“மதுரையில் ரயிலில் துணி உறையுடன் கம்பளி போர்வை வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்”
தெற்கு ரயில்வே துறை சார்பாக ரயிலில் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு துணி உறையோடு கூடிய கம்பளி போர்வை வழங்கும் திட்டம் மதுரையில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இரண்டு படுக்கை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, கம்பளிப் போர்வை, கைத்துண்டு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கம்பளி போர்வை, தலையணை தவிர மற்ற படுக்கை துணிகள் ஒவ்வொரு உபயோகத்திற்கு பிறகும் தூய்மையாக சலவை செய்து வழங்கப்படுகிறது.
கம்பளி போர்வை மட்டும் 15 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை உலர் சலவை செய்யப்படுகிறது. இந்த உலர் சலவை சம்பந்தமாக பயணிகள் பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்து வந்தனர்.
ஆகவே பயணிகளுக்கு தூய்மையான, சுகாதாரமான கம்பளிப் போர்வை வழங்குவதற்கு தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதன்படி கம்பளி போர்வைகள் தனித்தனி துணி உறைகளோடு செவ்வாய்க்கிழமை டிசம்பா்-10 முதல் சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த புதிய வசதி மதுரை – சென்னை – மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த துணி உறைகள் கம்பளி போர்வை உள்ளிட்டப்பட்டு வெல்கிரோ ஒட்டும் முறைப்படி ஒட்டி வெளியே வராமல் பாதுகாக்கப்படுகிறது.
இதன் மூலம் கம்பளி போர்வையை சுகாதாரமாக பாதுகாத்து தொடர்ந்து உபயோகப்படுத்த முடியும். பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயணிகள் இந்த புதிய வசதியை வெகுவாக ஆதரித்து பாராட்டி மகிழ்ந்துள்ளனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.