நியோமேக்ஸ் : மீண்டும் புகார் கொடுக்க வாய்ப்பு கிடைக்குமா?
NEOMAX | நியோமேக்ஸ் UPDATE | மீண்டும் புகார் கொடுக்க வாய்ப்பு கிடைக்குமா ?
நியோமேக்ஸ் வழக்கில் பிணை ரத்து தொடர்பான வழக்குகள் நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக விசாரணையில் இருந்து வந்த நிலையில், கடந்த அக்-19, 2024 இல் விரிவான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். இந்நிலையில், அந்த வழக்குகளின் விசாரணையானது, நீதியரசர் ஆனந்த்வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, நீதியரசர் பரதசக்ரவர்த்தியே தொடர்ந்து விசாரிப்பதுதான் சரியாக இருக்கும் என்பதாக அவரது அமர்வுக்கே மாற்றுமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார்.
இந்நிலையில்தான், கடந்த மார்ச்-25 அன்று நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக மேற்படி வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அன்றைய தேதியில் விசாரணையை நடத்திய நீதியரசர் பரதசக்ரவர்த்தி ஏப்ரல்-02 அன்று வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.
தற்போது, ஏப்ரல்-02 அன்று நடைபெறும் இந்த வழக்குகளின் விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் சில சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படுமா? என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறார்கள்.

அதாவது, நீதியரசர் பரதசக்ரவர்த்தி அக்-19, அன்று வழங்கியிருந்த தீர்ப்பில் சில பொதுவான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார். அதன்படி, நவ-05 அன்று தினசரியில் விளம்பரம் வெளியிட வேண்டும்; நவ-15 வரை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து புகார்களை பெற வேண்டும்; நவ-16 முதல் டிச-05 வரையில் புகார்களை பரிசீலனை செய்து; டிச-06 அன்று பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்; டிச-15 வரையில் முதலீட்டாளர்கள் மற்றும் நியோமேக்ஸ் நிறுவன தரப்பில் ஆட்சேபனைகளை பெற்று டிச-16 இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; டிச-18 அன்று வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் என்பதாக அறிவித்திருந்தார்.
இதன்படி, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் மிக குறுகிய காலத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டு டிச-18 அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள். ஆனாலும், நீதிமன்ற உத்தரவின்படி, டிச-06 அன்று இணையத்தில் வெளியாகியிருக்க வேண்டிய முதலீட்டாளர்களின் விவரங்கள் ஒரு நாள் தாமதமாக டிச-07 அன்றுதான் வெளியானது. அவ்வாறு வெளியானதிலும் சில தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக, அவர்களது மொத்த முதலீட்டு விவரங்களை பெற முடியாத சிக்கலை எதிர்கொண்டார்கள். இறுதியாக, டிச-09 அன்று முழுமையான அளவில் அந்த விவரங்களே அப்லோடு செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையில், டிச-10 தான் ஆட்சேபனைக்கான இறுதி தேதி என்பதாக கெடு விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த விவரங்களில் ஆட்சேபனை எழுப்புவர்கள் மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் நேரிலோ, தபாலிலோ புகார் தெரிவிக்கும் வாய்ப்பை இழந்தார்கள். டிச-10 ஆம் தேதிக்குப் பிறகு வரப்பெற்ற தபால்களை நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, திருப்பியனுப்பிய சம்பவங்களும் நடந்தது. இது பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், நியோமேக்ஸ் நிறுவனம் அச்சிட்டு வழங்கிய பாண்டுகளை மட்டுமே ஆதார ஆவணமாக புகாருக்கு ஏற்றுக் கொண்டிருந்தார்கள். முதலீட்டாளர்கள் பலரிடம் 100 ரூபாய் பத்திரத்தில் நியோமேக்ஸ் நிறுவனம் பதிவு செய்திருந்த ஒப்பந்த பத்திரங்களின்படியான முதலீட்டை புகார் கணக்கில் ஏற்க மறுத்தார்கள். அவை பதிவு செய்யப்படாத ஆவணங்கள் என்பது அவர்களின் நிராகரிப்பிற்கான முதல் காரணமாக இருந்தது. அடுத்தது, அந்த ஒப்பந்த பத்திரம் எதுவொன்றிலும், முதலீட்டாளர்களின் கையெழுத்தும் இடம் பெறவில்லை இதுதான் முதலீட்டு தொகை என்பதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உதாரணமாக, பத்து இலட்ச ரூபாய் முதலீட்டிற்கு, மூன்றாண்டு முடிவில் இருபது இலட்சமாக திருப்பிக் கொடுக்கப்படும் என்பதாக, முதிர்வுத்தொகையை மட்டுமே அந்த பத்திரங்களில் நியோமேக்ஸ் நிறுவனம் பதிவு செய்திருந்ததே காரணமாக இருந்தது. நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, இதுபோன்ற பத்திரங்களை ஏற்பது குறித்து முடிவெடுப்பதாக பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவித்திருந்தார்கள்.

ஒருவேளை, டிச-18 அன்று இந்த வழக்கின் விசாரணை நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாகவே நடைபெற்றிருந்தால், இந்த விவகாரங்களை நீதியரசரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய உத்தரவுகளை பெற்று பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் சிக்கலை தீர்த்திருப்பார்கள். இந்நிலையில்தான், எதிர்வரும் ஏப்ரல்-02 அன்று நடைபெறும் வழக்கு விசாரணையிலாவது, இந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தபால் திருப்பி அனுப்பபட்டவர்கள் மீண்டும் புகார் அளிப்பதற்கான வாய்ப்பு மற்றும் பத்திரங்களை முதலீட்டுக்கான ஆவணமாக ஏற்பது குறித்த உத்தரவுகளை பெற்று தங்களது குழப்பத்தை போக்க வேண்டும் என்பதாக, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
— அங்குசம் புலனாய்வுக்குழு.