தமிழ் ஊடக நண்பர்கள் மருத்துவ வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது கவனம் !
தமிழ் ஊடக நண்பர்கள் மருத்துவ வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு ஏற்படுவதை ஆங்கிலத்தில் heart attack – myocardial infarction என்றும் தமிழில் மாரடைப்பு என்றும் அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
அதேநேரம் பிறக்கும் போதே ஏற்படும் குறைபாடுகளால் எப்படி மற்ற உறுப்புகள் பாதிக்கப்படுகின்றதோ, அதேபோல இதயமும் பாதிக்கப்படலாம். அந்த பாதிப்பு அதிகமாக இருந்தால் சில நேரங்களில் சிறுவயதில் உடனடி இறப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
Hypertrophic cardiomyopathy எனப்படும் இதய தசை வீக்க நோய், Long QT syndrome, Wolff-Parkinson-White syndrome போன்ற இதயதுடிப்பு கடத்துதல் நோய்கள், இதய வால்வு பிரச்சனைகள், Arrhythmia எனப்படும் சீரற்ற இதயத்துடிப்பு போன்ற பல நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
இவற்றை மாரடைப்பு (Heart attack) என அழைக்கக்கூடாது, இதயச் செயலிழப்பு (cardiac arrest) என அழைப்பதே பொருத்தமாக இருக்கும். இந்தச் செய்தியின் ஆங்கிலத்தில் வந்த பதிப்புகளில் cardiac arrest என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் அதை இதயச் செயலிழப்பு என குறிப்பிடும் போது பொதுமக்களிடம் ஏற்படும் தேவையற்ற பயத்தையும், குழப்பத்தையும் தவிர்க்கலாம்.