சிதைக்கப்பட்ட மக்களவை தொகுதி ! மக்களின் ஆவேசம் !

மக்கள் குமுறலுக்கு தீர்வு கிட்டுமா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தொகுதி சீரமைப்பில் சிதைக்கப்பட்ட புதுக்கோட்டை மக்களவை தொகுதி

17ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரகுநாதர் என்ற தொண்டைமான் மன்னரால் புதிதாக இங்குக் கோட்டை கட்டப்பட்டதால் புதுக் கோட்டை என்று பெயர் பெற்றது என்ற கருத்தும் உள்ளது. 1825இல் பழைய ஊரை அழித்துப் புதிய நகரமானது விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1898இல் மன்னர்மார்த்தாண்ட தொண்டைமான் ஐரோப்பா சென்று விக்டோரியா மகாராணியைச்சந்தித்துத் திரும்பியதன் நினைவாக நகரில் ஒரு நகர மண்டபம் வடக்கு இராஜ வீதியில் கட்டப்பட்டது. (புதுக்கோட்டைக்குக் கிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பொற்பனைக்கோட்டை என்னும் கிராமத்தில் சங்ககாலக் கோட்டை இருந்த இடிபாடுகள் இப்போது காணக் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளது போல அகழிகளுடன் கூடிய ஒரே கோட்டை இதுவாகும்) பண்டைய புதுக்கோட்டையின் கிழக்கு பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியைச் சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்துத் தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப்பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக் கப்பட்டது. தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டை சமஸ் தானம் (தனியரசு) மார்ச் 3, 1948இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் நாள் புதுக்கோட்டை மாவட்டமாக உதயமானது.

 

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தொகுதி மறுசீரமைப்பு
2001ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2002ம் ஆண்டில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி சீரமைப்பு நடைபெற்றது. தொகுதி மறுசீரமைப்பு செய்யப் பட்டு 2009ஆம் ஆண்டு 15வது மக்களவைக்கான தேர்தல், நடத்தப்பட்டது. இதன்படி தமிழகத்தில் 13 தொகுதிகள் நீக்கப்பட்டு, 13 புதிய தொகுதிகள் சேர்க்கப்பட்டன. என்றாலும், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39 என்பது மாறவில்லை.
நீக்கப்பட்ட தொகுதிகள் மாவட்டத் தலைநகர் பெயரில் மறுசீரமைப்பில் புதிய தொகுதிகளாக உருவாக்கப்பட்டதை அறியமுடிகின்றது. (ஆரணி தவிர்த்து) அப்படியானால் தொகுதி சீரமைப்பின் நோக்கம் மாவட்டத் தலைநகர் பெயரில் நாடாளுமன்ற மக்களவை இருக்கவேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளமுடிகின்றது. ஆனால் மாவட்டத் தலைநகரமாக உள்ள புதுக்கோட்டை 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி இருந்த நிலையில், அதைச் சீரமைப்பு என்ற பெயரில் ஏன் சிதைத்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. மாவட்டத் தலைநகரமாக இல்லாத ஆரணி மக்களவைத் தொகுதி ஏன் உருவாக்கப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ளமுடியவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளும் திருச்சி, கரூர். சிவகங்கை, இராமநாதபுரம் சார்ந்த மக்களவைத் தொகுதிகளுக்குப் பங்கிடப்பட்டன.

 

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் உள்ள மணப்பாறை சட்டமன்றத் தொகுதி கரூர் மக்களவைக்கும், இலால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் பெரம்பலூர் மக்களவைக்குப் பிரித்தளிக்கப்பட்டுள்ளது.

பொங்கி எழுந்த புதுகை மக்கள் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் புதுக் கோட்டையைக் காணாமல் செய்தவர்களைக் கண்டித்தும், மீண்டும் தொகுதி வேண்டும் என்றும் தன்னார்வலர்களும், அரசியல் கட்சி களும் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் ஆட்சியாளர்களும், தேர்தல் ஆணையமும் போராட்டக் குரல் களை மதிக்கவில்லை. அதனால் மக்கள் எடுத்த முடிவு நோட்டா. தொடர்ந்து நமது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதால் நமது எதிர்ப்பைக் காட்ட வேறு வழியில்லை அதனால் 49ஓ நோட்டாவுக்குத் தங்கள் வாக்குகளைச் செலுத்துங்கள் என்ற பிரச்சாரங்கள் சூடுபிடித்தது. ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பும் சமூக அமைப்புகள் மறுபக்கம் நோட்டாவுக்கு வாக்கு சேகரிப்பும் நடைபெற்றது.

