நியூஸ் 18 செய்தியாளர் மகேஸ்வரனுக்கு கொலை மிரட்டல்… வழக்கு பதிய மறுக்கும் போலீசார் !

0

கோவில்பட்டி நியூஸ் 18 செய்தியாளர் மகேஸ்வரனுக்கு கொலை மிரட்டல்… வழக்கு பதிய மறுக்கும் போலீசார் ! சென்னை பிரஸ் கிளப் கடும்கண்டனம்..!

நியூஸ் 18 தொலைக்காட்சி கோவில்பட்டி கோட்ட செய்தியாளர் P.மகேஸ்வரன் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது முறையாக புகார் அளித்த நிலையில் கோவில்பட்டி மேற்கு போலீசார் நடவடிக்கை எடுக்காததை சென்னை பிரஸ் கிளப் வன்மையாக கண்டிக்கிறது.

https://businesstrichy.com/the-royal-mahal/

கோவில்பட்டி – இளையசரனேந்தல் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையையொட்டி சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. மழைக் காலங்களில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், சுரங்கப் பாதையையொட்டி அமைந்துள்ள கழிவுநீர் வடிகாலும் ஆக்கிரப்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

P.மகேஸ்வரன்
P.மகேஸ்வரன்

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்நிலையில், கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ.ஜேன் கிறிஸ்டி தலைமையில் நகராட்சி அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நபார்டு வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில், நகராட்சி கட்டுமானப் பிரிவு பொறியாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆக்கிரமிப்பு அளவீடு பணிகள் ஜூலை-03 அன்று மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

நகராட்சி அதிகாரிகளின் ஆக்கிரமிப்பு அளவீடு பணியை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் மகேஷ்வரனை, அதே பகுதியில் A1 டீ ஸ்டால் என்ற கடை நடத்திவரும் உரிமையாளர் கணேசன் மற்றும் அவரது சகோதரர் சரவணன் ஆகியோர் மிரட்டி தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“ஆக்கிரமிப்பு தொடர்பாக உனது தொலைக்காட்சியில் செய்தி எதுவும் வெளியிட்டால், உனது கையை வெட்டி, தலையை முண்டமாக்கி ரோட்டில் போட்டுவிடுவோம்” என்று பலர் பார்க்க பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் மிரட்டுவது அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருக்கிறது.

மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு செய்தியாளர் மகேஸ்வரனிடம் பிரச்சினை செய்த கணேசன் மற்றும் சரவணனை அனுப்பியும் வைத்திருக்கின்றனர். இதுஒருபுறமிருக்க, “யார் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்தால் பத்திரிகைகளுக்கு என்ன? இவர்களை எல்லாம் ரோட்டில் நடமாடவிட்டதே தப்பு.” என்று தனது பங்குக்கும் செய்தியாளர் மகேஸ்வரனுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார், நகராட்சி கட்டுமானப்பிரிவு பொறியாளர் கிருஷ்ணகுமார்.

அந்த கடை
அந்த கடை

இவையனைத்தையும் தகுந்த ஆதாரங்களோடு, கோவில்பட்டி மேற்கு போலீசாரிடம் மகேஸ்வரன் புகார் கொடுத்தும், கொலை மிரட்டல் விடுத்த பொறியாளர் கிருஷ்ணகுமார், A1 டீக்கடை உரிமையாளர் கணேசன் மற்றும் அவரது சகோதரர் சரவணன் மீது புகார் பதிவு செய்ய மறுத்து வருகிறது காவல்துறை.

பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் செய்த அளவீடு பணியை செய்தி சேகரிக்க சென்றதில் என்ன குற்றம்? ஆக்கிரமிப்பை அகற்றினால் வருவாய் இழக்க நேரிடும் என டீக்கடை உரிமையாளர் கணேசன் மிரட்டியதில் கூட நியாயம் இருக்கிறது. நகராட்சி பொறியாளரும் சேர்ந்து கொண்டு ஏன் செய்தியாளரை மிரட்ட வேண்டும்? தகுந்த ஆதாரங்களோடு புகார் தெரிவித்தும் போலீசாரும் ஏன் வழக்குப் பதிவு செய்யாமல் தட்டிக் கழிக்க வேண்டும்?

இந்தப் போக்கை சென்னை பிரஸ் கிளப் வன்மையாக கண்டிக்கிறது. நியூஸ்18 செய்தியாளர் மகேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழலில், கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை பிரஸ் கிளப் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.