தள்ளிப்போகும் நகர்ப்புற உள்ளாட்சி – செலவு செய்த உடன் பிறப்புகள் வேதனை!
திருச்சி மாநகரப் பகுதியில் உள்ள உடன்பிறப்புகள் இடையே இருக்கக்கூடிய மிக முக்கிய பிரச்சினை கவுன்சிலர் சீட் யாருக்கு என்பது தான், இதற்காக மாநகராட்சி பகுதியில் உள்ள உடன்பிறப்புகள் பலரும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு அதிகம் கிடைக்க வேண்டும் என்று ஓடி ஓடி பிரச்சாரம் செய்தனர்.
மேலும் தற்போதைய அமைச்சர்கள் இருவர் கண்ணில் படும்படி அதிகப்படியான வேலைகளைச் செய்தனர். காரணம் அவர்கள் கவுன்சிலர் சீட்டை எதிர்பார்த்துக் காத்திருப்பது தான். திமுக ஒரு வார்டை சில பகுதிகளில் இரண்டாக பிரித்து நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு வார்டில் உள்ள இரண்டு வட்டச் செயலாளர்களுமே கவுன்சிலர் சீட்டை பெற போட்டி போடுகின்றனர். மற்றொருபுறம் வார்டில் உள்ள முக்கிய நிர்வாகிகள், பணபலம் உள்ள நிர்வாகிகள், தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள் என்று பலரும் கவுன்சிலர் சீட்டுக்காக காய் நகர்த்தி, தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
இதற்காக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அமைச்சர்களை அழைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி தங்களுடைய செல்வாக்கை அமைச்சருக்கு காட்டியிருக்கின்றனர். பண பலம் இல்லாதவர்கள் ஓடியாடி வேலை செய்து தங்களுடைய உழைப்பை காட்டி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னும் தேர்தல் நடத்த ஆறு மாத காலம் எடுக்கும் என்று மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கூறியிருந்தார், இதை உறுதிப்படுத்தும் விதமாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மறு வரையறை செய்யப்பட்டு வருகிறது. செய்யப்பட்டு முடித்தவுடன் 100 நாட்கள் மக்கள் கருத்துகேட்பு நடத்தப்படும் பிறகு இரண்டாவது தவணையாக 30 நாட்கள் மக்கள் கருத்துகேட்பு நடத்தப்படும். இதெல்லாம் முடித்த பிறகுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு 4 மாதம் அவகாசம் கேட்டு விண்ணப்பித்திருந்தது. உச்சநீதிமன்றமும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தகவல் கேள்விப்பட்டவுடன் திருச்சியில் இருக்கக்கூடிய கவுன்சிலர் போட்டியில் முன்னணியில் உள்ள நபர்கள் பலரும் என்னடா இது தள்ளிப் போயிட்டே இருக்கே என்று மனவேதனையில் இருக்கிறார்களாம். மேலும் சிலர் ஜாதக பிரச்சினையாக இருக்கலாமோ என்று குலதெய்வக் கோயிலுக்கும் போக உள்ளார்களாம், சிலர் நேர்த்திக்கடனை நிறைவேற்ற உள்ளார்களாம்.
இப்படி ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள கவுன்சிலர் போட்டிக்கான வரிசையில் முன்னணியில் நிற்பவர்கள் விரைவாக தேர்தலை நடத்த வேண்டும் என்று வேண்டுதலை நோக்கிச் சென்று இருக்கின்றனர்.
இது மட்டுமல்லாது தங்கள் வார்டு பெண்கள் வாட் ஆக இருக்கக் கூடாது என்றும் வேண்டுதல் செய்து வருகிறார்களாம். ஒருவேளை பெண்கள் வார்டாக இருந்தாலும் தங்கள் மனைவிக்கு சீட்டைப் பெற்றுத் தர வேண்டும் என்ற முயற்சியில் உள்ளார்களாம்.