விவசாயம் செய்யவிடாமல் விவசாயிகளை விரட்டும் குவாரி அதிபர்கள் !
தேனி மாவட்டம், போடி தாலுகாவில் உள்ளது வளயப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுப்புராஜ், சீனிவாசன் என இரண்டு சகோதரர்கள் கேகே ப்ளூ மெட்டல் என்ற குவாரியை நடத்தி வருகின்றனர். கேகே புளுமெட்டல் குவாரி அருகே இருக்கக்கூடிய சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களை மோசடியாக ஆவணப்பதிவு செய்து தங்களுக்கு சொந்தமான நிலம் எனக்கூறி வேலி அமைத்துள்ளனர்.
அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குப் போவதற்கு வழிவிடாமல் வேலி போட்டு மறித்துள்ளதோடு, மீறி விவசாய நிலத்திற்குள் கால் வைத்தால், டிப்பர் லாரிகளை வைத்து ஏற்றி கொலை செய்து விடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்து வருகிறார்கள். மேலும், விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிசைகளை தீ வைத்துக் கொளுத்தி விடுவதாகவும் மிரட்டுகின்றனர்.
இரவுபகல் என 24 மணிநேரமும் சட்டவிரோதமான முறையில் அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் கொள்ளையிடப்படுவதாகவும்; வீரியமான மருந்துகளை பயன்படுத்தி வெடி வைத்து தகர்க்கப்படுவதால் அருகாமையிலுள்ள விவசாய நிலங்களில் கற்கள் சிதறியும் புழுதிபடிந்தும் விவசாய நிலம் பாழ்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர், விவசாயிகள்.
இது குறித்து காவல்துறைக்கும் தேனி மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் குவாரி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்; தாங்கள் தங்களது விவசாய நிலத்தில் இடையூறின்றி விவசாயம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர், வளையப்பட்டி கிராம பொதுமக்கள்.
-ஜெ.ஜெ