பச்சமலையில் ஆய்வில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.பி!.
பச்சமலையில் ஆய்வில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.பி!.
திருச்சி மாவட்டம் , துறையூர் , உப்பிலியபுரம் , பச்சமலைப் பகுதியில் சரக்கு மற்றும் போதைப் புகையிலை, பாக்கு விற்பனை அமோகமாக நடப்பதால் அப்பகுதி மாணவ- மாணவிகள், பயணிகள், பெண்கள் பாதிக்கப்படுவதாக நமது, “அங்குசம் செய்தி” இதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து முசிறி டிஎஸ்பி அருள்மணி தலைமையில், துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், உப்பிலியபுரம் எஸ்.ஐ பெரியமணி உள்ளிட்ட போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு,
குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிலரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், கடந்த 23ம்தேதி எஸ்பி சுஜித்குமார் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி முத்தரசு, மதுவிலக்கு பிரிவு முசிறி இன்ஸ்பெக்டர் சுமதி, வனத்துறையைச் சேர்ந்த வனவர் ரஞ்சித்குமார், வனக்காப்பாளர் விவேக், துறையூர் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட 40 பேர் அடங்கிய குழுவினர் நேற்று பச்சமலைப் பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர்.
பச்சமலை டாப் – செங்காட்டுப்பட்டி, கம்பூர், தண்ணீர்பள்ளம், புத்தூர், நச்சிலிப்பட்டி புதூர் ஆகிய இடங்கள் மற்றும் கோரையாறு அருவி செல்லும் வழித்தடங்களில் இறங்கிச் சென்றும் ஆய்வு செய்தனர். ஆனால் எப்படியோ மோப்பம் பிடித்த சரக்கு விற்கும் பார்ட்டிகள் எல்லைத் தாண்டி சென்று விட்டனர். மேலும் செய்தி வெளியான சில நாளிலேயே சம்மந்தப்பட்ட சிலரை கைது என்ற பெயரில் கணக்கு காட்டி விட்டு , நாங்களும் விழிப்போடு தான் இருக்கிறோம் என்று மார்தட்டிக் கொண்டது உப்பிலியபுரம் போலீஸ். இது குறித்து மேலும் விசாரிக்கையில், நாம் ஆதாரத்துடன் வெளியிட்ட போதைப் புகையிலை, பாக்கு விற்ற நபரிடம் 10க்கும் மேல் ஆயிரங்களைக் கறந்ததாகவும், சரக்கு விற்ற நபர்கள் சிலரிடம் தலா 10 ஆயிரம் என உப்பிலியபுரம் போலீசார் கல்லா கட்டியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட எஸ்.பி பச்சமலைப் பகுதிகளில் திடீர் ஆய்வு செய்து ஒரு குற்றவாளி கூட பிடிபடவில்லை.
இதேபோல் சில வருடங்களுக்கு முன்பு பச்சமலையில் டாப்செங்காட்டுப்பட்டி பகுதியில் குடிபோதையில் பள்ளி மாணவிகளைத் தகராறு செய்த விவகாரத்தில் மலைவாழ் மக்கள் போராட்டத்தில் குதிக்க, முசிறி டிஎஸ்பி தலைமையில் பச்சமலைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதில் சமாதானம் அடைந்தனர்.
தற்போது ஐஜியாக இருக்கும் பாலகிருஷ்ணன், அப்போது டிஐஜி யாக இருந்தார். இது பற்றி அவர் தகவல் அறிந்ததும் பெரம்பலூரில் இருந்த போலீசாரைக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சாராயம் மற்றும் டாஸ்மாக் சரக்கு விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்து. இதற்கான தனிப்படை அமைத்து கண்காணித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே சாராயம் காய்ச்சும் தொழில் செய்பவர்கள், நடமாடும் டாஸ்மாக் சரக்கு விற்கும் நபர்களைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜோஸ்