அங்குசம் பார்வையில் ‘சிங்கீதம்’
தயாரிப்பு: நாக் அஷ்வின், இயக்கம்: சிங் கீதம் ஸ்ரீனிவாசராவ். ஆர்டிஸ்ட்: அஹில்யா பம்ரு ( ஹீரோயின்) அயான் ( ஹீரோ), ஷாலினி கொண்டேபுடி, நிவேதா பெத்து ராஜ், ராகுல் ரவீந்திரன், விஜய் தேவர கொண்டா ( சிறப்புத் தோற்றத்தில்) ஒளிப்பதிவு: சி.அங்கூர், இசை: தேவி ஶ்ரீ பிரசாத், எக்ஸ்கியூடிவ் டைரக்டர்: சங்கல்ப் கோரா, ஆர்ட் டைரக்டர்: அரவிந்த் மூலே எக்ஸ்கியூடிவ் புரொடியூஸர்: கீதா கெளதம் , பிஆர்ஓ: யுவராஜ்.
94 வயதில் இப்படியொரு அற்புத உணர்வைத் தரும் சினிமாவைத் தந்ததற்காக டைரக்டர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவுக்கு பணிவான வணக்கத்தையும் மரியாதையையும் சமர்ப்பிக்கிறோம்.
குபேரபுரம் கிராமத்தில் இருக்கும் ஒரு தங்கச் சுரங்கத்தின் ஓனர் ஷாலினி கொண்டேபுடி. இந்த சுரங்கத்தையும் ஷாலினியையும் நம்பி அக்கிராமத்தின் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். அதே ஊரில் மரங்களின் மீதும் இயற்கையின் மீதும் அன்பு கொண்டவராக இருக்கிறார் ஹீரோயின் அஹில்யா பம்ரு. இந்த நிலையில் தான் அந்த தங்கச் சுரங்கத்தின் ஓனர், செத்துப் போன ராகுல் ரவீந்திரனின் மகன், ஹீரோ அயான் அந்த குபேரபுரம் கிராமத்தில் எண்ட்ரியாகிறார்.
ஒருநாள் குபேரனை அஹில்யா வழிபடும் போது, திடீரென பாறை பிளந்து பாதாளத்தில் விழுந்துவிடுகிறார். ஒருவழியாக அங்கேயிருந்து மீண்டு கிராமத்திற்கு வருகிறார். அதன் பின் அந்த குபேரபுரத்தில் எல்லோரும் சாதாரணமாக பேசுவதற்குப் பதிலாக ராகம் போட்டு இழுத்து பாட ஆரம்பிக்கிறார்கள். [ ’மூன்றாம் பிறை’ நரிக்கதை பாடல், ‘குணா’வின் “கண்மணி அன்போட” பாடல் போல} இதற்கெல்லாம் குபேரனின் சாபம் தான் என மக்கள் நம்புகிறார். அந்த சாபத்திலிருந்து கிராம மக்களுக்கு விமோசனம் கிடைத்ததா? இதான் இந்த ‘சிங்கீதம்’.
படத்தில் நடித்திருக்கும் அனைவருமே நமக்குத் தெரியாத தெலுங்கு முகங்கள் [ ஃப்ளாஷ்பேக்கில் நிவேதா பெத்துராஜைத் தவிர] தான் என்றாலும் படத்தின் கதையும் மக்கள் எல்லோரும் பாட ஆரம்பித்த பிறகு நம்மையையும் அறியாமல் நமக்குள் ஏற்படும் சுவாரஸ்ய அனுபவமும் சிங்கீதத்தை ரொம்பவே ரசிக்க வைக்கின்றன.
ஹீரோயின் அஹில்யா பம்ரு துறுதுறுவென இருக்கிறார். தெலுங்கு முன்னணி நடிகர் நானியின் சாயலில் இருக்கிறார் ஹீரோ அயான். இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.
மரம், செடி, கொடி, தாவரம், புல்வெளி என பச்சைப்பசேல் என இருந்த அந்த குபேரபுரம் கிராமம், தங்கச் சுரங்க மாஃபியாக்களின் பண வெறியால் எப்படி கட்டாந்தரை ஆனது என்பதற்கு அருமையான ஃப்ளாஷ்பேக் வைத்து மிரள வைத்துவிட்டார் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ். தங்கப் பேராசையால் மனிதர்கள் அனைவரும் தங்கச் சிலைகளாக உறைந்து போவது, பிறந்த சிசு கூட தங்கமாக மாறுவது, மழைத்துளி பட்டு அந்த சிசுவுக்கு உயிர் வருவது என கம்ப்யூட்டர் டெக்னாலஜியிலும் தான் ஒரு எக்ஸ்பெர்ட் என்பதை நிரூபித்து இன்றைய இளம் இயக்குனர்களுக்கு சவால்விட்டுள்ளார் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ். இதைவிட இன்னும் ஒரு ‘ஸ்பெஷல் டச்’ என்னனா… இடைவேளை முடிந்து படம் போட ஆரம்பிக்கும் முன்பு வரும் சிகரெட், மது குறித்த எச்சரிக்கையையும் சங்கீதம் போலவே சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் சொல்லியிருப்பது தான்.
படத்தின் ஆன்மபலம் என்றால் தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை தான். மக்கள் பாட ஆரம்பித்த பிறகு தனது பின்னணி இசையால் அதை முழுமையான சங்கீதம் போலவே உணரச்செய்துள்ளார் தேவி ஸ்ரீபிரசாத். சிங்கீதம் ஸ்ரீனிவாசராவின் சிந்தனைக்கு உயிர் கொடுத்து பிரமிக்க வைக்கிறார் கேமராமேன் அங்கூர்.
க்ளைமாக்ஸில் விஜய் தேவரகொண்டாவை கேமியோ ரோலில் எண்ட்ரியாக்கி, அதிலும் தனது ‘டச்’சை வைத்து ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் வரும் இசைஞானியின் “ரம்பம்பம்….ஆரம்பம்….” பாடலை கச்சிதமாக கனெக்ட் பண்ணிய சிங்கீதம் ஸ்ரீனிவாசராவுக்கு ஒரு சல்யூட்.
அங்குசம் பார்வையில் ‘சிங்கீதம்’ 80/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.