அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பாக்யா’ராஜ்: என்னும் பத்திரிகையாளர் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பாக்யா’ராஜ்: என்னும் பத்திரிகையாளர் !

-கோவி.லெனின்

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

சக்கைப் போடு போடும் திரைப்படங்கள் என்றாலும் பத்திரிகைகளில் அவை பற்றி என்ன வகையான விமர்சனம் வெளியாகிறது என்பதை தயாரிப்பாளர்,இயக்குநர்.நடிகர்-நடிகையர்கள் உற்றுக் கவனித்த காலம் அது. படத்தைப் பற்றியும், அதில் தொடர்புள்ள கலைஞர்கள் பற்றியும் நல்ல முறையில் பத்திரிகையில் எழுதினால், அது ரசிகர்களைத் திரையரங்கம் நோக்கி ஈர்க்கும். அதனால், பத்திரிகைகளைக் கவனமாகக் கையாள்வது திரைத்துறையினரின் வழக்கம்.

கதை-வசனம்-திரைக்கதை-இயக்கம் என்று அசத்திய கே.பாக்யராஜின் படங்கள் வெள்ளிவிழாக் கொண்டாடிய காலத்தில் அவருக்குப் பத்திரிகை மீதான ஆர்வம் அதிகமானது. பாக்யராஜூக்குள் ஒரு பத்திரிகை ஆசிரியர் உறங்கிக் கொண்டிருந்தார். ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் போன்ற பத்திரிகைகள் போல ஒரு பத்திரிகையை நடத்த வேண்டும் என்ற அவரது ஆர்வம் 1988ஆம் ஆண்டு ‘பாக்யா’ பத்திரிகை மூலம் நிறைவேறியது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

அரசியல் பத்திரிகைகள் அறிமுகமாகி, பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த காலம் அது. எம்.ஜி.ஆருடன் அ.தி.மு.க.விலும், அதன் பின் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் ஆரம்பித்த பாக்யராஜ், அரசியல் பத்திரிகையைத் தொடங்கவில்லை. பல்சுவை வார இதழாகத்தான் பாக்யா  பத்திரிகையைத் தொடங்கினார். (அதே காலகட்டத்தில் காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் நாரதர் என்ற பெயரில் அரசியல் பத்திரிகை நடத்தினார்)

பாக்யா’ராஜ் என்னும் பத்திரிகையாளர் !
பாக்யா’ராஜ் என்னும் பத்திரிகையாளர் !

பாக்யா முழுமையான பத்திரிகையாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்த பாக்யராஜ், அதன் நிர்வாக ஆசிரியர் சஞ்சீவி, ஆசிரியர் குழுவினருடன் ஆலோசித்து, அட்டை டூ அட்டை மெருகேற்றினார். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பெரிய அளவில் அப்போது வளர்ந்திருக்கவில்லை. ஆனாலும், பாக்யாவின் அட்டைப்படம் ஆங்கில இதழ்களைப் போல வண்ணமயமாக வாசகர்களை ஈர்த்தது. அட்டைப் பட வடிவமைப்பாளரான ஜானி என்பவரின் கைவண்ணத்தில், கடைகளில் தொங்கும்போதே வாங்கத்தூண்டும்  வகையில் பாக்யாவின் அட்டை ஈர்த்தது. (அதே 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசியல்  புலனாய்வு வார இதழான நக்கீரன் பத்திரிகையின் பரபரப்பான அட்டைப்படங்களை அதன் ஆசிரியர் நக்கீரன் கோபாலே வடிவமைத்தார்)

புதிய எழுத்தாளர்களின் கதைகள், துணுக்குகள் ஆகியவற்றுக்கு பாக்யா இடம் கொடுத்தது. இதழை வாங்கியதும் வாசகர்கள் முதலில் புரட்டுவது, ‘உங்கள் கே.பாக்யராஜ் பதில்கள்’ பகுதியைத்தான். அப்போது குமுதம் இதழில் அரசு பதில்கள் மிகவும் பிரபலமாக இருக்கும். துக்ளக் பத்திரிகையில் சோ பதிலளிப்பார். கல்கண்டு இதழில் லேனா தமிழ்வாணன் பதில்கள் வரும். அவற்றிலிருந்து பாக்யராஜின் பதில்கள் மாறுபட்டிருந்தன. வாசர்களின் கேள்விகளுக்கு சின்னச் சின்ன கதைகள், நிகழ்வுகள் மூலமாக பதில் அளிப்பது பாக்யராஜ் பாணியாக இருந்தது. எடுத்துக்காட்டாக,

