரானார். மாணவர்கள் இறந்த பிப்.21ஆம் நாள்தான் தற்போது உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்றைக்கு நந்தவனம் அறக்கட்டளை சார்பில் நாவை சிவம் உள்ளிட்ட பலர் இங்கே தமிழ்மாமணி என்று விருது பெற்றமைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது நம் தாய்மொழியான தமிழ்மொழியை அழிக்கும் எண்ணத்தில் மூன்றாவது மொழியைத் திணிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டிவருகின்றது. தமிழ் மொழிக்கு வளம் சேர்க்க, நலம் சேர்க்க, பெருமை சேர்க்க, நாம் அனைவரும் ஓராணியில் திரளவேண்டும். ஒரு இனத்தை அழிக்கவேண்டுமா? அதன் மொழியை அழித்தால் போதும் என்ற சீன அறிஞர் கன்பூசியசின் பொன்மொழியை நினைவில் கொண்டு, நம் இனம் அழியாமல் காக்கப்பட, மொழியைக் காக்கவேண்டும் என்ற சிந்தனையை நெஞ்சில் ஏந்துவோம்” என்று உரையை நிறைவு செய்தார்.
கவிஞர் ஜனனி அந்தோனி ராஜ் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார் இனிய நந்தவனம் மக்கள் தொடர்பாளர் பா.தனபால் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
— ஆதவன்.