பிறப்புக்கும், இறப்புக்கும், டோலி கட்டி தூக்கிச்செல்லப்படும் அவலம்: இதுவும் தமிழ்நாடு தான் ! …
நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் தார்ச்சாலையை இதுநாள் வரை கண்டிராத கிராமமும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறதென்பது எவ்வளவு ரணமானது?
பிறப்புக்கும், இறப்புக்கும், டோலி கட்டி தூக்கிச்செல்லப்படும் அவலம்: இந்த காலத்தில் இப்படியும் ஒரு கிராமம் ! திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தரை மட்டத்திலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் மலை உச்சியில் `நெக்னாமலை’ என்ற கிராமம் அமைந்திருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். மலையிலிருந்து மழைநீர் வழிந்தோடும் பாதையைத்தான் (கணவாய்) அந்த மக்கள் சாலையாக பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது இம்மலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அப்போது மண் சாலை அமைக்கப்பட்டது . ஆட்சி மாற்றத்திற்கு பின் திமுக அரசு தார்சாலை அமைப்பதற்கான நடவடிக்கையை தொடங்கியது. மத்திய அரசின் வனத்துறை சட்டங்களை பாஜக அரசு புதியதாக திருத்திய காரணத்தால் மலை கிராம சாலைகளுக்கு சாலை அமைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. இதனால் நெக்னாமலை சாலை வசதி பெற முடியாத சூழலில் உள்ளது.
இம்மலையில் உடல் நலம் குன்றியவர்கள் , கர்ப்பிணி பெண்கள் முதல் இறப்பவர்கள் வரை டோலி கட்டி தூக்கி கொண்டு செல்லும் அவல நிலை தொடர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் இம்மலை கிராமத்தை சேர்ந்த 78 முதியவர் முத்து என்பவர் உடல்நிலை சரியில்லாமல் வேலூரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மே 2 ஆம் தேதி மதியம் அவர் உயிரிழந்தார். அந்த முதியவரின் உடலை சொந்த ஊரான நெக்னாமலை அடிவாரம் வரை அமரர் ஊர்தியில் எடுத்து சென்று அங்கிருந்து, சடலத்தை டோலி கட்டி தூக்கி சென்றனர். இரண்டு பேர் மட்டுமே டோலியைத் தூக்க முடியும் என்பதால் உடன் வந்தவர்கள் சிறிது நேரம் மாற்றி மாற்றிச் சுமந்து சென்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முனுசாமி என்பவர், இறந்துபோக இரவில் உடலை பெற்று தீப்பந்தம் ஏற்றிக்கொண்டு, அந்த வெளிச்சத்தில் மூங்கில் கொம்பில் டோலி கட்டி சடலத்தைச் சுமந்துகொண்டு மலை மீது ஏறினர். மலை உச்சியைச் சென்றடைய நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டது.
இதே ஆண்டில் இம்மலையில் வசித்த ராஜக்கிளி என்ற கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடித்தபோது அப்போதும் டோலி கட்டிக்கொண்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்ற காட்சி வைரல் ஆகி நெஞ்சை பதற செய்தது . இதனை அறிந்து , சமீபத்தில் சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார். அரசாங்கமும் அரசியல்வாதிகளும் செய்யாததை செய்து காட்டிய சின்னத்திரை நடிகர் பாவலா என்ற தலைப்பில் அங்குசம் செய்தி வெளியிட்டது. தற்போது அந்த மண் சாலையில் கற்கள் பெயர்ந்து வருவதால் பாலாவின் ஆம்புலன்ஸ் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது என்பது வேதனை அளிக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் தார்ச்சாலையை இதுநாள் வரை கண்டிராத கிராமமும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறதென்பது எவ்வளவு ரணமானது?
– மணிகண்டன்.கா.