நியோமேக்ஸ் – ஏலம் போன வாகனங்கள் … பரிசீலனையில் புகார்கள் … இடைக்காலத் தீர்வு எப்போது ?
நியோமேக்ஸ் ! ஏலம் போன வாகனங்கள்… பரிசீலனையில் புகார்கள்… தீர்வு எப்போது ?
நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களிடமிருந்து கைப்பற்றபட்ட அசையும் சொத்துக்களை ஏலம் விடுதல் தொடர்பான நடவடிக்கைகள், பல்வேறு எதிர்ப்பு – சிக்கல்களுக்கு மத்தியில் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. இது தொடர்பான பல்வேறு விசயங்கள், நவம்பர்-03 அன்றுஉ நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் விவாதிக்கப்பட்டது.
அக்டோபர்-31 ஆம் தேதியன்று, இந்த வழக்கின் தகுதிவாய்ந்த அதிகாரியும் எஸ்.பி.யுமான டாக்டர் கே.சரவணக்குமார் முன்னிலையில், ஏலம் கேட்பு தொடர்பான கடிதங்கள் பிரிக்கப்பட்டன. உயர் அதிகாரிகள் பங்கேற்ற அந்நிகழ்வுகள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏல நடவடிக்கைகள்:
இதன்படி, 73 வாகனங்களில் எந்தவித சிக்கலும் இல்லாத 21 வாகனங்கள் மட்டுமே ஏலத்துக்கு தகுதி வாய்ந்த வாகனங்களாக கண்டறியப்பட்டிருந்தன. அதிலும், மூன்று வாகனங்கள் புதிய சிக்கலை எதிர்கொண்டன. ஒன்று, 19,27,000/-என்பதாக விலை நிர்ணயிக்கப்பட்ட வாகனத்திற்கு, அதைவிட குறைவாக 16,00,000/-த்துக்கு ஏலம் கேட்டதாலும்; அதேபோல, 14,58,000 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வெறும் 10,00,500/-க்கு ஏலம் கேட்டதாலும் அவை மறு ஏலம் விட நீதியரசர் பரதசக்ரவர்த்தி அறிவுறுத்தியிருக்கிறார். மற்றொரு வாகனத்திற்கு இருவர் ஒரே விலையை கேட்ட விவகாரமும் நிகழ்ந்திருக்கிறது.

இந்த வகையில், மறு ஏலத்தை இன்னும் ஒருவாரத்திற்குள் அல்லது அதிக பட்சம் 10 நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென்றும்; மறு ஏலம் தொடர்பான அறிவிப்புகளை செய்தித்தாட்களில் விளம்பரம் கொடுத்து பணத்தை செலவிட அவசியமில்லை என்றும்; இ.ஓ.டபிள்யூ. இணையதளத்திலேயே அறிவிப்பை வெளியிட்டு ஏலத்தை நிறைவு செய்யுமாறு நீதியரசர் பரதசக்ரவர்த்தி குறிப்பிட்டிருக்கிறார்.
1739 கிராம் தங்கத்திற்கான ஏலத்தில் 11 பேரும்; 13501 கிராம் வெள்ளிக்கான ஏலத்தில் 10 பேரும் பங்கேற்ற நிலையில், அவற்றுள் சிலர் முன்பணத்தொகையை செலுத்தாமல் இருப்பதை குறிப்பிட்டு அவர்களை நீக்கிவிட்டு மற்றவர்களின் கேட்புகளை மட்டும் கணக்கில் கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.சுமார் 100 சவரன் நகைகளுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அவற்றை மட்டும் ஒதுக்கிவைத்துவிட்டு மற்ற நகைகளுக்கான ஏலத்தை தொடரலாம் என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
புகார்கள் :
முதற்கட்டமாக பெறப்பட்ட, 24,583 புகார்கள் இ.ஓ.டபிள்யூ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும்; அவற்றுள் 21,336 புகார்களை நியோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சரிபார்த்து விட்டதாகவும்; எஞ்சிய 3247 புகார்கள் மட்டும் சரிபார்க்கப்பட வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாம்கட்டமாக, பெறப்பட்ட 44,326 புகார்களில் 30,470 புகார் அளவுக்கு தரவுகளை கணிணியில் பதிவேற்றம் செய்துவிட்டதாகவும்; தற்போது சுமார் 18 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருவதாகவும்; நாளொன்றுக்கு 1000 புகார்கள் வீதம் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும்; அதிகபட்சமாக டிச-18 ஆம் தேதிக்குள் இப்புகார்களை நியோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சரிபார்த்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாகவும் வாக்குறுதியளித்தார் அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ்.
கிளம்பிய எதிர்ப்புகள் :
வீரசக்தி மனைவி, மைக்கேல்செல்வி உள்ளிட்டு மூவர் நகை மற்றும் கார்களை ஏலம்விட ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்கள். கல்யாணத்துக்குப் போட்ட நகை என்றும்; கம்பெனியில் இயக்குநராக சேர்வதற்கு ஓராண்டுக்கு முன்பே வாங்கிய கார் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ரஜினி மற்றும் லாவன்யா ஆகியோரும் கடும் ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.

இது விசாரணை நீதிமன்றம் அல்ல. அவர்களை இங்கே அழைத்து விசாரிக்கவும் முடியாது. டான்பிட் நீதிமன்றத்தில் அவர்களை அதனை வழக்கு நடத்தி முடிவு செய்து கொள்ளட்டும். நாம் முக்கியமான விவகாரத்திற்குள் நகர்வோம். வெறும் 2 கோடி பொறுமான சொத்துக்களை விற்பது தொடர்பான நடவடிக்கைக்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியதில்லை என்பதாக நீதியரசர் பரதசக்ரவர்த்தி சுட்டிக்காட்டினார்.
புதிய சொத்துக்களை அட்டாச் செய்வது தொடர்பாக :
கடந்தமுறை சுட்டிக்காட்டியது போலவே, இந்த முறையும் வழக்கறிஞர் ரஜினியும் லாவன்யாவும், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் சொத்துக்களை அவர்கள் உடனடியாக அட்டாச் செய்வதில்லை. காலம் தாழ்த்துகிறார்கள். இதுவரை எந்தெந்த சொத்துக்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள். எந்தெந்த சொத்துக்களை அட்டாட்ச் செய்திருக்கிறார்கள் என்ற தகவலையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதனை தீர்ப்பில் பதிவு செய்ய வேண்டும் என்பதாக கோரிக்கையை முன்வைத்தனர். அவ்வாறே செய்யவும் சொல்லி அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்களை நீதியரசர் பரதசக்ரவர்த்தி வழங்கியுள்ளார்.
அடுத்த விசாரணை :
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 10 ஆம் தேதி மதியம் 2.15 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
– அங்குசம் புலனாய்வுக்குழு







Comments are closed, but trackbacks and pingbacks are open.