திருப்பத்தூரை திணறவைத்த போலீஸ் ரெய்டு ! ஸ்பாவில் விபச்சாரம் … டன் கணக்கில் சிக்கிய போதை பொருட்கள் … ரேஷன் அரசி !
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 11 மற்றும் 13 தேதிகளில் நடத்தப்பட்ட , ரெய்டில் 619 கிலோ போதை பொருட்களும் , 1.5 டன் ரேஷன் அரிசியும் , பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேர் உள்பட , 17 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருட்களின் பயன்பாடு தொடர்பாக பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
வடக்கு மண்டல ( வேலூர்) ஐஜி அஸ்ராகார்க் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா மேற்பார்வையில், துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிரடி ரெய்டை நடத்தியிருக்கிறார்கள்.
முதல்நாள் நடைபெற்ற ரெய்டில் , ஜோலார்பேட்டை வெங்கடேசன் மளிகை கடையில் சுமார் 9 கிலோ போதை பொருட்களும், வாணியம்பாடி செட்டியப்பனூர் பகுதியில் விஜயா என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 6 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக ஆந்திரா எல்லைப்பகுதியான (வாணியம்பாடி பகுதிக்குட்பட்ட) சிந்தாகமணிபெண்டா மலை கிராமத்தில் முனிவேலின் பெட்டிக்கடையில் ஹான்ஸ், மற்றும் டெட்ரா பாக்கெட்டுகளை கைப்பற்றினர். அதேபோல் நியூடவுன் ஜீவா நகரில் உள்ள (தனியார்) மெட்ரிக் பள்ளி அருகில் ஷாஹீன் என்பவர் நடத்தி வந்த பெட்டி கடை மற்றும் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதில் 6 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல் சாணங்குப்பம் பகுதியில் பாண்டியன் என்பவரின் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 268 கிலோ குட்காவை பறிமுதல் செய்து மூவர்களையும் கைது செய்தனர்.
இரண்டாம் நாள் நடைபெற்ற ரெய்டில், திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிந்து குமாரின் கடையில் 80 கிலோ குட்காவும், நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த பூவரசன் என்பவரிடம் 81 கிலோ போதை பொருட்களும் கைப்பற்றி கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவரின் கடையில் 400 குட்கா பாக்கெட்டுகளும், திருப்பத்தூர் நகரில் உள்ள தண்டபாணி கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த , லட்சுமணன் , பிரசாந்த்குமார், அல்லா பக்கஷ் ஆகிய மூன்று பேர்களின் கடையில் சோதனை மேற்கொண்டதில் சுமார் 23 கிலோ குட்கா கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 03.10.2024 அன்று வாணியம்பாடி தும்பேரி கூட்ரோடில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 1.5 டன் ரேஷன் அரிசியை வாகனத்தோடு பறிமுதல் செய்துள்ளனர். சங்கர்,சரத் ,ராஜா . நந்தகுமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி எதிரே உள்ள அனீஸ் ஸ்பாவில் சேலம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை வைத்து ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாக வந்த தகவலின் பேரில் அங்கு திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உள்பட புரோக்கர் தமிழ்செல்வன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இத்தகைய சோதனை நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா, குட்கா, டெட்ராஸ், போன்ற போதைப் பொருள்கள் விற்பனை, பதுக்கல், கடத்தல் போன்றவற்றைத் தடுக்க, அமைக்கப்பட்ட தனிப்படைகள் தொடந்து இயங்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருள் அறவே இல்லாதநிலையை உருவாக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றும், போதைப் பொருள் ரேசன் அரிசி கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. திருமதி.ஷ்ரேயா குப்தா. மேலும், போதைப்பொருள் கடத்தி அதனை பதுக்கி விற்பணை செய்பவர்களை பற்றி 91599 59919 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறும்; போதை பொருள் இல்லாத திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்க எங்களோடு இணைந்து செயல்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார், எஸ்.பி.
– மணிகண்டன்