தகுதி இல்லாத நபரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக தன்னிச்சையாக நியமிப்பதா ? அமைச்சரின் தொகுதியில் எழுந்த சர்ச்சை !
தகுதி இல்லாத நபரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக தன்னிச்சையாக நியமிப்பதா ? அமைச்சரின் தொகுதியில் எழுந்த சர்ச்சை ! திருச்சி மாவட்டம் அன்பில் அரசு மேநிலைப்பள்ளியில் எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் தகுதியற்ற நபர் ஒருவரை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள், பெற்றோர்கள் தரப்பில்.
இது தொடர்பாக, அன்பில் கிராமத்தை சேர்ந்த பெற்றோர்கள் சார்பில், கே.உதயகுமார் மற்றும் சிலர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் கே.உதயகுமாரிடம் பேசினோம். “மங்கம்மாள்புரம் ஊராட்சியில் அமைந்திருக்கும் இந்த பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் சுமார் 700-க்கும் அதிகமான இருபாலார் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அன்பிலை சுற்றி அமைந்துள்ள சுமார் 10-க்கும் அதிகமான கிராமங்களிலிருந்து மாணவர்கள் வருகை புரிகின்றனர்.அன்பில் –

தற்போதைய நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பள்ளியின் அன்றாட பராமரிப்பு உள்ளிட்டு, பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்துவது; மாணவர்களின் கல்வியில் அக்கறை செலுத்துவது; மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்டு பல்வேறு விசயங்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் பொறுப்பெடுத்து செய்து வருகிறது.
மராமத்து பணிகளை மேற்கொள்வது தொடங்கி, தற்காலிகமாக ஆசிரியரை நியமிப்பது வரையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒப்புதல் அவசியம். இந்த சூழலில்தான், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், முறையாக பெற்றோர்களுக்கு தகவல் சொல்லி கூட்டம் கூட்டாமல், தலைமை ஆசிரியரே தன்னிச்சையாக தலைவர், துணைத்தலைவரை அறிவித்திருக்கிறார்.
அதுவும் அந்தப் பதவிக்கு தகுதியே இல்லாத ஒரு நபரை நியமித்திருப்பது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தற்போது, தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் திருமறைநம்பி என்பவர் எந்நேரமும் குடிபோதையில் இருப்பவர். எட்டாம் வகுப்பைக்கூட நிறைவு செய்யாதவர்.
இவர் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. குறிப்பாக, பெண் துன்புறுத்தல் வழக்கின் கீழும் இவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். இத்தகைய ஒரு நபரை தலைவராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதே எங்களது கேள்வி. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுள் 70% அதிகமான மாணவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்கள்.

ஆனால், அந்த சமூகத்திற்குரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. அந்த சமூகத்தில் பிறந்து, பல்வேறு உயர் கல்வி தகுதி பெற்றவர்கள் நிறைய இருக்கிறார்கள். சுழற்சி முறையில் மற்ற சமூகத்திற்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். ” என்கிறார், அவர்.
பெற்றோர் தரப்பில் அனுப்பி வைத்திருந்த வீடியோ பதிவொன்றில், ஏதோ ஒரு தகராறின்போது தற்போது, தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் திருமறைநம்பி “நல்லா எடு. அவுத்துப்போட்டு அம்மணமா நிப்பேன்” என்று பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அன்பில் கிராமத்தில் திருமறைநம்பியை தவிர, பொருத்தமான வேறு நபர்களே இல்லையா? எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதுவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த ஊரில் அமைந்திருக்கும் அரசுப்பள்ளி ஒன்றிலிருந்தே இத்தகைய சர்ச்சை எழுந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, பள்ளித் தலைமை ஆசிரியர் தாமோதர கண்ணனிடம் பேசினோம். “முறைப்படி கூட்டம் நடத்திதான் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவரை தேர்ந்தெடுத்திருக்கிறோம். இதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை.” என்பதாக தெரிவிக்கிறார்.
மாவட்ட கல்வி அலுவலர் (இலால்குடி) சங்கரிடம் பேசினோம். “எனது கவனத்திற்கும் வந்தது. இன்று நேரில் சென்று விசாரிக்கலாம் என்றிருந்தேன். வேறு வேலை காரணமாக செல்ல முடியாமல் போய்விட்டது. கண்டிப்பாக, இது குறித்து நேரில் விசாரணை நடத்துகிறேன். விதிமீறல் இருப்பதாக தெரிந்தால் நடவடிக்கை எடுக்கிறேன். உங்களுக்கும் தகவல் தெரிவிக்கிறேன்.” என்பதாக பதிலளித்திருக்கிறார்.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவை தொடர்பு கொண்டோம். அவர் சார்பில் பேசிய உதவியாளர், ”எங்கள் கவனத்திற்கும் வந்திருக்கிறது. சம்பந்தபட்ட தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கோரியிருக்கிறோம். அவரது பதிலை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம்.” என்பதாக தெரிவிக்கிறார்.
மாணவர்களுக்கு வழிகாட்டி அவர்களை நல்வழிப்படுத்தும் மேன்மையான பொறுப்புகளை உள்ளடக்கிய, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உள்ளிட்ட அதன் பிரதிநிதிகள் தேர்வு உரிய சட்டமுறைகளின்படியும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!
– ஆதிரன்.