ராமஜெயத்தை முதுகில் குத்திய எதிரிகள்! – Ramajayam Murder Case
தில்லைநகர் 10th கிராஸ் ராமஜெயம் திகில் தொடர்-1
Ramajayam Murder Case
Ramajayam கொலை செய்யப்படுவதற்கு முன்புவரை, தில்லை நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கட்சிக்காரர்கள் ஏதாவது பிரச்சினை என ராமஜெயத்தை சந்தித்தால், ‘உடனே அதை என்னன்னு பார்த்து சரி பண்ணுங்க’ என அடுத்த நிமிடமே ராமஜெயத்திடமிருந்து போன் பறக்கும். இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும், ராமஜெயத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால் அது உடனே சரிசெய்யப்படும்.
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் மற்றும் பள்ளி அட்மிஷன் நேரங்களில், ராமஜெயத்தினுடைய தில்லை நகர் ஆபீஸ் வாசலில் அவரை சந்திக்கவும், தங்கள் குழந்தைகளுக்கு பிரபல பள்ளிகளில் சீட் வேண்டும் எனவும் ஒரு கூட்டம் க்யூவில் நிற்கும். அதுமட்டுமல்லாமல், தங்கள் ஊர்களில் கோயில் கட்ட டொனேஷன் வேண்டும் என பலர் வரிசையில் நிற்பார்கள். அவற்றையெல்லாம் சட்டென முடிக்கும் ராமஜெயத்தின் பாணியே வித்தியாசமானது.
7 மொழிகள் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்த ராமஜெயம், சென்னை லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பில் கோல்டு மெடல் வாங்கியவர். அதன்பிறகு தீவிர பிஸ்னஸில் இறங்கியவர், மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற வெளிமாநிலங்களில் போர்வெல் போடும் கான்ட்ராக்ட், ஆந்திராவில் சுரங்கத் தொழில், இந்தோனேஷியாவில் நிலக்கரி குவாரி, புதுக்கோட்டை எல்லையில் கிரானைட் குவாரி, ஜனனி குரூப் ஆஃப் கம்பெனிகள், உயர் கல்வி நிறுவனங்கள் என 20-க்கும் மேற்பட்ட தொழில்களில் இறங்கியடித்து மிகப்பெரிய தொழில் அதிபராக வளர்கிறார்.
கே.என்.நேரு 1989-ல் தி.மு.க. ஆட்சியில் முதன்முதலாக அமைச்சராக அமர்ந்ததும், தனது வெளிமாநில பிசினஸ் விஷயங்களில் இருந்து ஒதுங்கிய ராமஜெயம், திருச்சியில் நிரந்தரமாகத் தங்கி பிசினஸ்களை கவனிக்க ஆரம்பிக்கிறார். இப்படி தன்னுடைய தொழிலில் தீவிரமாக இருக்கும் ராமஜெயத்துக்கு இன்னோர் முகம் இருக்கிறது.
ஏதாவது பிரச்சினையென்றால், வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என பேசும் கோப முகம் தான் அது. திருச்சி ஏரியாவில் சர்ச்சைக்குரிய நிலங்கள் விற்பனைக்கு வந்தால், அங்கு அரங்கேறும் பிசினஸ் டீலிங்குகள், நிலம் கொடுக்கல் வாங்கல் என அனைத்திலும் ராமஜெயம் பெயர் அடிப்படாமல் இருந்ததில்லை.
ராமஜெயத்தின் பெயரைச் சொல்லி அவரது ஆதரவாளர்கள் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டதும், இதை எம்.டி ராமஜெயத்துக்காகவே செய்கிறோம் எனக் கூறியதெல்லாம் தனிக்கதை. இதையெல்லாம் வைத்துதான் ராமஜெயம் மற்றும் நேரு குடும்பத்தினர் திருச்சியையே வளைத்துப் போட்டுவிட்டதாக சாதாரணமானவர்களைக்கூட பேச வைத்தது. அதன்காரணமாகவே ராமஜெயம் மீது அடுக்கடுக்கான வழக்குகளும் பாய்ந்தது.
