ராமஜெயம் கொலையும்… செல்போன் தொடர்பும்…
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச்.29–ம் தேதி கொலை குறித்து முதலில் திருச்சி மாநகர கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின் பெயரில் புதிதாக இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற சிவசுப்ரமணியன் ( இவர் இப்போது வரை ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்) வழக்குப் பதிவு செய்கிறார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட கமிஷனர் கைலேஷ்குமார் யாதவ் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது ராமஜெயம் வேறு எங்கையோ கொலை செய்யப்பட்டு இங்கே வந்து போட்டிருக்கிறார்கள். இதனை விசாரிக்க 7 தனிப்படை அமைத்துள்ளேன் விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படும் என்றார்.
அந்தத் தனிப்படைக்கு சசிகலா தம்பி திவாகரனின் சம்மந்தியுமான ஏசி ஜெயசந்திரனை தனிப்படைக்கு முக்கிய பொறுப்பு கொடுத்தார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாறி பின்பு அவர் ஸ்ரீரங்கம் ஏசியாக நியமிக்கப்பட்டார். ஏசி மாதவன் என்பவரை நேரு குடும்பத்தினரை நேரடியா போய் விசாரிப்பதற்கு என்று ( இவர் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நேரு, மற்றும் ராமஜெயம் ஆகியோர் மீது நிலஅபகரிப்பு வழக்குகள் பதிவு செய்தவர் ) இவரை நியமிக்கிறார்கள்.
இவர் விசாரணையின் போது தான் ராமஜெயம் வாக்கிங் செல்லும் கோட்டை ஸ்டேஷன் ) பகுதியில் கட்டுகம்பி, குங்குமம், ரயில் டிக்கெட், விசிடிங் கார்ட்டு, ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் அடையாள அட்டைச் சிதறி கிடப்பதை கண்டுபிடித்திருக்கிறார்.
ஆனால் இதை எல்லாம் சி.பி.சி.ஐ.டி. கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் தற்போது இதை எப்படி எடுத்துக்கொடுத்தார், யார் கொடுத்தது என்று சந்தேக கண்ணோடு தான் அவரை அணுகியது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்.
திருச்சி கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் விடுமுறையில் சென்ற போது பொறுப்பு கமிஷனராக இருந்த டி.ஐ.ஜி அமல்ராஜ் ( தற்போது திருச்சி மாநகர காவல்துறை ஆணையர்) – நேரு குடும்பத்தினர், மற்றும் உறவினர்களிடம் பணம் பெற்றார்கள் என்கிற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி அப்போது தனிப்படையில் இருந்த அத்தனை அதிகாரிகளையும் கூண்டோடு மாற்றினார்கள்.
இதில் கடந்த திமுக ஆட்சியில் கே.என். நேரு தரப்பினரோடு நெருக்கமாக இருந்த அதிகாரிகளே அப்போது விசாரணை அதிகாரியாக இருந்தவர்கள் அவர்கள் தான் இந்த வழக்கை முன்னேற்ற பாதைக்குச் செல்லாமல் தடுத்தார்கள் என்கிற முடிவுக்கு வந்தார்கள். ( சி.பி.சி.ஐ.டி. போலிஸ் அப்போது அவர்களை எல்லாம் அழைத்து முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என்று விசாரித்தார்கள்).
அப்போதே லோக்கல் விசாரணை அதிகாரிகள் எல்லோரும் எங்களுடைய விசாரணை அறிக்கைகள் அத்தனையையும் நான் கமிஷனிடம் தான் ஒப்படைத்தோம். எங்களைக் கூட இது சம்மந்தமாக அவர் விவாதிக்க விடவில்லை. அவரே எல்லோரையும் அழைத்து அத்தனை விசாரணை குறிப்புகளையும் வாங்கி கொண்டுவிட்டார். பல நேரங்களில் கமிஷ்னர் யாரை விசாரிக்கச் சொல்கிறாரோ அவர்களை மட்டுமே விசாரித்தோம்.
நாங்கள் விசாரிக்கும் தகவல்கள் வேறாக இருக்கும் ஆனால் பத்திரிக்கைகளுக்கு வேறு விதமான தகவல்கள் எப்படி வந்தது எங்களுக்கு யாருக்குமே தெரியவில்லை என்று போலிஸ் அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.
பிறகு இந்த வழக்கு கடந்த 2012–ம் ஆண்டு ஜூன் 22–ந்தேதி சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையிலான காவல்துறை விசாரணை நடத்தினர்.
ராமஜெயம் கொலையான மார்ச் 29-ம் தேதி, திருச்சி தில்லைநகர் மற்றும் மாம்பழச்சாலை ஏரியாக்களில் தொடர்பில் இருந்த சுமார் 3,000 செல்போன் நம்பர்களைத் திரட்டியுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸார், ஒவ்வொருவரும் யாருடன் பேசினார்கள் என்ற தகவலைத் திரட்டினார்.
1,500 பேரிடம் விசாரணையை முடித்த சி.பி.சி.ஐ.டி. வட்டாரம், ‘அவர்களிடம் இருந்து கொலைக்கானத் தொடர்பைப் பெற முடியவில்லை’ என்கிற குழப்பத்தில் கடைசியில் நின்றிருக்கிறார்கள்.
ராமஜெயம் கடத்திக் கொலைசெய்யப்பட்ட தகவலை நிச்சயம் போன் மூலம் யாருக்காவது கொலையாளிகள் தெரிவித்திருப்பார்கள் என்று நம்பும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார், மற்ற செல்போன் நபர்களிடமும் விசாரணையைத் தொடர்ந்து நடத்தினார்கள்.
இந்த விசாரணையில் எப்படியும் துப்புக் கிடைத்துவிடும் என்று நம்பினார்கள். ஆனால் கடைசியில் இந்தக் கொலையில் முதன் முதலாகத் தான் கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் செல்போனை தவிர வேற எந்த செல்போனும் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்திய போது அதிர்ச்சியடைந்தனர்.