நோட்டாவுக்கு வாக்களித்த மக்கள் நோட்டாவுக்கே என் வாக்கு என்ற அடிப்படையில் 2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,680 பேர் நோட்டாவுக்குத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து எதிர்ப்பைக் காட்டினார்கள். அதன் பிறகு 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேலும் நோட்டாவுக்கான பிரச்சாரம் சூடுபிடித்தது. அதன் பலனாகத் திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு (புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிகள்) 22,848 வாக்குகளும், கரூர் தொகுதிக்கு (விராலி மலை) 13,763 வாக்குகளும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு (ஆலங்குடி, திருமயம்) 8,042 வாக்குகளும், ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதிக்கு (அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி) 6,279 வாக்குகளும் என்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 50,932 வாக்குகள் தொகுதி வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தொகுதி பறிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டாவுக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது இல்லாமல் பல ஆயிரம் பேர் தங்கள் எதிர்ப்பைக் காட்ட வாக்கு சாவடிக்குச் செல்லவில்லை. இத்தனை எதிர்ப்புகளைக் காட்டியும்கூடத் தொகுதியை மீட்கமுடியவில்லை என்ற விரக்தி புதுக்கோட்டை மாவட்ட மக்களிடம் அதிகமானது.

மயிலாடுதுறையை மீட்ட மணிசங்கரய்யர்
மயிலாடுதுறை மக்களவை தொகுதி சீரமைப்பின் பட்டியலில் இடம் பெற்று, தப்பிப் பிழைத்து மீண்டும் மயிலாடுதுறை மக்களவை தொகுதியாகவே நீடித்தது. மயிலாடுதுறை மக்களவையின் 4 சட்டமன்றத் தொகுதிகள் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிகளை இணைத்து, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்டு, அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அப்போது மயிலாடுதுறையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மணிசங்கரய்யர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, கண்டன அறிக்கைகளை வெளியிட்டார்.

அதில்,“நிலவியல் அடிப்படையில்தான் மக்களவை தொகுதிகள் சீரமைக்கப்படவேண்டும். சீர்காழியை அடுத்துச் சிதம்பரம் உள்ளது. இடையில் இயற்கை எல்லையாக இரு ஊர் களுக்கும் இடையில் கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்நிலையில் இந்தத் தொகுதி சீரமைப்பு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை. வேண்டுமானால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தொகுதிகளை மயிலாடு துறை மக்களவைத் தொகுதியோடு இணைத்து, மயிலாடுதுறை மக்களவை தொகுதியாகவே இருக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

மயிலாடுதுறை வணிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் என அனைவரும் ஆர்ப்பாட்டம், ஊர்வலங்களை நடத்தினர். 2007ஆம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் தொகுதி சீரமைப்புக் குழுவினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி கொண்டு மணிசங்கரய்யர் திருச்சி வந்து கலந்துகொண்டார். கூட்டத்தின் முடிவில் மயிலாடுதுறை மக்களவை தொகுதி மீட்கப்பட்டது. தில்லி வரை செல்வாக்கு பெற்றிருந்த மணிசங்கரய்யரின் தனிப்பட்ட முயற்சியால் மயிலாடுதுறை மீட்கப்பட்டது. இத்தனைக்கு அந்தக் காலச் சூழலில் மயிலாடு துறை மாவட்டமாக இல்லாத நிலையிலும் தொகுதி சீரமைப்பிலிருந்து பாதுகாக்க முடிந்தது என்றால் புதுக்கோட்டை எப்படிக் கைநழுவியது என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.

