எது தகுதி? NEET எழுப்பும் கேள்விகள் !
இந்தியாவில் சுமார் 64,000 அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் மற்றும் 65,000 தனியார் மருத்துவ கல்லூரி இடங்கள் என்பதாக, ஒட்டுமொத்தமாக 1.30 இலட்சம் மருத்துவ கல்லூரி இடங்கள் தான் உள்ளன.
இந்த இடங்களை பிடிப்பதற்காக, நாடு முழுவதும் சுமார் 22 இலட்சம் மாணவர்கள் NEET தேர்வை எழுதினார்கள். ஆனாலும், சுமார் 23 இலட்சம் மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தங்களை தயார் செய்தார்கள். இந்த 23 இலட்சம் பேரும் ஆளுக்கு சற்றேறக்குறைய 1.50 இலட்சம் கோச்சிங் சென்டர்களுக்கு பணம் கட்டி படித்திருக்கிறார்கள். இதன் வழியே, நாடு முழுவதும் உள்ள நீட் கோச்சிங் சென்டர்கள் கல்லா கட்டியது மட்டும் சுமார் 34500 ஆயிரம் கோடி.
வெறும் 1.30 இலட்சம் இடங்களுக்கு 11 இலட்சம் பேர் தகுதியானவர்கள் ஆனார்கள். இந்த 11 லட்சம் பேரில் 64000 பேர் மட்டுமே அரசு கல்லூரிகளில் இடம் பிடிப்பார்கள். எஞ்சியுள்ள 10.4 இலட்சம் மாணவர்களில் யாருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும்? அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கா? கண்டிப்பாக, இல்லை. அதிக பணத்தை யாரால் மருத்துவக் கல்விக்காக செலவழிக்கும் தகுதி இருக்கிறதோ, அவர்களுக்கே கிடைக்கும்.
1200 மதிப்பெண்களுக்கு 1146 எடுத்த மாணவியால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை. ஆனால், அதைவிட மிக, மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர முடிகிறது. அதற்கு NEET தேர்வு வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இங்கே எழும் இயல்பான கேள்விகள் இவைதான். 1.30 இலட்சம் மருத்துவ கல்லூரி இடங்களுக்கு, ஏன் 23 இலட்சம் பேர் இந்த NEET தேர்வு எழுத வேண்டும்? இதை ஏன் கட்டாயமாக்க வேண்டும்? 1.30 இலட்சம் இடங்களுக்கு 11.30 இலட்சம் பேர் தகுதி பெற்றவர்கள் என்று அறவிக்க ஒரு போட்டித்தேர்வு தேவையா?
இது தகுதித்தேர்வுதான் எனில், தகுதி பெற்ற 11.30 இலட்சம் பேரில் முதல் 1.30 இலட்சம் இடங்களை பிடித்த மாணவர்களுக்குத்தானே அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் ஒதுக்க வேண்டும். ஆனால், நீட் தேர்வுக்குப் பிறகும் நடப்பது என்ன? குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்தாலும், பெயருக்கு நீட் தேர்வு எழுதியிருந்தாலே போதும் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்பதுதானே? இதற்கு எதற்கு போட்டித்தேர்வு? இங்கே, எது தகுதி? நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களா? மருத்துவம் படிக்க விரும்பும் பெற்றோர்களால் எத்தனை இலட்சங்கள் செலவழிக்க முடியும் என்ற கேள்விக்கான விடையா? இங்கே எது தகுதி?
நீட் கோச்சிங் என்ற பெயரில் தனியார் கோச்சிங் நிறுவனங்கள் ஆண்டுதோறும் 34500 ஆயிரம் கோடி கல்லா கட்டுவதற்காகத்தான், நீட் தேர்வு நடத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுவதை எவராலும் மறுக்க முடியுமா, என்ன?
– அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.