கோடை கால கத்தரி வெயிலே பரவாயில்லை ! அதிர்ச்சியில் உறைய வைத்த விருதுநகர் கலெக்டரின் விநோத அறிவிப்பு !
கோடை கால கத்தரி வெயிலே பரவாயில்லை ! அதிர்ச்சியில் உறைய வைத்த விருதுநகர் கலெக்டரின் விநோத அறிவிப்பு ! – வெளியில் தலைகாட்ட முடியாமல் சுட்டெரிக்கிறது கோடை வெயில். கடந்த காலங்களைவிட, இம்முறை சராசரியாக 5% அளவுக்கு பொதுவில் வெப்பநிலை உயர்ந்திருப்பதாக வானிலை தரவுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கடும் வெயில் காரணமாக ரெட் அலெர்ட், ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுவரும் நிலையில், இவை எதையும் பற்றி அலட்டிக் கொள்ளாமல் ஏ.சி. அறையில் அமர்ந்துகொண்டு அதிகாரி என்ற தோரணையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு நம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், வீ.ப.ஜெயசீலன்.
அப்படி என்ன அறிவிப்பை செய்துவிட்டார், என்கிறீர்களா? கோடை வெயிலை மாத்திரமல்ல; மே-1 அரசு பொதுவிடுமுறை என்பதைகூட கணக்கில் கொள்ளாமல், மே-1 முதல் மே-11 வரையில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாமை நடத்த சொல்லி தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பதுதான் தற்போது கோடை வெயிலை காட்டிலும் அனல் பறக்கும் விவகாரமாகியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, மூத்த கல்வியாளரும் ஐபெட்டோ அகில இந்திய செயலருமான வா.அண்ணாமலை அறிக்கையின் வழியே தமது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் அனல் பறக்கிறது. 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம், 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை வெயிலில் வெளியே வர வேண்டாம் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மே 1 முதல் 11ஆம் தேதி வரை சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளின் உடல் பாதுகாப்பைப் பற்றி கிஞ்சித்தேனும் கவலைப்படாமல் கோடைக்கால சிறப்பு பயிற்சி என ஆணை வழங்கி நடத்துகிறார்.
வானிலை அறிவிப்பை பற்றி கவலைப்படாத மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையினைப் பற்றி கவலைப்படாத ஆட்சியர், வெயிலில் போகாமல் குழந்தைகளை அன்றாடம் பாதுகாத்து வரும் பெற்றோர்களை கவலைக்குள்ளாக்கி விட்டு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்சிநர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு கெடுபிடி தந்து பயிற்சி வகுப்பினை நடத்தி வருகிறார்.
கோடைக் காலத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்தாகி விட்டது. வெயிலின் வெப்பத்தால் பள்ளி திறக்கும் நாளை இன்னும் அறிவிக்கும் நிலையில் இல்லை. இந்த நிலைமையில் மாணவர்கள் மீது கல்வி அக்கறையா? அல்லது பயிற்சி வகுப்பின் மூலம் ஏதாவது எதிர்பார்த்து செய்கிறார்களா?
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கின்ற இரண்டு மூத்த அமைச்சர்கள் மீது பெற்றோர்களும் ஆசிரியர்களும் சங்கடப்படுகிற சூழ்நிலையை உருவாக்குகிறார். ஒரு மாவட்ட ஆட்சியருக்கு மே 1 தொழிலாளர் தினம் என்று கூட தெரியாதா? மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையினைப் பற்றி கவலைப்படாத ஒரு மாவட்ட ஆட்சியர், வானிலை அறிவிப்பைப் பற்றி கவலைப்படாத ஒரு ஆட்சியர் மீது உடன் நடவடிக்கை மேற்கொண்டு பயிற்சி வகுப்பினை ரத்து செய்துவிட்டு மாணவர்களைப் பாதுகாத்திட வேண்டுமாய் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும், ஒரு மூத்த இயக்கப் பொறுப்பாளர் என்ற முறையிலும் பெரிதும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.” என்பதாக தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார், ஐபெட்டோ வா.அண்ணாமலை.
- அங்குசம் செய்திப்பிரிவு.