மருத்துவர் இராமதாஸ் அறிக்கை
2009ல் நடைமுறைக்கு வந்த தொகுதி சீரமைப்பு என்பது 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வரை நடைமுறையில் இருக்கும். 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மீண்டும் தொகுதி சீரமைப்போடுதான் நடைபெறும் என்று தொகுதி சீரமைப்பு ஆணையம் 2009இல் தெரிவித்திருந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என்று 1976-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவுக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அப்போது இந்தியாவின் மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வந்தது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் அது மக்கள்தொகை பெருக்கத்தை ஊக்குவிக்கும் என்பதால் தான் தொகுதிகளை அதிகரிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இன்று நாட்டில் மக்கள்தொகைப் பெருக்கம் கிட்டத்தட்டக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. மக்களிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழலில் தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தடையை மேலும் நீட்டிக்காமல், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி புதிய தொகுதிகளை உருவாக்குவதே சரியாக இருக்கும். எனவே, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சம் பேருக்கும், மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 12 லட்சம் வாக்காளர்களுக்கும் மிகாமல் இருப்பதைத் தொகுதி மறுவரையறை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

புதுகை மக்களுக்கு புதிய வாய்ப்பு
மக்களவைத் தொகுதி சீரமைப்பால் சிதைக்கப்பட்ட புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீட்டெடுக்கப் புதியதோர் வாய்ப்பை மருத்துவர் இராமதாஸ் உருவாக்கியுள்ளார். 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் தொகுதி சீரமைப்போடுதான் நடைபெறவேண்டும். மேலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயரில்தான் மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இழந்துவிட்ட புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மக்கள் ஒன்று சேர்ந்து உரத்தகுரலில் ஒலித்தால், தொகுதி சீரமைப்பு ஆணையத்தின் காதில் விழாமலா போகும்?

இழந்த தொகுதியை மீட்க சபதம்…
2019இல் நடைபெற்ற 17ஆவது மக்களவை தேர்தலிலும் நோட்டாவுக்கு வாக்கு சேகரிப் போம். கடந்த தேர்தல்களைவிட அதிகமான வாக்குகளை நோட்டாவில் பதிவு செய்து எதிர்ப்பைத் தெரிவிப்போம் என்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தொகுதி மீட்புக்குழுவினரும் பணியாற்றினர். இந்நிலையில், “தனி நாடாளு மன்றத் தொகுதிக்கான அனைத்துத் தகுதிகளும் புதுக்கோட்டைக்கு இருந்தும், தேர்தல் ஆணையத் தால் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம் என்ற எண்ணம் இன்னும் புதுக்கோட்டை மக்களிடம் உள்ளது.

6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதுதான் ஒரு எம்.பி. தொகுதி. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆனால் எம்.பி. தொகுதி பறிபோய் விட்டது. இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தத் தொகுதியைச் சார்ந்த ஒவ்வொரு வாக்காளர்களிடமும் உள்ளது. எனவே இந்தத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்துத் தொகுதியை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம்“ என்று ‘புதுக்கோட்டை எம்.பி. தொகுதி மீட்பு குழு’வைச் சேர்ந்த சந்திரசேகரன் கூறினார்.

கண்டுகொள்ளாத பிரபலங்கள்…
புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகள் திருச்சி, கரூர், சிவகங்கை, இராமநாதபுரம் என்று பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலையில், மக்களவை உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம், நவாஸ்கனி ஆகியோர் புதுக்கோட்டை சார்ந்த மக்கள் பிரச்சனை அறிந்து கொள்வதில்லை. அக்கறைக் காட்டுவதில்லை என்று புதுக்கோட்டையில் உள்ள 6 சட்டமன்றம் சார்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கேள்விக்குறியான தொகுதி வளர்ச்சி
ஒரு மாவட்டத்திற்கென நிலையாக ஒரு மக்களவை உறுப்பினர் இல்லை என்றால் அந்த மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்படாமல் எப்படியெல்லாம் பாதிப்பைச் சந்திக்கும் என்பது எடுத்துக்காட்டாகப் புதுக்கோட்டை உள்ளது என்றால் மிகையில்லை. நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி எப்படித் திருச்சி, கரூர், சிவகங்கை, இராமநாதபுரத்திலிருந்து புதுக்கோட்டைக்குக் கிடைக்கும்? இதுவரை எந்தத் தொகுதி மேம்பாட்டு திட்டங்களும் மேற்கண்ட மக்களவை உறுப்பினர்களால் நிறைவேற்றப்படவில்லை என்றும் புதுக்கோட்டை மக்கள் கொந்தளிப்பு மனநிலையோடு அங்குசம் செய்திக்காக நம்மிடம் பேசினர்.

