அதிமுக இணையுமா? உடையுமா? – இரட்டை இலை யாருக்கு !

ஆதவன்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

அதிமுக இணையுமா? உடையுமா? – பரபரப்பு தகவல்கள்

 

அதிமுக இணையுமா? உடையுமா?   பெங்களூரு சிறை வாழ்க்கை முடிந்து, தமிழகம் திரும்பிய ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலா அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ‘அரசியலிலிருந்து விலகுகிறேன்’ என்று பரபரப்பான அறிக்கையைக் கொடுத்துவிட்டு, அரசியலில் ஒதுங்கியே இருந்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. இது மோசமான தோல்வி என்று கருதிவிடமுடியாது 66 இடங்களைப் பெற்று கௌரவமான தோல்வியைத்தான் அதிமுக பெற்றது. இந்தத் தோல்விக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றுக் கொண்டனர். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமியும், எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

 

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

“கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவேண்டும் – தொலைபேசியில் தொண்டர்கள்”

 

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்வியைத் தாங்கிக் கொள்ளமுடியாத அதிமுகவினரும் தினகரன் தலைமையில் இயங்கி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் தொலைபேசி வழியாக,“அம்மா… நீங்கள்தான் கழகத்தை வழி நடத்தவேண்டும். புரட்சித்தலைவி ஏற்படுத்திய ஆட்சியை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் சேர்ந்து திமுகவிடம் ஒப்படைத்து விட்டனர். நீங்கள்தான் அம்மா கழகத்தைக் காப்பாற்றவேண்டும். அரசியலில் ஈடுபட்டு, மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சியை ஏற்படுத்தவேண்டும்” என்ற ரீதியில் பல உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட வண்ணம் இருந்தது.

3

இந்த உரையாடல்களை ஜெயா தொலைக்காட்சியின் செய்தி சேனலிலும் ஒளிபரப்பப்பட்டது. தொலைபேசி உரையாடலுக்குப் பதில் அளித்து பேசிய வி.கே.சசிகலா,‘நான் விரைவில் அரசியலுக்கு வருவேன். இப்போது ஏற்பட்டுள்ள எல்லா தோல்விகளையும் சரி செய்வேன். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். நம் பொது எதிரி திமுக என்பதை மறந்துவிடக்கூடாது. கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவேன். யாரும் பயப்பட வேண்டாம்” என்று அருளாசி வழங்கி ஆறுதல் வழங்கினார்.

 

“ஊரக உள்ளாட்சித் தேர்தல் தோல்வி – அரசியலில் சசிகலா”

 

4

அண்மையில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் 12.10.2021ஆம் நாள் வெளியாயின. அதிமுக படுதோல்வியைச் சந்தித்து. அதிமுகவினரே நிலைகுலைந்து போயினர். செய்வது அறியாது திகைத்து நின்றனர். இந்தச் சூழ்நிலையில் வி.கே.சசிகலா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது என்னவெனில்,“16.10.2021ஆம் நாள் காலை 10.00 மணிக்கு நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்திற்குச் செல்கிறேன். மலர் வளையம் வைத்து வணங்குகிறேன். தொடர்ந்து மாநிலம் முழுவதும் தொண்டர்களைச் சந்திக்கிறேன்” என்பதே. 16ஆம் தேதி காலை 10.00 மணியளவில் வி.கே.சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் என்று பெயர் பலகை பொருத்தப்பட்ட காரில் ஜெயலலிதா நினைவிடம் சென்றார்.

