ஆசிரியர் சமூகத்தின் தொழிலாளர் வர்க்கக் குரல் தோழர் மா. ச. முனுசாமி தனது உலகப் பயணத்தை முடித்துக் கொண்டார்!
ஆசிரியர் சமூகத்தின் தொழிலாளர் வர்க்கக் குரல் தோழர் மா. ச. முனுசாமி தனது உலகப் பயணத்தை முடித்துக் கொண்டார்!
“நாங்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்! நாங்கள் போர்க் குணம் மிக்க தொழிலாளர் வர்க்கம்!” என்று தனது உயிர் மூச்சு நிற்கும் வரை உரக்கச் சொன்னவர் ஆசிரியர் பெருந்தகை மா. ச முனுசாமி. இன்று (17.11.2024) காலை அவர் காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒப்படைக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்து மறைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி ஆசிரியர் மா. ச. முனுசாமி அவர்கள் அறிவியல் பூர்வமான வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை என்று தனது இறுதி நாட்களில் அழுத்தமாகச் சொல்லி வந்தவர்.
சமமான கற்றல் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நீண்ட நெடிய போராட்டம் “சமச்சீர்க் கல்வி” போராட்டமாக உருவெடுத்த போது, ஆசிரியர் இயக்கங்களின் முதல் குரலாய் ஒலித்தது ஆசிரியர் மா. ச. முனுசாமி அவர்களின் குரல்.
சமச்சீர்க் கல்வி போராட்டத்தின் தொடக்கத்தில் முதல் கருத்தரங்கை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடத்தும் என்று சொன்னது மட்டுமல்லாமல் அதை பெருந்திரளான ஆசிரியர் பங்கேற்போடு நடத்தியும் காட்டினார். மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கருத்தரங்கம் நடந்தது.
- சமச்சீர்க் கல்வி என்பது தொழிலாளர் வர்க்கக் கோரிக்கை. எல்லோருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு கிடைத்தால்தான் கண்ணியமிக்க வாழ்க்கைக்கான உத்தரவாதம் உறுதிப்படுத்த முடியும்.
- பணி சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் ஆசிரியர் சங்கங்கள் கல்வி வளர்ச்சி சார்ந்த கோரிக்கைகளை இணைந்தே முன்னெடுக்க வேண்டும்.
- ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் எப்போதும் போர் குணம் மிக்கவர்கள். தங்களின் நலனை முன்னிறுத்தாமல் மக்களின் நலனை முன்னிறுத்துபவர்கள்.
- ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் நடத்திய எந்தப் போராட்டமும் தோற்றதாக சரித்திரம் இல்லை.
- சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உறுதிசெய் நமது போராட்டங்களை வலுப்படுத்துவோம் என்று ஒவ்வொரு சந்திப்பிலும் அவர் முழக்கமிடுவார்.
தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவுக் குறிப்புகளை ஒன்றிய அரசு 2016ல் வெளியிட்டவுடன் அதற்கான கூட்டத்தைக் கூட்டி ஆசிரியர்களுடன் உரையாடலைத் தொடங்கி வைப்பதில் பெரும் முனைப்புடன் செயல்பட்டார். “நீட்” எதிர்ப்பு என்பது சந்தையிடம் இருந்து நமது மாணவர்களைக் காக்கின்ற போராட்டம் என்பதை முதலில் உணர்ந்த ஆசிரியர் இயக்கத் தலைவர் தோழர் மா. ச. முனுசாமி அவர்கள். தனது வயது முதிர்ந்த காலத்தில் சாதி ஒழிப்பிற்கான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். சாதி என்பது சமூகத்தின் அவமானம். இதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கான உரையாடலை நிகழ்த்துவோம் என்று தொடர்ந்து கூறிவந்தார்.
கவிஞர் தணிகைச்செல்வன் மறைந்தார் என்று கேள்விப்பட்ட உடனே, “எனது ஆருயிர் நண்பனை இழந்துவிட்டேன்” என்று தொலைபேசியிலேயே கதறி அழுதார். சற்று அமைதியாக இருங்கள். உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். நான் நேரில் வருகிறேன் என்று பதில் கூறினேன். அதுதான் அவருடனான எனது கடைசி உரையாடல். அதன் பின்னர் அவரை சந்தித்துப் பேச வாய்ப்பு ஏற்படவே இல்லை.
அடுத்த சில வாரங்களில் முழுமையாக அமைதியாகிப் போவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் பேசிய அந்தக் கடைசி வார்த்தை என் நெஞ்சைச் சுடுகிறது. மிகுந்த அன்பு கொண்டவர். தோழமை உணர்வுடனே அவரது உரையாடல் அமைந்திருக்கும். இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) வலுப்பெற வேண்டும். பெரும் மக்கள் சக்தியாகக் கட்சி உருவெடுக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்.
அதற்கான உரையாடலை மக்களிடம் நிகழ்த்த வேண்டும் என்பதே அவரது திட்டமாக இருந்தது. போர்க் குணமிக்க புரட்சியாளர்கள், அடுத்த தலைமுறைக்குப் பணிகளை விட்டுச் செல்வார்கள். தொழிலாளர் வர்க்கமாக மக்களை அணிதிரட்டி, சாதியை ஒழித்து, வர்க்க பேதமற்ற சமூகத்தைக் கட்டமைக்கும் பொறுப்பை நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார் தோழர் மா. ச. முனுசாமி. ஆசிரியர் இயக்க வரலாற்றை எழுதியவர் இன்று வரலாறாய் நிற்கிறார்.
ஆசிரியர் தோழர் மா.ச. முனுசாமி அவர்களுக்குச் செவ்வணக்கம்! வீர வணக்கம்! அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன், பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு