நியோமேக்ஸ் : மதிப்பீடு … நிவாரணம் … பினாமி சொத்து … கடுப்பான நீதியரசர் … நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன ?
நியோமேக்ஸ் ! மதிப்பீடு… நிவாரணம்… கடுப்பான நீதியரசர் ! நடந்தது என்ன ? அங்குசம் !
நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக நடைபெற்றுவரும் நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில், ஆக-22 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் 8 அம்சங்கள் குறித்து பேசப்பட்டிருக்கிறது.
முதல் விசயம், 16 மாவட்டங்களுக்கான மதிப்பீட்டு பணியில் 13 மாவட்டங்களுக்கு மட்டுமே முழுமையாக நடைபெற்று முடிந்திருப்பதாகவும், எஞ்சிய திருநெல்வேலி, மதுரை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான மதிப்பீட்டு பணிகளை முடிக்க இரண்டு வார அவகாசம் கோரப்பட்டு அதற்கு அனுமதி அளித்திருக்கிறது. வழக்கு விசாரணை செப்-11 அன்று அடுத்து நடைபெறும்.
இரண்டாவது, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, வில்லிச்சேரியில் உள்ள இடங்களை மதிப்பீடு செய்வது தொடர்பான விவகாரம் விவாதிக்கப்பட்டது. வில்லிச்சேரி வருவாய் மாவட்டம் தூத்துக்குடியாக இருந்தாலும், பதிவு மாவட்டம் திருநெல்வேலியாக இருப்பதால் அவர்கள் தான் மேற்கொள்ள முடியும் அதுவும் நீதிமன்றத்தின் ஒப்புதலோடுதான் தொடங்க முடியும் என்ற நிலையில் அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது, தேனி மாவட்டம் போடியில் உள்ள கிரீன் ராயல் ரிசார்ட்ஸ் விவகாரம். இந்த இடத்தை பொருளாதாரதக்குற்றப்பிரிவு போலீசார் அட்டாச் செய்திருந்தாலும், அதிலிருந்து பெறப்படும் வருமானம் இன்னும் குற்றவாளிகளின் கைகளுக்கே சென்று சேர்வதை வழக்கறிஞர் ரஜினி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ஆண்டுதோறும் ஏழு கோடி வரையில் வருமானம் ஈட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். அந்த ரிசார்ட்ஸ் சீல் வைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வைத்தார். அது தொடர்பாக, நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
நான்காவது, பொருளாதாரக்குற்றப்பிரிவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்கள் அனைத்தையும் மதிப்பிட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசு வழக்கறிஞர், வில்லங்கமான நிலங்கள், மற்றவர்களுக்கு விற்ற நிலங்கள், நியோமேக்ஸ் நிறுவனத்தின் பெயரில் இல்லாமல் மூன்றாம் தரப்பினர் பெயரில் உள்ள நிலங்களையெல்லாம் இப்போது மதிப்பிட இயலாது. அதனை தனிப்பட்டியலாக வைத்திருக்கிறோம். தொடர்ந்து மதிப்பிடுவோம் என்பதாக அரசு தரப்பில் தெரிவித்த கருத்தை நீதிமன்றம் ஏற்றது. தனிப்பட்டியலாக பராமரித்து அதனையும் அடுத்தகட்டமாக மதிப்பிட்டு முடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
ஐந்தாவது, மதிப்பீட்டு அறிக்கையை முதலீட்டாளர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு விநியோகிக்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக, கருத்து தெரிவித்த நீதியரசர் பரதசக்ரவர்த்தி, முதலில் முடிக்கட்டும்; என் கைக்கு வரட்டும்; உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தருகிறேன். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். உங்கள் தரப்பு ஆட்சேபனைகளையும் தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் தருகிறேன். அதன்பிறகே அறிக்கை இறுதி செய்யப்படும் என்பதாக தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நியோமேக்ஸ் ! மதிப்பீடு… நிவாரணம்… கடுப்பான நீதியரசர் ! நடந்தது என்ன ? அங்குசம் !
ஆறாவது, நியோமேக்ஸ் விவகாரத்தில் பிரதான வழக்கு டான்பிட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதுதொடர்பான மேல்முறையீடுகள் உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் நிலையில், சிலர் பாதிக்கப்பட்ட நுகர்வோர் என்ற அடிப்படையில் இருந்து நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து சாதகமான உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள். அந்த உத்தரவுகளை அமல்படுத்த முன்வராத, நியோமேக்ஸ் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை காரணம் காட்டி தப்பி வருகிறார்கள். இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று, அந்த வழக்குகளையும் இதே நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு, அடுத்த வாய்தாவில் தங்களது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க அவகாசம் வழங்கியிருக்கிறார்.
இதே விவகாரத்தில் மற்றொரு தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த நீதியரசர் பரதசக்ரவர்த்தி, “நீங்கள் உங்களது இரண்டு க்ளையண்டுக்காக பேசுகிறீர்கள். இன்னொரு தரப்பு பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்காக பேசுகிறார்கள். நான் எதை பார்ப்பது? இது பெயில் கேன்சலேஷன் கேஸ்தான். ஆனாலும், இதில்தான் இத்தனை உத்தரவுகள் போட்டிருக்கிறோம். அவர்கள் போட்ட முதலீட்டை திரும்ப பெற முயற்சிக்கிறார்கள். இப்போதே உத்தரவு போட்டுவிடவா? ஜெயிலில் போட்டாலும் எப்படியும் மூன்று, நான்கு வாரங்களில் வெளியே வந்துவிடத்தான் போகிறார்கள். அதனால் யாருக்கு என்ன இலாபம்?” என காட்டமாகவே கேள்வி எழுப்பினார் நீதியரசர் பரதசக்ரவர்த்தி. அவர்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க அவகாசம் வழங்கியிருக்கிறார்.

ஏழாவது, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் அசல் பாண்டுகளை கேட்கிறார்கள் என்ற விவகாரம் கொண்டு வரப்பட்டது. டான்பிட் நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கு, அசல் பாண்டுகள் அவசியம். முதலீட்டாளர்கள் மறுப்பின்றி கொடுத்துதான் ஆக வேண்டும். அதற்குரிய அத்தாட்சி ரசீதை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு தரப்பில் கொடுக்க வேண்டும் என்பதாக அறிவுறுத்தியிருக்கிறார்.
எட்டாவது விவகாரமாக, இதுவரை மதிப்பிட்டதிலிருந்து சுமார் 1600 கோடி வரையில் நிலங்களின் மதிப்பாக மதிப்பிடப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்தில் புகார்தாரர்களின் மதிப்பு என்ன என்ற கேள்வியை எழுப்பினார் நீதியரசர். சுமார் 2000 கோடி என்றதும், சரி எப்படியும் 90 சதம் வரையில் பிரித்துக் கொடுக்க வாயப்பு இருக்கிறது என்பதாக கருத்தை பதிவு செய்தார்.
தொகுப்பாக,
இன்றைய நீதிமன்ற வழக்கு விசாரணையிலிருந்து, நிலமாகவோ, பணமாகவோ நிவாரணத்தை பெறுவது அவரவர் விருப்பம். அடுத்தவரின் விருப்பத்திற்கு இடையூறாக யார் ஒருவரும் நிற்க முடியாது. என் பிரச்சினையை தீர்த்துவிட்டுத்தான் அடுத்தவர் பிரச்சினைக்கு போக வேண்டும் என யாரும் கோர முடியாது என்பதை தெளிவு படுத்தியிருக்கிறது.
நியோமேக்ஸ் ! மதிப்பீடு… நிவாரணம்… கடுப்பான நீதியரசர் ! நடந்தது என்ன ? அங்குசம் !