அங்கே வி.கே.சசிகலாவிற்குப் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடியிருந்த அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள்.‘தியாகத் தலைவி சின்னம்மா வாழ்க’ என்றும் ஒருபடி மேலே போய் ‘புரட்சிதாய் தியாகத் தலைவி சின்னம்மா வாழ்க’ என்று முழக்கமிட்டனர். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து கண்மூடி பிராத்தனை செய்துவிட்டு சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

“அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்”

 

செய்தியாளர் சந்திப்பின்போது, “மீண்டும் புரட்சித்தலைவியின் ஆட்சி அமைய மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்களைச் சந்திக்கப் போகிறேன். நாம் ஒற்றுமையாக இருந்தால் எந்த சக்தியாலும் நம்மை அசைக்கமுடியாது. என்னுடைய தலைமையில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்” என்று கூறினார். மேலும், ‘என் மனதில் இருந்த பாரத்தை அம்மாவின் நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன். கட்சியை புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவரும் காப்பாற்றுவார்கள்” என்றும் கூறினார். ‘சசிகலா அதிமுக கொடியோடு பொதுச்செயலாளர் பெயர் பலகையோடு சென்றது சட்டத்தை மீறிய செயல். நீதிமன்றத்தில் சசிகலா நான்தான் பொதுச்செயலாளர் என்று தொடுத்துள்ள சிவில் வழக்கில் நீதிமன்றம் எந்தவொரு இடைக்கால உத்தரவையோ, தீர்ப்பையோ வழங்காத நிலையில், இப்படி தன்னைத்தானே பொதுச்செயலாளர் என்று அறிவித்துக் கொள்வது உலகமகா நடிப்பு என்றும், இதற்கு ஆஸ்கார் விருதுகூட கிடைக்கும்.

ஆனால் அதிமுகவில் ஆதரவு கிடைக்காது’ என்று கடுமையாக முன்னாள் அமைச்சர் அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் அண்மையில் பேசும்போது, ‘பொதுச்செயலாளர் என்று அறிவித்துக்கொண்டால் பொதுச்செயலாளராகிவிடுவரா? அவர் அதிமுகவிலே இல்லை. அவர் எப்படி கட்சியில் உரிமைக் கொண்டாட முடியும். சூரியனைப் பார்த்து ஏதோ ஒன்று குலைத்தது என்று சொல்வார்கள். அதன் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. அதுபோலத்தான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதிமுகவில் அவருக்கு இடம் கிடையாது” என்று கண்டிப்பான குரலில் பேசினார்.

 

“அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவார் – ஓ.பன்னீர்செல்வம்”

25.10.2021ஆம் நாள் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,‘அறிஞர் அண்ணா நமக்குக் கற்றுத்தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றுடன்தான் ஒருவரை விமர்சிக்கவேண்டும். தரம்தாழ்ந்து யாரையும் விமர்சிக்கக்கூடாது” என்று எடப்பாடி பழனிசாமியின் பெயர் சொல்லாமல் கண்டித்து பேசினார். மேலும், “சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து, கழகத்தின் முன்னணியினர் கூடி முடிவு செய்வார்கள்” என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். பன்னீர் செல்வம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள தன் இல்லத்திலிருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது,“சசிகலாவோடு யாரும் தொடர்புகொள்ளக்கூடாது என்றும் தொடர்பு வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. சசிகலாவைக் கட்சியில் இணைப்பது குறித்து கழக முன்னணியினர் கூடி முடிவெடுப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியானது அல்ல. காரணம், 2017இல் ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியது சசிகலாவிற்கு எதிராகத்தான். மேலும், பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைய விதித்த விதிகளில் ஒன்று, ‘சசிகலாவையோ சசிகலா குடும்பத்தையோ கட்சியில் இணைக்கக்கூடாது’ என்பதுதான். இப்போது சசிகலாவைக் கட்சியில் இணைப்பது குறித்து பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார். கட்சி முன்னணியினர் சசிகலாவைக் கட்சியில் சேர்க்க மாட்டார்கள்” என்று பேசினார்.

