அப்பா கொடுத்த இடத்தில் கலெக்டர் ஆபீஸ் இருக்கு ! எங்களுக்கு கொடுத்த இடத்தை 15 வருசமா மீட்க முடியல … ! சசிகலா பெயரில் மிரட்டல் !
அப்பா கொடுத்த இடத்தில் கலெக்டர் ஆபீஸ் இருக்கு ! எங்களுக்கு கொடுத்த இடத்தை 15 வருசமா மீட்க முடியல … !
ஒருகாலத்தில் ஜெ.வின் நிழலாகவும் நெருங்கிய தோழியாகவும் திகழ்ந்த சசிகலாவின் பெயரை சொல்லி, தேனியைச் சேர்ந்த முத்தையா என்பவர் தங்களுக்குச் சொந்தமான 5 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிப்பதாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் பரபரப்பு புகார் ஒன்றை தேனி – பெரியகுளம் தென்கரை போலீசில் அளித்திருக்கிறார்கள், தேனி முன்னாள் சேர்மன் ரத்தினம் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இந்தவிவகாரம் தொடர்பாக ரத்தினம் அவர்களின் மகளான ஜானகியிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “எனக்கு 70 வயதாகிறது. என்னுடன் பிறந்த மூத்த சகோதரி இறந்துவிட்டார். 75, 80 வயதில் மூத்த சகோதரிகள் இருவருக்கும் எனக்கும் உரிய சொத்தை மீட்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களது தந்தை ரத்தினம் சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு தேனியில் முதல் சேர்மனாக பதவி வகித்தவர்.
எங்களது குடும்பத்திற்கு சொந்தமான பல்வேறு நிலங்களை பொதுப்பயன்பாட்டிற்காக அரசுக்கு தானமாக வழங்கியிருக்கிறார். எங்களது தந்தை தானமாக அன்று வழங்கிய இடத்தில் தான், இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பணியாளர்கள் குடியிருப்பு கட்டிக் கொள்வதற்காக தானமாக வழங்கிய இடத்திற்கு ரத்தினம் நகர் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது.
அவர் இருந்த காலத்திலேயே பிள்ளைகள் எல்லோருக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்துவிட்டார். அப்போது 2 ஏக்கர் அளவில் விவசாய நிலமாக இருந்த இடத்தை பிளாட்டுகளாக மாற்றி விற்பனை செய்தார். விற்பனை செய்தது போக மீதமிருந்த இடங்களை நான்கு மகள்களுக்கு பிரித்து கொடுத்தார். பெரியகுளம் தென்கரை தெற்கு ரத வீதியில் ரூபாய் 5 கோடி மதிப்பிலான, டவுன் சர்வே எண் 4628/20 – இல் உள்ள 86 செண்ட் அளவில் அமைந்துள்ள இடத்தை மீட்பதில்தான் தற்போது சிக்கலை சந்தித்து வருகிறோம்.
எங்களது தந்தையிடம், கல்யாணம் மண்டபம் கட்டப்போகிறோம் என்பதாக சொல்லி முத்தையா என்பவர் இடத்தை வாங்கியிருக்கிறார். அந்த இடத்தில் சொன்னது போல், மண்டபம் கட்டாமல் தனது சகோதரர் உள்ளிட்டு குடும்ப உறுப்பினர்களாக சேர்ந்து வீடுகட்டி குடியிருந்து வருகிறார். அவர்களது இடத்தை சுற்றி அமைந்துள்ள மற்ற இடங்களையும் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். எங்களுக்கு உரிய இடத்தை அனுபவிக்க இடையூறு செய்து வருகிறார்.
கடந்த 15 ஆண்டுகளாக, வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டும் பலனில்லை. நீதிமன்றத்தில் வழக்கு போட்டு இடத்தை அளக்கப் போனால், ஆட்களை வைத்து தகராறு செய்கிறார். வருவாய்த்துறை அதிகாரியான நில அளவையாளரையும் பணி செய்ய விடாமல் தடுத்துவிட்டார். இடத்தில் கால் எடுத்து வைத்தால் குடும்பத்தோடு கொன்றுவிடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார். எனக்கு இப்போதே 70 வயதாகிவிட்டது. எனது காலத்திலேயே எங்களது பிள்ளைகளுக்கு இந்த இடத்தை பிரித்து கொடுத்து விட வேண்டும் என முயற்சி செய்கிறோம். இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் இழுக்கும் என்றே தெரியவில்லை.” என புலம்புகிறார், ஜானகி.
ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் முத்தையா என்பவர் சசிகலாவுக்கு நெருங்கிய உறவினர் என்பதாக சொல்லிக் கொண்டு, உள்ளூரில் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்கு அநீதி இழைத்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள் ரத்தினம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமறிய, முத்தையாவை அங்குசம் சார்பில் தொடர்புகொண்டோம். ”என் பெயர் முத்தையாதான். ஆனால், நீங்கள் சொல்லும் பிரச்சினைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. வேறு யாரிடமோ கேட்பதற்கு பதில் என்னிடம் பேசுகிறீர்கள்.” என்று நான் அவனில்லை என்ற பாணியில் பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
ஒரு காலத்தில், தங்களது தந்தை தானமாக வழங்கிய இடத்தில் கட்டிடம் எழுப்பி கலெக்டர், எஸ்.பி. என்று கம்பீரமாக அமர்ந்திருக்கும் அதிகாரிகள் கூட, உரிகைக்காக 70 வயதை கடந்த பெண் பிள்ளைகள் படும் பாட்டை கண்டு மனிதாபிமான அடிப்படையிலாவது தீர்த்து வைக்க முயற்சிக்காமல், தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக வேதனையில் புலம்புகிறார்கள் வயதான ரத்தினத்தின் பெண் பிள்ளைகள்.
– கிங்