‘பராசக்தி’ ஆரம்பம் வள்ளுவர் கோட்டம்! அடுத்தது அண்ணா அறிவாலயம்? ஆகாஷ் பாஸ்கரன் அதிரடி!
டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததாக கதையை அவிழ்த்துவிட்டு, டான் பிக்சர்சஸ் ஆகாஷ் பாஸ்கரனை சிக்க வைக்க நினைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செருப்படி வாங்கியது மோடி சர்க்காரின் அமலாக்கத்துறை. இந்தத் துறையின் துணை இயக்குனர் மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு அமலாக்கத்துறையின் மானம் கப்பலேறியது. அமலாக்கத்துறையின் கேடுகெட்ட ஆட்டத்தை உயர்நீதிமன்றத்தின் மூலம் குளோஸ் பண்ணினார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்.
அப்பேர்ப்பட்ட ஆகாஷ் பாஸ்கரன் தனது டான் பிக்சர்ஸ் தயாரித்து பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணவிருக்கும் ‘பராசக்தி’ படத்தின் விளம்பர துவக்க நிகழ்ச்சியை டிச.18-ஆம் தேதி மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தி அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
1960-களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை அடிப்படையாக வைத்து சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உட்பட பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு : ரவி கே.சந்திரன், எடிட்டிங் : சதீஷ் சூர்யா, காஸ்ட்யூம் டிசைனர் : பூர்ணிமா.
இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் ‘பராசக்தி’யின் முதல் புரமோ நிகழ்ச்சியை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆரம்பித்துள்ளார் ஆகாஷ் பாஸ்கரன். கோட்டத்தில் எழில்மிகு தேர் நிற்கும் புல்வெளி மைதானத்தின் முன்பாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமாவின் ஐடியாப்படி சேலை-ஜாக்கெட்,தலையில் மல்லிகைப்பூவுடன் அமர்க்களமாக எண்ட்ரியானார்கள் டைரக்டர் சுதா கொங்கராவும் ஹீரோயின் ஸ்ரீலீலாவும். ஹீரோக்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பட்டு வேட்டி-சட்டையில் பளிச்சென இருந்தனர். தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மட்டும் லைட் கலர் பேண்ட், கருப்புச் சட்டையுடன் வந்தார்.
“இந்த வள்ளுவர் கோட்டத்தில் ‘பராசக்தி’யின் முதல் நிகழ்ச்சி நடப்பதே பெருமைக்குரியது. படம் குறித்தும் படம் பேசும் அரசியல் குறித்தும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் அளப்பரிய உழைப்பு குறித்தும் டிரைலர் வெளியீட்டு விழாவில் விரிவாகப் பேசிகிறேன். இந்த ‘பராசக்தி’யை மாபெரும் படமாக்கிய தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நன்றி. இப்போது எனக்கு அந்த ‘பராசக்தி’யின் ஆசி கிடைத்த்திருப்பதாக உணர்கிறேன்” என கலைஞரின் ‘பராசக்தி’யை மறைமுகமாக குறிப்பிட்டு சுருக்கமாக பேசினார் சிவகார்த்திகேயன்.
டைரக்டர் சுதா கொங்கரா, ரவிமோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் சுருக்கமாக பேச, மாலை 6.45-க்கு ஆரம்பித்த விழா 7.15-க்கெல்லாம் நச்சென முடிந்தது.
அதே வள்ளுவர் கோட்டத்தில் உள்ள இன்னொரு அரங்கத்தில் ’World of Parasakthi’ என்ற செட் போடப்பட்டுள்ளது. இந்தி எதிர்புப் போர் நடந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார் ஆகாஷ் பாஸ்கரன்.
இந்த மாதக் கடைசியிலோ 2026 ஜனவரி முதல் வாரத்திலோ ‘பராசக்தி’யின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி, அடுத்த அதிரடியை நிகழ்த்த திட்டம் வைத்துள்ளாராம் ‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன்.
“பராசக்தி’டா…..
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.