பாமக மாவட்டத் தலைமை எடுத்த மாற்று முடிவு-ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருப்பம்!
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தலைமை திமுகவோடு நெருங்கிப் பழகும் அதேவேளையில் அதிமுக கூட்டணியில் இருந்து தற்காலிகமாக பிரிந்து தனித்து போட்டியிடுவதாக தலைமை அறிவித்திருப்பது மாவட்ட நிர்வாகிகளை கலக்கமடைய செய்திருக்கிறது.
குழப்பத்தில் பாமக நிர்வாகிகள்
திமுக தற்போதுதான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து இருக்கிறது. அதனால் வெற்றி பெறுவதற்கு பல மடங்கு முயற்சி செய்வார்கள், மேலும் பணப்புழக்கமும் அதிகமாக இருக்கும் அவர்களோடு பணத்திலும் சரி, அதிகாரத்திலும் சரி… நம்மால் ஈடு செய்ய முடியாது. அதிமுகவோடு இணைந்து பயணித்தால் தான் போட்டியிடும் தொகுதிகளில் சிலவற்றிலாவது வெற்றி பெறமுடியும். தனித்துப் போட்டி என்று அறிவித்து இருப்பது நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம் என்று ராணிப்பேட்டை மாவட்ட பாமக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவெடுத்திருக்கிறார்களாம்.
அதிமுக – பாமக மாவட்ட நிர்வாகிகளின் உடன்பாடு
இதன் தொடர்ச்சியாக மாநிலத் தலைமைக்கு சேதி சொல்லி விட்டு அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்த மறைமுக ஆலோசனையை நடத்தத் தொடங்கி விட்டார்களாம். மேலும் அதிமுகவுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற ராணிப்பேட்டை மாவட்ட பாமக நிர்வாகிகள் ஒருமனதாக உள்ளார்களாம். மேலும் அதிமுக மாவட்ட நிர்வாகிகளும் இதை ஒரு மனதாக ஏற்றுள்ளார்களாம்.