நாய்கள் தொல்லைக்கு பொதுமக்கள் தான் காரணமாம்.. நகராட்சி கமிஷனரின் அடடே பதில்..!
நாய்கள் தொல்லைக்கு பொதுமக்கள் தான் காரணமாம்.. நகராட்சி கமிஷனரின் அடடே பதில்..!
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நாய்கள் பெருகிப் போய், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்கள் தொல்லையால் வீதியில் இறங்கி நடப்பதற்கே அச்சப்படும் சூழல் உள்ளது. குறிப்பாக விரிவாக்கப் பகுதிகளில் அதிகாலையில் நடைப் பயிற்சி மேற்கொள்ளவே பலரும் அச்சப்படும் நிலை உள்ளது. இதுபற்றி துறையூர் நகராட்சி ஆணையரான சுரேஷ்குமாரிடம் நகர்மன்ற உறுப்பினர் முதல் பொதுமக்கள் வரை நேரிலும், மன்றக் கூட்டத்தின் போதும் நாய்கள் மற்றும் பன்றிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிய வருகிறது.இந்நிலையில் 24 வது வார்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரியும் வேளையில் அப்பகுதியில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ஒரு சிறுமியைப் பாய்ந்து கடித்துவிட்டது . உடனடியாக பெற்றோர் மற்றும் அருகிலிருந்தவர்கள் சிறுமியை நாய்களிடமிருந்து காப்பாற்றி விட்டனர் . சிறுமியை மருத்துவமனை சென்று சிகிச்சை செய்துள்ளனர்.
மேலும் இதனை சமூக ஆர்வலர் ஒருவர் நகராட்சி ஆணையரிடத்தில் சொல்லி பொதுமக்கள் சார்பாக விளக்கம் கேட்டபோது, “நாய்களை நானா வளர்க்கிறேன். நாய்கள் பெருகியதற்கு பொதுமக்கள் தான் காரணம். நாய்பிடிக்கிற வேலை எங்களோடது இல்லை. ” என கேள்விக்குரிய பதிலாக இல்லாமல் பொறுப்பற்ற முறையில் , டென்ஷனாக பதில் கூறியுள்ளார். மேலும் நகர்புற விரிவாக்கப் பகுதிகளில் தரமற்ற தார்ச்சாலையாலும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அவதியுறுகின்றனர். இது குறித்து கமிஷனரை சந்தித்து பொதுமக்கள் தங்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து பேச சென்றால் அவர்களை அழைத்து பேசுவதே இல்லையென குற்றம் சாட்டுகின்றனர். இதனால் துறையூர் நகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் என வாரம் அல்லது மாதந்தோறும் ஒரு தேதியை நிர்ணயித்தால் பொதுமக்கள் தங்கள் அடிப்படைப் பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காண ஏதுவாக இருக்கும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் வலுவாக எழுந்துள்ளது.