“அதிமுக தென்மாவட்ட சாதிக் கட்சியாகச் சுருக்கப்படக்கூடாது – அதிமுக முனுசாமி”

 

இதனைத் தொடர்ந்து, செய்தி ஊடகங்களில் பேசிய அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் முனுசாமி, “சசிகலா கட்சியில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. சசிகலாவைக் கட்சியில் இணைத்தால் அது தென்மாவட்டத்தில் உள்ள ஒரு சாதி கட்சியாக அதிமுக சுருங்கிப்போய்விடும். பன்னீர்செல்வம் மதுரையில் பேசும்போது அவருடன் இருந்த உதயக்குமார், செல்லூர் இராஜூ, இராஜன் செல்லப்பா போன்றவர்கள் ஓ.பன்னீர்செல்வம் சார்ந்துள்ள பிரன்மலை கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்கள். சசிகலா கட்சியில் இணைக்கப்பட்டு, கட்சி ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் சுருக்கப்பட்டால் நான் இறந்துவிட்டேன் என்று நினைத்துக்கொள்ளுங்கள்” என்று காட்டமாகவே பேசினார்.

இதற்கு ஊடகங்களில் பதில் அளித்து பேசிய அமமுகவைச் சார்ந்த வெண்முகில்,‘அதிமுக தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் உள்ள கவுண்டர் கட்சியாக சுருங்கிப் போயிருப்பது மட்டும் கட்சிக்கு நல்லதா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், ‘புரட்சிதாய் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களை பழனிச்சாமி, ஜெயக்குமார், முனுசாமி, சி.வி.சண்முகம் போன்றவர்கள்தான் எதிர்ப்பார்கள். அதிமுகவில் உள்ள அனைவரும் சசிகலா மீண்டும் கட்சியில் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்றே விரும்புகிறார்கள்” என்று கூறினார்.

 

“மாநகராட்சித் தேர்தல் தோல்வியைத் தவிர்க்கவே அதிமுகவில் சசிகலா”

 

சசிகலா அதிமுகவில் இல்லை. சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை. பொதுச்செயலாளர் என்று சசிகலா தொடுத்த வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கொடுத்துள்ள பிரமாண பத்திர வாக்குமூலத்தில்,‘அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறிக்கொள்ள அடிப்படை உரிமை சசிகலாவிற்குக் கிடையாது’ என்றே இருவரும் கூறியுள்ளனர். இந்நிலையில் ஏன் சசிகலா அதிமுகவில் சேர்க்கப்பட வேண்டும் என்ற பிரச்சனை எழுகிறது? என்ற கேள்விக்கு எளிதான பதில்- இதுதான்.“வரும் டிசம்பர் அல்லது 2022 ஜனவரியில் நகர உள்ளாட்சித் தேர்தல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நடக்க இருக்கின்றது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்வி பெரும் தோல்விதான். நகர உள்ளாட்சித் தேர்தல் என்பது அதிமுகவுக்கு எப்போதும் சாதகமாக இருந்ததில்லை. நகர உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்திக்கும். கட்சி பெரும் சரிவைச் சந்திக்க நேரும் என்பதை உணர்ந்தே, அதிமுகவுக்கு ஒரு வசீகர ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் முயற்சியை ஓ.பன்னீர்செல்வம் எடுத்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

“அதிமுக உடையும் – இரட்டை இலை பழனிசாமி வசமாகும்”

 

சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் முயற்சியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். இதனால் கட்சி உடையும் ஆபத்தும் உள்ளது என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. அப்படி கட்சி உடைந்தால், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடும், மத்தியில் உள்ள பாஜகவின் ஆதரவோடும் பழனிச்சாமி இரட்டை இலை சின்னத்தைத் தக்கவைத்துக் கொள்ளுவார். அந்த நிலையில் அதிமுகவில் பழனிச்சாமி என்ற ஒற்றைத் தலைமை ஏற்படவும் வாய்ப்புள்ளது என்ற கருத்துகளும் தெரிவிக்கப்படுகின்றன. நகர உள்ளாட்சித் தேர்தல் நெருங்க…. நெருங்க…. அதிமுக ஒன்றுசேருமா? உடையுமா? என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். அதுவரை பொறுத்திருப்போம்.

ஆதவன்

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.