சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுக்கும் நியோமேக்ஸ் விவகாரம் : தேவை அரசின் தலையீடு! Editorial (ஆசிரியர் தலையங்கம்)
நியோமேக்ஸில் முதலீடு செய்த பணத்தை திரும்பத்தராத நிலையில், அந்நிறுவனத்தைச் சேர்ந்த தேவக்கோட்டை கார்த்திக்கேயன் என்பவரை, சினிமா பட பாணியில் காரில் கடத்திய சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரையை தலைமையிடமாகக்கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளை பரப்பி, நூற்றுக்கணக்கான துணை நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டு, ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறோம் என்ற போர்வையில் பல இலட்சக்கணக்கானோரிடமிருந்து பல்லாயிரம் கோடிகளை சுருட்டியதாக புகாரில் சிக்கியது, நியோமேக்ஸ்.
ஆளுக்கு ஏற்றார் மாதிரி பேச்சு. ஊருக்கு ஏற்றார் மாதிரி திட்டம். நட்சத்திர ஓட்டல்களில் மூளைச்சலவை கூட்டம். சொகுசு காரில் சுற்றுலா போல கூட்டிச்சென்று காட்டப்பட்ட சைட் விசிட்டுகள் … என வசிய பேச்சுகளால் வீழ்த்தியிருக்கிறார்கள். ஆழ்கடலில் வீசப்படும் சுருக்குமடி வலைகளுக்கு நிகராக நியோமேக்ஸ் வீசிய வலை அன்றாடங்காய்ச்சி தொடங்கி, தொழிலதிபர்கள் வரையில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பெருமளவில் மத்திய – மாநில அரசு ஊழியர்களை, ஓய்வூதியப் பலன்களை குறிவைத்து தட்டி தூக்கியிருக்கிறார்கள்.

சாமான்யர்களிடத்திலும் கூட, அவர்களின் நகையை, அவர்கள் வசிக்கும் வீட்டை அடமானம் வைத்து முதலீடு போட வைத்திருக்கிறார்கள். மிக முக்கியமாக, இவர்கள் அனைவரிடத்திலும் இனி சுரண்டுவதற்கு ஒன்றுமில்லை எனும் அளவுக்கு அவர்களது வாழ்நாள் சேமிப்பு அத்தனையையும் துடைத்து வழித்து எடுத்து விட்டார்கள்.
இவர்களின் பேச்சை நம்பி முதலீடு செய்தவர்களோ, அடுத்த வேளை சோற்றுக்கு என்ன வழியென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். மூன்று இலட்சத்திற்கும் குறைவில்லாதவர்கள் நியோமேக்ஸில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்கிறார்கள். ஆனால், இதுவரை வெளிப்படையாக புகார் அளித்திருப்பவர்கள் வெறும் 23,750 பேர் மட்டுமே.
”பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசை நம்பினால் தீர்வு கிடைக்காது; நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காது; ஆளும் கட்சியின் தலையீடு இருக்கிறது; ஆளும்கட்சிக்கு நெருக்கமான ஒரு நிறுவனத்திற்கு சாதகமாக நமது நிலங்களை கைப்பற்ற நினைக்கிறார்கள்…” என்பதாக அவதூறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிரான அவநம்பிக்கையை விதைத்து வருகிறார்கள்.
தாங்கள் சொல்வது போல், புகாருக்கே செல்லாமல் காத்திருந்தால் மட்டுமே போட்ட பணம் கிடைக்கும் என்பதாக வெளிப்படையாகவே மிரட்டி வந்தவர்கள்; இப்போது தீர்வை தருகிறோம் என்று கூறி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடமே மீண்டும் பணத்தை கேட்டு புதிய பிசினஸை தொடங்கியிருப்பதை கண்டு ஆத்திரமுற்றிருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவர்களது பேச்சை நம்பி, இதுநாள் வரையில் புகாருக்கே செல்லாமல் காத்திருந்தவர்களும் மெல்ல பொறுமையிழந்து வருகிறார்கள். சிலர் கையறு நிலையில் சிக்கித் தவிக்கிறார்கள். சிலர் நீதிமன்றத்தின் கதவை பலமாக தட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஒன்று சேர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள். இந்த அவலத்தின், ஆத்திரத்தின் உச்சம்தான், நியோமேக்ஸ் நிர்வாகியை கடத்த துணிவதில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
நியோமேக்ஸ் விவகாரத்தை பொருத்தமட்டில், தற்போது வெளியில் தெரிவது கடலில் மூழ்கிய பனிமலையின் முகடு மட்டுமே. நியோமேக்ஸ் மோசடிகளின் முழுப்பரிமானங்களோ ஆழ்கடல் ரகசியங்களாகவே நீடிக்கின்றன. நியோமேக்ஸ் விவகாரம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறுவதற்கு முன்பாக, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வரும் நியோமேக்ஸ் விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய தீர்வை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.
— அங்குசம் புலனாய்வுக்குழு.