அஞ்சுவதற்கு ஒன்றும் இல்லை; துணிந்து நில் என்று உரக்கச் சொல்லும் “அஞ்சாமை”!
அஞ்சுவதற்கு ஒன்றும் இல்லை; துணிந்து நில் என்று உரக்கச் சொல்லும் “அஞ்சாமை”! இந்த ஆண்டு நடைபெற்ற “நீட்” யில் நடந்துள்ள முறைகேடுகள் பெரும் பணக்காரர்களையே பாதித்துள்ளதால் “NEET ன் புனிதத்தன்மையே பாதித்துவிட்டதாக” உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. “நீட்” டில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவது உண்மையல்ல. “நீட்” டே முறைகேடு தான்.
சூதாட்டத்தில் தனது ஒவ்வொரு உடைமையையும் இழந்து இறுதியாக தன் உயிரையே இழப்பது போல்; “நீட்” எனும் சூதாட்டத்தில் ஒரு குடும்பம் எப்படி தனது மொத்த சேமிப்பையும், சொத்தையும் இழந்து, கடன்காரராகி இறுதியாக குடும்பத் தலைவனையே பலிகொடுக்கிறது என்பதை மிகவும் கலை நயத்துடன் வெளிப்படுத்தும் படம்தான் “அஞ்சாமை”.
தயாரிப்பாளரான உளவியல் மருத்துவர் தொடங்கி, படத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும், “நீட்” ஏற்படுத்தும் வலியையும், விளைவுகளையும் உணர்ந்து, மிகப் பெரும் வணிகச் சூழ்ச்சியில் இருந்து குழந்தைகளை மீட்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மிகச் சிறந்த பங்களிப்பை செய்துள்ளனர்.
வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தும் “அஞ்சாமை” திரைப்படத்தை திரையரங்கில் அனைவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும். படத்தைப் பார்க்கும் போது, அதில் ஏதாவது ஒரு ஃப்ரேமாவது நமது வாழ்க்கை நிகழ்வுடன் தொடர்புடையதை உணரலாம்.
ஆயிரம் சோகமும், சிக்கல்களும் இருந்தாலும் கணவன் – மனைவி உறவில் அன்பை மட்டுமே பார்க்க முடிகிறது. இப்படி ஒரு கதை அமைப்பு நுகர்வோராக வாழும் இன்றைய சமூகத்தில் மிகப் பெரும் ஆச்சரியம் தான்.
நிகழ்வுகளை துணிச்சலுடன் சொல்லி இருக்கிறார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை.
எதை யார், எப்படி சொன்னாலும் “சூடு, சொரணை” எதுவும் இல்லாமல், அனைத்தையும் துடைத்தெரிந்துவிட்டு, பாதிப்பிற்குள்ளானவனையே குற்றவாளி ஆக்கும் ஆளும் வர்க்கம் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை. அதனால், இங்கே துணிச்சலுக்கு என்ன மதிப்பு?
நாம் அஞ்சுவதற்கு ஒன்றும் இல்லை என்று உரக்கச் சொல்லும் “அஞ்சாமை” திரைப்படத்தை அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும்.இத்தகையப் படத்தை எடுத்து வெளியிட்டதே பெரும் வெற்றி. தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
தோழமை அன்புடன்,
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.