துரை வைகோவை ஆதரிக்கும் நாஞ்சில் சம்பத் ! மீண்டும் மதிமுக ?
மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ கடந்த வாரம் நடைபெற்ற மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவருக்கு மதிமுகவில் பொறுப்பு தரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அன்று நடைபெற்ற கூட்டத்திலேயே கட்சியின் தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவை அறிவித்தார் வைகோ.
இந்த நிலையில் மதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலர் துரை வைகோ அரசியலில் திணிக்கப்பட்டு இருக்கிறார். மதிமுகவில் வாரிசு அரசியல் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் மதிமுகவின் சொத்துக்களை தக்கவைப்பதற்காக துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்கப் பட்டிருக்கிறது என்று பல்வேறு விமர்சனங்களை மதிமுக நிர்வாகிகள் முன்வைத்தனர். ஒரு சிலர் கட்சியிலிருந்து விலகிச் சென்றனர்.
இந்த நிலையில் தற்போது மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், வைகோவின் வலது கரமாகவும் இருந்து, வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து சென்று, பிறகு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து ஜெயலலிதா மறைவிற்கு பிறகு திமுக கூட்டங்களில் பங்கேற்று வந்த நாஞ்சில் சம்பத் தற்போது துரை வைகோவை ஆதரித்து பேசி வருகிறார்.
இவ்வாறு வைகோ திமுகவிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் வாரிசு அரசியல் அல்ல, வாரிசு அரசியலால் திமுகவிலிருந்து வைகோ விலகினார் என்று சொல்வது நியாயமற்ற கருத்து. அதேநேரம் பூகம்பத்தை விட வேகமாக செயல்படக்கூடிய இயக்கம் மதிமுக. இதற்கு துரை வைகோ தலைமை ஏற்று இருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியிருக்கிறார்.
வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற நாஞ்சில் சம்பத், துரை வைகோவின் வருகைக்கு பிறகு மதிமுகவில் மீண்டும் இணைய உள்ளாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.