வழக்கறிஞர் புரட்சி. கவிதாசன்
(தமிழ்நாடு துணைத்தலைவர், பாஜக)
“2021ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் மீண்டும் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம், புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி சிதைக்கப்பட்டு அதன் 6 தொகுதிகள் அண்மையில் உள்ள திருச்சி, கரூர், சிவகங்கை, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளோடு இணைக்கப்பட்டதை எதிர்த்து, புதுக்கோட்டை மாவட்ட பார்கவுன்சில் சார்பாகவும், தனிநபர் ஒருவரும் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு தற்போதுவரை நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வரும்வரை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாசு அவர்களின் கருத்தை ஏற்பதற்கில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். காலம் மீண்டும் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை அமைத்து தரும் என்று நம்புகிறோம்” என்றார்.

முத்துநிலவன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)
“2021ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மீண்டும் வரையறை செய்யப்பட வேண்டும் என்று
அறிக்கை விடுத்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கருத்தை வரவேற் கின்றேன். காரணம், புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்டதை இன்றளவும் புதுக்கோட்டை மக்கள் மனதளவில் ஏற்றுக்கொள்ளாமல்தான் இருக்கிறார்கள். அதனால்தான் 2009, 2014, 2019 ஆகிய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 45ஆயிரத்திற்கு மேல் பதிவான 49-ஓ என்னும் நோட்டாவிற்கு விழுந்த வாக்குகள் இதை உறுதி செய்து கொண்டிருக்கின்றது. மக்கள் உணர்வுகள் ஒன்றாக இருந்து, கோரிக்கை குரல் எழுந்தால் எங்கள் அமைப்பு அதை ஆதரிக்கும்” என்றார்.

சம்பத்குமார்
(புதுக்கோட்டை சமூக நலன் செயல்பாட்டாளர்)
“1948ஆம் ஆண்டு மார்ச் 4ம் நாள் புதுக்கோட்டை தனி அரசு (சமஸ்தானம்) இந்தியாவோடு இணைக்கப்பட்டது. அப்போது எங்கள் மன்னரிடம் நேரு மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோர், “உங்களுக்கு என்ன வேண்டும்” என்று கேட்டபோது, மன்னர் “எதுவும் வேண்டாம்” என்று கூறினார்.
ஒருகால் புதுச்சேரியைப் போல யூனியன் அரசாக இருக்கவேண்டும் என்று எங்கள் மன்னர் கோரிக்கை வைத்திருந்தால் தனி மாநிலம் என்ற தகுதியோடு புதுக்கோட்டைக்கு முதல் அமைச்சர் பொறுப்பு கிடைத்திருக்கும்.

புதுக்கோட்டை திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது, நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி இருந்தது. பின்னர் புதுக்கோட்டை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் மக்களவைத் தொகுதி என்ற நிலை தொடர்ந்தது. மயிலாடுதுறை மணிசங்கரய்யர், ப.சிதம்பரம் ஆகியோரின் கூட்டு முயற்சியில் மயிலாடுதுறை தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ளவே புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி சிதைக்கப்பட்டது. இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்.

வழக்கின் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாகவே வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்நிலையில் 2021 மக்கள் தொகை கணக்கெ டுப்பின்படி மீண்டும் தொகுதி மறுவரை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையைப் புதுக்கோட்டைக்காக வைக்க முடியாது. எல்லா அரசியல் கட்சிகளும் இந்தியா முழுமையும் குரல் கொடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் தனி ஒரு அரசியல் கட்சியின் குரல் மக்களை ஓரணியில் திரள வைக்காது” என்றார்.
எம்பி தொகுதியை மீட்க

இவர்கள் போதுமே…
மயிலாடுதுறை மக்களவை மீட்க ஒரு மணி சங்கரய்யரால் முடியும் என்றால் 12 இலட்சம் பேர் வாக்காளர்களுக்கு மேல் உள்ள புதுக்கோட்டை மக்களால் தொகுதியை மீட்க முடியாதா என்ன? போதாகுறைக்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு மாநில அமைச்சர்கள் உள்ளனர். ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் உள்ளார். முன்னாள் அமைச்சரும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர்கள் புதுக்கோட்டை மக்களின் வலியை, வேதனையைத் தீர்க்க முன்வந்தால் புதுக்கோட்டை மக்கள் ஒத்துழைப்போடு, மீண்டும் புதுக்கோட்டை மக்களவை உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் எண்ணமாக உள்ளன.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.