மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மாபெரும் மோசடி புகாரில் சிக்கிய நியோமேக்ஸ் மோசடி வழக்கில், இதுவரையில் சுமார் 65,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள். மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் 2023 ஆம் ஆண்டில் குற்றப்பிரிவு எண்:3 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் இருந்து வருகிறது.
இம்மோசடி புகாரை விசாரிப்பதற்கென்றே, மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. இமானுவேல் ராஜ்குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் அமைத்திருக்கிறார்கள். பொருளாதாரக்குற்றப்பிரிவு எஸ்.பி. டாக்டர் சரவணக்குமார் இவ்வழக்கின் தகுதிவாய்ந்த அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், இந்த மோசடிப் புகாரில் சிக்கி சிறைக்கு சென்று நிபந்தனை அடிப்படையில் முன்னணி இயக்குநர்கள் வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் வழக்கின் போக்கை மாற்றி வருகிறார்கள் என்பதாக குறிப்பிட்டு, அவர்களது பிணையை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்குகள் தற்போது மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக நடைபெற்று வருகிறது.

பிணை ரத்து தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் வழக்கமான மோசடிகளை போல அல்லாமல், தமிழகம் முழுவதும் பரவலாக பலரும் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து இந்த வழக்கில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இந்த வழக்கில் அடுத்தடுத்து பல உத்தரவுகள் பிறக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு எந்தவகையிலாவது முதற்கட்ட நிவாரணத்தை வழங்க வேண்டுமென்ற நோக்கில், நியோமேக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களை பொது ஏலத்தில் விற்பணை செய்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக் கொடுப்பதற்கான பணியை முடுக்கி விட்டிருக்கிறது.

இதன்படி, மத்திய அரசின் MSTC நிறுவனத்தின் உதவியுடன் www.mstcecommerce.com என்ற இணையதளத்தின் வழியாக, தமிழகத்தின் 29 இடங்களில் அமைந்துள்ள DTCP அங்கீகாரம் பெறப்பட்ட மனையிடங்களை முதற்கட்ட பொது ஏலத்துக்கு அனுமதி அளித்திருக்கிறது, நீதிமன்றம். இந்த பொது ஏலத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களும் பங்கேற்று, தங்களது இழந்த பணத்திற்கு ஈடாக நிலமாக பெற்றுக்கொள்ளவும் அனுமதியை வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.
மார்ச்-17 அன்று தொடங்கிய இந்த பொது ஏலம், மே-15 ஆம் நாள் வரையில் நடைபெறவிருக்கிறது. இந்த பொது ஏலம் குறித்த போதுமான விழிப்புணர்வு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியிலேயே இல்லாது இருப்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்ததையடுத்து, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில், பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்.பி. டாக்டர் சரவணக்குமார் வழிகாட்டுதலில், முதல்கட்டமாக, மே-09 ஆம் தேதியன்று, மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் விழிப்புணர்வு முகாமை மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் நடத்தியிருக்கிறார்கள்.
மதுரை அமிர்தா மஹால், சிவகங்கை ராஜ் மஹால், தேனி ஹோட்டல் ரிவேரா மீட்டிங் ஹால், விருதுநகர் அனுமன் காபி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இம்முகாமில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். ஏலத்தில் பங்கேற்பது குறித்த தொழில்நுட்ப உதவிகளையும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வழங்கினர்.
அடுத்த கட்டமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்களை நடத்தவிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
இந்த பொது ஏலம் குறித்த ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரை 8778245559 மற்றும் 9080381065 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும்; MSTC பதிவு தொடர்பாக அந்நிறுவனத்தின் அலுவலர்களை 9499054101 மற்றும் 9499054102 ஆகிய எண்களிலும் தொடர்புகொள்ளலாம் என பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் அறிவித்திருக்கிறார்கள்.
மதுரையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமை, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இமானுவேல் ராஜ்குமார், சார்பு ஆய்வாளர் ராஜேஸ்வரி, கார்த்திகேயன், காவலர் ரங்கநாயகி, முருகன் உள்ளிட்ட போலீசார் ஒருங்கிணைத்தனர்.
— அங்குசம் புலனாய்வுக்குழு








Comments are closed, but trackbacks and pingbacks are open.