நீட் தேர்வு ரத்து..
நஷ்டத்திற்கு என்ன விலை?
ஒரு நிமிடம் தாமதமாக வந்ததால் அனுமதியில்லை..
உள்ளாடைகள் மீது சந்தேகம்
தாலியை கூட விடாமல் சோதனை…
என்றெல்லாம் ஏகத்துக்கும் வருடம் தோறும் பில்டப் விடப்படும் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு, ஒரே உத்தரவில் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது..
எவ்வளவு பேரின் உழைப்பு, கனவு? ஒரே நொடியில் நாசம்.
கல்வியை போதிக்கும் வியாபாரத்தை விட, பயிற்சி வகுப்புகள் வியாபாரம் பல மடங்கு அள்ளித் தரும் அட்சய பாத்திரம்.
அதனால் தான் இந்த பயிற்சி வகுப்பு வியாபாரத்தை நோக்கி பலி ஆடுகள் போல இந்தியா முழுவதும் மாணவர்களும் பெற்றோர்களும் விரட்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கொடூரத்துக்கு இடையில் உச்சகட்ட கொடூர குரூப் ஒன்று சர்வ சாதாரணமாக இந்த வியாபாரத்திலும் புகுந்து தூள் கிளப்புகிறது.
குறிப்பிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் மாநிலத்தில் உள்ள பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என்கிறார்கள்.
அதன் பின்னணியில் இருக்கும் ஒரே விஷயம், வினாத்தாளை முன்கூட்டியே லீக் செய்வதுதான்.
இந்த முறை வினாத்தாளை ஓப்பனாகவே மார்க்கெட்டில் விற்பனை செய்திருக்கிறார்கள் என்கிற விஷயம் தான், மோசடி கும்பல் எந்த அளவுக்கு துணிச்சல் பெற்று இருக்கிறது என்பதை அம்பலத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
ஒரு பக்கம் மோசடி கும்பல்கள் சம்பாதிக்க, இன்னொரு பக்கம் எக்கச்சக்கமாக செலவு செய்து அரும்பாடுபட்டு படித்து தேர்வு எழுதிய மாணவ மாணவியர் நாடு முழுவதும் ஏமாற்றப்பட்டு இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கூட கடந்த பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகள் மாணவ மாணவியர் எழுதிக் கொண்டிருக்கும் போதே ரத்து செய்யப்பட்டது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் மறுதேர்வு நடத்தப்படும் என்று ஒரு சாதாரண அறிவிப்பை வெளியிடுவார்கள். அதிகபட்சமாக தவறிழைத்த அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பார்கள்.
ஆனால் எக்காரணம் கொண்டும் மாணவ மாணவியருக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு, மன உளைச்சல், கால விரயம் என எதையுமே கவலைப்பட மாட்டார்கள்.
ஒரு தேர்வை ஒருத்தர் பணம் கட்டி எழுதும் போது அந்தத் தேர்வு ரத்தானால், மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டுமா வேண்டாமா?
தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மறுதேர்வுக்கு கட்டணம் வசூலிக்க படாது போன்ற காது குத்தல்கள் எல்லாம் அப்புறம்.
“நான் எழுதிய தேர்வு ரத்து. இப்போது அதற்கு என்ன நிவாரணம்?” என்பது தான் ஒரே கேள்வி.
எதற்கெல்லாமோ மக்களுக்கு அபராதம் விதிக்கும் அரசாங்கம், அதன் கடமையை சரிவர செய்யாத போது பாதிக்கப்பட்டோருக்கு அபராதத்தை கட்டுவது தானே நேர்மையான செயல்?
பாதிக்கப்பட்டோர் கூட்டாக சேர்ந்து அரசியலமைப்புச் சட்டம் 32 பிரிவின்கீழ் உகந்த பரிகாரம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடும் போது தான் விடிவு காலம் பிறக்கும் போல் இருக்கிறது.
— ஏழுமலை வெங்கடேசன், பத்திரிகையார்








Comments are closed, but trackbacks and pingbacks are open.