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

தாய்ப் பாசத்தை சிறப்பாக வெளிப்படுத்திய திரைப்படக் காட்சி எது? என்ற கேள்விக்கு, பாக்யராஜ் ஓர் ஆங்கிலப்படத்தின் காட்சியைப் பதிலாக அளித்திருப்பார். ஒரு நகரத்தில் பூகம்பம் ஏற்படுகிறது. கட்டடங்கள் சரிகின்றன. நூறு மாடி பில்டிங் நொடியில் தகர்ந்து விழுகிறது. மக்களின் அலறல். ஒரே புழுதி மயம். அந்தப் புழுதி அடங்கும்போது ஒரு குழந்தையின் குரல் மட்டும் கேட்கிறது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஒரு பெண், தன் கையை மட்டும் வெளியே உயர்த்தியிருக்கிறாள். அந்தக் கை மீது அந்தக் குழந்தை இருக்கிறது. தன் உயிர் போகும் நிலையிலும், குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய அந்த தாயின் உணர்வுதான் தாய்ப்பாசத்தை காட்டிய திரைக்காட்சிகளில் சிறப்பானது என்று பாக்யராஜ் பதிலளித்திருந்தார். (1989-90 வாக்கில் வெளியான பாக்யாவில் இடம்பெற்ற அந்த பதில், 25 ஆண்டுகள் கழித்து 2015ஆம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தில் வேறுவிதமான காட்சியாக அமைந்திருந்தது)

பாக்யராஜ் கேள்வி பதில்கள்
பாக்யராஜ் கேள்வி பதில்கள்

பாக்யராஜின் பதில்கள் மட்டுமல்ல, அவருடைய கேள்விகளும் கவனத்தைப் பெற்றன. ஒவ்வொரு இதழிலும் முக்கிய ஆளுமைகளை பாக்யராஜே பேட்டி எடுத்தார். குறிப்பாக, தி.மு.க தலைவர் கலைஞருடனான அவரது நேர்காணல் சிறப்பாக அமைந்தது. கலைஞர் தன் கட்சி நிர்வாகிகளிடம், “சினிமா டைரக்டர் எப்படி கேள்வி கேட்கப் போகிறார்னு நினைத்தேன். அவர், தெளிவான பார்வையோடு கேள்விகளைக் கேட்டார்” என்று பத்திரிகையாளர் பாக்யராஜை பாராட்டியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளரான கலைஞர்.

‘துண்டிக்கப்பட்ட நகரம்’ என்ற தொடர்கதை பாக்யாவின் தொடக்க கால வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தது. இரண்டாம் உலகப்  போரில் ஹிட்லரின் ஜெர்மனி வீழ்ந்த நிலையில், கிழக்கு ஜெர்மனி-மேற்கு ஜெர்மனி என இரண்டு நாடுகளாகப் பிரிந்தது. அமெரிக்க ஆதரவு நாடாக மேற்கு ஜெர்மனியும், சோவிய யூனியன் (ரஷ்யா) ஆதரவு நாடாக கிழக்கு ஜெர்மனியும் இருந்தன. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நடந்து சூழலில், கிழக்கு ஜெர்மனி மக்கள் யாரும் மேற்கு ஜெர்மனிக்குப் போய்விடக் கூடாது என்பதால், இரண்டு நாடுகளையும் பிரிக்கும் வகையில், பெர்லின் நகரில் நீண்ட சுவர் கட்டப்பட்டு, கடுமையான காவல் போடப்பட்டது.

பாக்யா’ராஜ் என்னும் பத்திரிகையாளர் !
பாக்யா’ராஜ் என்னும் பத்திரிகையாளர் !

பெர்லின் சுவரால் பல குடும்பங்கள் பிரிந்தன. தாய் ஒரு நாட்டிலும் மகன் ஒரு நாட்டிலும் இருக்கக்கூடிய அவலம் ஏற்பட்டது. ரத்த உறவுகள் கண்ணீரில் தவித்தன. இந்த உணர்ச்சிப்பூர்வமான சூழலைத்தான் ’துண்டிக்கப்பட்ட நகரம்’ என்ற பெயரில் பாக்யாவில் தொடர்கதையாக விவரித்து எழுதினர். வாசகர்கள் ஆர்வத்துடன் படித்த அந்தத் தொடர்கதை நிறைவடைந்த சில மாதங்கள் கழித்து 1989 நவம்பரில், கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தின் விளைவாகவும், அமெரிக்காவின் தலையீட்டாலும் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. பிரிந்த குடும்பங்கள் இணைந்தன. கிழக்கு-மேற்கு ஜெர்மனிகள் இணைந்து மீண்டும் ஒரே நாடானது. இந்த செய்திகளை அறிந்த வாசகர்கள், “இந்த சுவர்தானே பாக்யாவில் கதையாக வந்தது” என ஆர்வத்துடன் பேசிக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வெளியாகிவந்த முன்னணி பத்திரிகைகள் யாரும் தொடாத ஒரு பிரச்சினையை உணர்ச்சிப்பூர்வமான தொடர்கதையாக வெளியிட்டு, பெயர் பெற்றது பாக்யா.

பத்திரிகை நடத்துவது என்பதை வெறும் ஆர்வமாக மட்டுமில்லாமல், முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு, சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பக்கத்துக் பக்கம் சுவாரசியத்துடன் தனது வாசகர்களுக்கு விருந்து படைத்தவர் ‘பாக்யா’ராஜ்.

-கோவி.லெனின்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.