2011 சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சி வந்திருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரைப் பார்க்க பலர் வரிசையில் காத்துக்கிடந்தனர். அப்போது ஹோட்டலுக்குள் தனது குழந்தைகளுடன் நுழைந்த ஒரு லேடி, “அம்மா என்னோட கணவரை கொன்றுவிட்டார்கள்” என ஜெ., காலில் விழுந்து கதறுகிறார். அதைப் பார்த்து பதறிய ஜெ., நடந்த சம்பவத்தை முழுமையாக கேட்டபின்னர், “உன் கணவர் சாவுக்கு காரணமானவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்; கவலைப்படாமல் இருங்கள்” என்று உறுதியளிக்கிறார். அடுத்து சில மாதங்களில் திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, சுமார் 45 நிமிடம் ராமஜெயம் மற்றும் கே.என்.நேருவை பற்றியே அதிகமாக அட்டாக் செய்து பேசுகிறார்.
அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. முதல்வரானார் ஜெயலலிதா. அடுத்தடுத்து தி.மு.க பிரமுகர்கள் மீது வழக்குகள் பாய்ந்தது. அந்தவகையில் கடந்த 2011 செப்டம்பர் மாதம், நில அபகரிப்பு வழக்கில் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் ராமஜெயம், ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் உறவினர்களுக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, கோவையிலுள்ள வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர்.
அடுத்து துறையூர் மருத்துவர் ஒருவர் கொடுத்த கலைஞர் அறிவாலயம் வழக்கு, திருச்சி காஞ்சனா பிளாசா கைமாற்றி விட்ட பிரச்சினையில் போடப்பட்ட வழக்கு, திருச்சி விமான நிலையத்தை அடுத்த செம்பட்டு மெராய்ஸ்ஸ் சிட்டி தொடர்பான வழக்கு மற்றும் முன்னாள் துணை மேயர் அன்பழகன் மீது கே.கே.நகரில் நிலம் அபகரிப்பு புகார் என வரிசையாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தப் பிரச்சினையில் ராமஜெயத்தின் மீதும் வழக்குப் போடப்பட்டது. அதில் சில வழக்குகளில் கே.என் நேருவும், அவரது தம்பி ராமஜெயம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் ராமஜெயம் பாளையங்கோட்டை சிறையில் 28 நாட்களுக்கும் மேல் சிறைவைக்கப்பட்டிருந்தார். ராமஜெயம் பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது சிறை வளாகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு வைத்தார். புத்தகம் படிக்கும் பழக்கம் உடைய அவர், சிறையில் இருக்கும்போது 500-க்கும் மேற்பட்ட ஆங்கில புத்தகங்கள் படிக்கிறார். அதன்பிறகு சிறையிலிருந்து வெளியேவரும் ராமஜெயத்தின் பாஸ்போர்ட்டும் முடக்கப்படுகிறது. இப்படி ராமஜெயம் திட்டமிட்டு கட்டம் கட்டப்படுகிறார்.
கொலை செய்யப்பட்ட ராமஜெயம் இறந்து 25 நாட்களுக்குப் பிறகு அவர் மீது நில அபகரிப்பு வழக்கு ஒன்று பதிவாகிறது. ஸ்ரீரங்கம் மேற்கு சித்திரை வீதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவர், ஸ்ரீரங்கம் அருகே உள்ள தனது பசுக்கள் மடத்தை அபகரித்ததாக ராமஜெயம் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் ராமஜெயம் இறப்பதற்கு ஒருமாதத்திற்கு முன் வழக்கு தொடர்கிறார்.
அதுதொடர்பாக, கொலை செய்யப்பட்ட ராமஜெயம் உள்பட ஐந்து பேர் மீது ரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்கின்றனர். பிறகு ராமஜெயத்தின் இறப்புச் சான்றிதழை கோர்ட்டில் தாக்கல் செய்து, அந்த வழக்கில் இருந்து ராமஜெயத்தினை விடுவிக்கின்றனர்.
Ramajayam கொலை செய்யப்பட்டபோது, திமுக தலைவர் கருணாநிதி, “ராமஜெயத்தை நேரில் வீழ்த்த முடியாதவர்கள், அவரது முதுகில் குத்திவிட்டார்கள்” என ஆதங்கப்பட்டார். அப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய ராமஜெயத்தின் மரணம் இப்போதும், புரியாத புதிராகவே இருக்கிறது.
ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாக ஒரு உத்தரவு போட்டது!
ராமஜெயம் மற்றும் கே.என்.நேரு வீழ்த்த சென்னையில் இருந்த ஒரு பெரிய அதிகாரியிடம், 300 பக்க புகார் பட்டியலை வழங்கிய திருச்சி அ.தி.மு.க தம்பதிகள்! மற்றும் கொலை வழக்குகளில் ராமஜெயத்தை சிக்க வைக்க போலீஸார் துடித்தது! என்பன குறித்த பல அதிரடி தகவல்கள்…
அடுத்த இதழில்…..