அடுத்து, இப்போது வரையில் பாண்டுகளின் மதிப்பிலிருந்துதான் நிவாரணம் குறித்த மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. பத்திரங்கள் குறித்த சிக்கல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. போட்டது ஒரு இலட்சமாக இருந்தாலும், அவர்கள் தந்த வாக்குறுதி என்பது குறிப்பிட்ட ஆண்டின் முடிவில் இரண்டு இலட்சம் அல்லது ஒரு குறிப்பிட்ட முதிர்வுத்தொகை என்பதுதான். ஆக, இந்த இடத்தில் வாக்குறுதி சொன்னபடி முதிர்வுத்தொகைதான் வேண்டும் என்றால் எப்படி முடிவெடுப்பது என்ற சிக்கல் எழுகிறது.
நிலமாகவா? பணமாகவா? போட்ட முதல் மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதுமா? வங்கி வட்டி கணக்கிட்டு கொடுத்தால் போதுமா? முழு முதிர்வுத்தொகையுடன்தான் வேண்டுமா? என்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் சிக்கலுக்குரியதாக இருக்கின்றன. இவையெல்லாம் அடுத்து அமைக்கப்போகும் க்ளைம் கமிட்டியில்தான் முடிவு எட்டப்படும்.
இந்த இடத்தில், இது முதற்கட்ட, இடைக்கால நிவாரணம்தான். க்ளைம் கமிட்டியில் முடிவாவதை பொறுத்து நிலமாகவோ, பணமாகவோ, குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையிலோ நிர்ணயிக்கப்படலாம். நியோமேக்ஸ் நிறுவனத்தின் ஒரு அடி நிலம் கூட, ஒற்றை ரூபாய் கூட இனி நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு திரும்ப போகக்கூடாது. அவை அனைத்தும் நியோமேக்ஸின் கடைசி முதலீட்டாளனுக்கு நிவாரணம் கிடைக்கும் வரையில் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரும் எந்த விதத்திலும் குறுக்கீடு செய்யாதிருக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் பினாமி சொத்துக்களை எல்லாம், இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து வெளிக்கொணர்ந்து வருகிறார்கள் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள். இனியும் புகார் கொடுக்காமல் தாமதித்தால் உள்ளதும் போச்சு என்ற கதையாகிவிடும் என்ற அச்சத்தை இன்னும் புகாரே கொடுக்காத பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடத்தில் ஏற்படுத்திவிட்டது, இன்றை நடைபெற்ற நீதிமன்ற விசாரணை.
— அங்குசம் புலனாய்வுக் குழு.
நியோமேக்ஸ் தொடா்பான வீடியோ பதிவுகளை காண
நீதிமன்றம் வைத்த செக் ♟ வேகமெடுக்கும் வழக்கு !
இதுதான் பிரச்சினை… தேவை தனி கவனம் !
இதுவரை புகார் கொடுக்காதவர்களின் கதி என்ன ?
தனி டி.ஆர்.ஓ, தனி விசாரணை அதிகாரி ஏன் அவசியம் ?
எல்லா வழக்குகளும் ஒரே நீதிபதியிடம்… தயவு காட்டுவாரா தலைமை நீதிபதி ?
Respected All
இந்த வழக்கைப் போல தஞ்சாவூர் அசோகன் தங்க மாளிகையில் கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் காண மோசடி நடந்துள்ளது 2022 தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையம் கலெக்டர் ஆபீஸ் எஸ் பி அலுவலகம் பொருளாதார குற்றப்பிரிவு என்று அனைத்து இடங்களிலும் இந்த புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது ,பதிவு செய்யப்பட்ட இந்த புகார் இதுவரை என்ன நடந்தது என்று தெரியவில்லை உங்களுடைய ஊடகம் மூலம் அது என்ன ஆனது அதைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு தயவு செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
Khadeer shereef
9042701914
நன்றி