திருச்சி மாநகரில் 222 ரவுடிகள் கைது -ரவுடிகளுக்கு கமிஷனர் எச்சரிக்கை !
திருச்சி மாநகர பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகளின் சரித்திர பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு திருச்சி மாநகரில் உள்ள ரவுடிகள், பழிவாங்கும் எண்ணத்தில் உள்ள ரவுடிகள், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய எண்ணம் கொண்டவர்கள் மற்றும் செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு 222 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர். மேலும் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த ஒரு வருடத்தில் திருச்சி மாநகரில் 42 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்கள் என்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கூறினார்.
மேலும் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.