பேனர் விவகாரம்… எடப்பாடிக்கு”ட்விஸ்ட்”கொடுத்த பெரிய கருப்பன்..!
பேனர் விவகாரம்… எடப்பாடிக்கு”ட்விஸ்ட்”கொடுத்த பெரிய கருப்பன்..!
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற ‘சிறப்பு மக்கள் இயக்கம்’ அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டத்தின்போது துவங்கப்பட்டது.
இந்த இயக்கமானது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை மற்றும் நெகிழி கழிவு மேலாண்மை, ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமப்புற மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டது.
நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் குப்பைகள் அதிகம் சேகரமாகியிருந்த 47,399 இடங்கள் கண்டறியப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
21,775 பள்ளிகள், 22,695 அங்கன்வாடி மையங்கள், 45,824 அரசு கட்டிடங்கள், 70,011 சமுதாய சுகாதார வளாகங்கள் தூய்மைப் படுத்தப்பட்டன.
47,949 நீர் நிலைகள், 1,569 கீ.மீ அளவிலான கழிவுநீர் வடிகால்களும் சுத்தம் செய்யப்பட்டன.
இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக பசுமைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு 4.36 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
முன்னதாக இந்த இயக்கம் தொடர்பான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன. நோட்டீஸ்களும் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,இந்த திட்டம் குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.
நம்ம ஊரு சூப்பரு திட்ட விளம்பர பேனர் அடித்ததில் ஊழல் நடந்துள்ளது.
பேனர் ஒன்றுக்கு ரூபாய் 7,906 வரை செலவு என கணக்கு காட்டி கொள்ளை என்று புகார் தெரிவித்தார்.
இந்த புகார்களுக்கு பதில் அளித்த அமைச்சர் பெரிய கருப்பன், எடப்பாடி பழனிச்சாமியை வறுத்தெடுத்தார்.
அவர் பேசுகையில்,
மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் இந்த விளம்பர பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஒன்பது மாவட்டங்களில் ஊராட்சிகளின் வாயிலாக அப்பகுதியிலுள்ள அச்சகங்களின் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொத்தம் 84,653 எண்ணிக்கையிலான விளம்பரப் பதாகைகள் பல்வேறு அளவுகளில் (அதாவது 6×4, 12×8, 10×8 அடி) அச்சடிக்கப்பட்டுள்ளன.
சராசரி மதிப்பீடாக பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் (சரக்கு மற்றும் சேவைக்கட்டணம் உட்பட) செலவிடப்பட்டுள்ளது
என்று புள்ளிவிவரங்களை அடுக்கினார்.
அதற்கு பிறகு வழக்கமான அரசியல்வாதியாக பேச தொடங்கினார்.
அதிமுக ஆட்சியில் 2800 ரூபாய் பேனருக்கு 28,000 பில் எடுத்தனர்.
20 வாட் எல்.இ.டி.பல்ப் ஒன்றின் விலை500ரூபாய்.அதற்கு ஒரு பல்ப் 5000ரூபாய் என்று பில் எடுத்தனர்.
90 வாட் பல்பு 4500ரூபாய்க்கு 15000 ரூபாய் பில் எடுத்தனர்.
அது போல நாங்கள் செய்தோமா…
பேனர் எப்படி இருக்கவேண்டும் என்ற டிசைன் மட்டும் தான் அரசு அனுப்பியது.
பேனர் செலவினம் அந்தந்த ஊராட்சியை சேர்ந்தது.
இதில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்ட ஊ.ம தலைவர் தான் பொறுப்பு.
அதிமுகவை சேர்ந்த பல ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கேட்டு இருக்கலாம்.
யாரோ சொன்ன தவறான தகவலை கேட்டு…ஊழல் என்கிறார்.
கூட இருந்தே குழி பறிக்கும் நபர்களிடமிருந்து எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக ஆட்சியில்,குறைகள் தெரிவிக்கப்பட்டால் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே விளக்கம் கொடுப்பது வழக்கம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டிக்கு முதல்வரின் விளக்கம் இல்லாத நிலையில் ஒரே நாளில் சேகர் பாபு, பெரிய கருப்பன் போன்ற அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– அரியலூர் சட்டநாதன்