திருவரங்க ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ரங்கா… ரங்கா… கோவிந்தா… கோவிந்தா… கோஷம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
திருச்சி திருவரங்கம் ரங்கநாதர் கோயில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர்த் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் காலை, மாலையில் நம் பெருமாள் புறப்பாடும், ஸ்ரீரங்கத்தின் சுற்றுப்பகுதிகளில் மண்டகப்படிகளும், இரவு வாகன புறப்பாடும் நடந்து வருகிறது.
8-ம் திருநாளான நேற்று இரவு தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலாவும், கோரத மூலையில் வையாளியும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்கென உற்சவர் நம் பெருமாள் அதிகாலை 4 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 4.30 மணியளவில் சித்திரை தேர் ஆஸ்தான மண்டபம் சேர்ந்தார்.
தொடர்ந்து 4.45 முதல் 5 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேர்த்தட்டில் எழுந்தருளினார். பின்னர் பெருமாளுக்கு திருவாராதனங்கள் நடைபெற்றது.
பின்னர் காலை 6 மணியளவில் திருவரங்கம் எம்எல்ஏ ரமேஷ் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.
இந்த தேரோட்டத்தில் ரங்கா… ரங்கா… கோவிந்தா… கோவிந்தா… கோஷம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்..தேரோட்டத்தை எட்டி திருவரங்கம் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நீர் மோர் வழங்கப்பட்டன.பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.தேரோட்டத்தைக் காண திருச்சி மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.பல்லாயிரக்கணக்கான மக்களின் வருகையால் திருவரங்கம் நகரமே இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 14) இரவு சப்தாவரணத்தை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடி இறக்கபபடுகிறது. வரும் 16-ம் தேதி இரவு ஆளும்பல்லக்கு உலாவுடன் சித்திரைத்தேர் உற்சவ நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் தேர் முன்பு வேண்டிக் கொண்டு தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம மக்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.