பொன்முடி : திமுக தேர்தல் பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கி வைத்த ஆளுநர் !
குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.இரவியைத் திரும்பப் பெற்றுத் தமிழ்நாட்டில் அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடைபெற ஒத்துழைப்பு நல்கவேண்டும். குடியரசுத்தலைவர் தமிழ்நாட்டு மக்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்பாரா ?
பொன்முடிக்குப் பதவி பிரமாணம் – ஆளுநர் மறுப்பு
உச்சநீதி மன்றக் கட்டளை பணிந்தார் – மன்னிப்பு கேட்டார்
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் அவரை மீண்டும் அமைச்சராக்கப் பரிந்துரைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி கடிதம் எழுதினார். கடிதம் கிடைத்தபின், கடிதம் தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் ஆளுநர் டெல்லி பறந்தார். 3 நாள்கள் கழித்துச் சென்னை திரும்பினார். அதன்பின்னர் ஆளுநர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துத் தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதினார். அதில்,“பொன்முடி மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் குற்றமற்றவர் என்று விடுதலை ஆகவில்லை அதனால் பொன்முடிக்கு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்யவைக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்துத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கு நேற்று (21.03.2024) விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘‘பொன்முடிக்கு பதவியேற்பை ஆளுநர் நடத்தாதது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நாளை (22.03.2024) வரை ஆளுநருக்கு அவகாசம் வழங்குகிறோம். அதற்குள் அரசியல் சாசனச் சட்டப்படி நடந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால் நாங்கள் ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” எனக் கடுமையாக எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து காலை 11.00 மணிக்குப் பொன்முடிக்கு அமைச்சராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்துவைப்பார் என்று எல்லாரும் எண்ணியிருந்த நிலையில் எந்த அறிவிப்பும் ஆளுநர் மாளிகையிலிருந்து வெளிவரவில்லை. இதற்கிடையே ஆளுநர் பதவி விலகுகிறார் என்ற தகவலும் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்த வந்த வண்ணம் இருந்தது. பிற்பகல் 2.00 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒன்றியத் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆளுநர் பிற்பகல் 3.30 மணிக்குப் பொன்முடிக்கு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்துவைக்கிறார் என்ற தகவல் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து பொன்முடி பதவியேற்பிற்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடி அமைச்சராக இன்று(22.03.2024) மாலை 3.30 மணிக்குப் பதவியேற்றார். இந்நிலையில், பொன்முடி பதவி பிரமாண வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல் மீறி வருவதையும், கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டவுடன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் ஆளுநராகப் பொறுப்பு வகிக்கத் தகுதியற்றவர் என்பது முழுமையாகத் தெரிந்துவிட்டது. குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.இரவியைத் திரும்பப் பெற்றுத் தமிழ்நாட்டில் அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடைபெற ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குடியரசுத்தலைவர் தமிழ்நாட்டு மக்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆதவன்