நாதக தம்பியின் அடச்சீ ரக அவதூறு … வருண்குமார் ஐ.பி.எஸ். வாட்ஸ் ”ஆப்பில்” வைத்த நிலைத்தகவல் !
”இரும்பு பிடிச்சவன் கையும் சிரங்கு பிடிச்சவன் கையும் சும்மா இருக்காது” என்பார்கள். அந்த கதையாக, ஒரு பக்கம் அண்ணன் சீமான் பெரியாரை பிடித்துக் கொண்டு ஓட, அவரது தம்பிகள் இணையத்தில் எதை ஒன்றையாவது கிளப்பி விடுவதுமாக இருக்கிறார்கள்.
அவதூறு பேச்சுக்காக, நாதகவின் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அப்போதைய திருச்சி எஸ்.பி.யும் தற்போது திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வருபவருமான ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாருக்கு எதிராக தனிநபர் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டிருந்தார், நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அண்ணனின் தடம் தொடரும் தம்பிகளும் தங்கள் பங்குக்கு, ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

அது அவர்களது குடும்பத்தை பற்றிய தரம் தாழ்ந்த விமர்சனமாகவும், மார்ஃபிங் படங்களை வெளியிடும் எல்லைக்கும் போயிருந்தது. யார், யார் எங்கிருந்து? எந்த ஐ.டி. களை பயன்படுத்தி தனக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் வக்கிரத்தையும் வன்மத்தையும் பரப்பி வருகிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளித்திருந்தார், வருண்குமார் ஐ.பி.எஸ்.
திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில், சீமானுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்திருந்தார். வழக்கு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, நாதகவினர் வழக்கம்போல வேலையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில்தான், ஐ.பி.எஸ். அதிகாரியை சீண்டும் விதமாக அவரும் அவரது மனைவியும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது மத்திய அரசுக்கு பணிக்கு மாறுதலாகி சென்றவருமான வந்திதாபாண்டேவை விவாகரத்து செய்வதாக அவரே அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாக, போலியான பதிவு ஒன்றை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அண்ணன் சீமானின் தம்பி ஒருவர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
”இந்தியனுமில்லை . இலங்கையனுமில்லை ; மலேசியனுமில்லை ; ஆரிய அடிவருடி திராவிடனுமில்லை ; இல்லாத இந்துவுமில்லை. இங்கு நீயும் நானும் தமிழன்” என்பதாக தன்னைப்பற்றிய சுய அறிமுகமாக கொண்ட”SanJeevan1721” என்பவரது எக்ஸ் தள கணக்கிலிருந்து இந்த தகவல் பகிரப்பட்டிருக்கிறது.
இந்த பின்னணியில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ”திரள்நிதி திருடன் எந்த அளவிற்கு சென்றுவிட்டான் என்று பாருங்கள் மக்களே.. பார்க்கவே பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி. ஒரு பாடல் வரி, “நான் உனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்.. சேர்ந்ததே நம் ஜீவனே” என்பதாக, ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் தனது வாட்சப் நிலைத்தகவலில் பதிவிட்டு வழக்கம்போல அதிரடி கூட்டியிருக்கிறார்.
— புளியம் விளாறு.