தோல்விக்கு நீங்கதான் காரணம் ! திமுக முன்னாள் எம்.எல்.ஏ. போட்ட குண்டு !
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பிறகு கட்சி ரீதியாக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டும்கூட திமுக இந்த அளவுக்கு தோல்வியை தழுவியது எப்படி? என்பதற்கான காரணத்தை கண்டறியும்படி, 38 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்து அறிக்கையாக சமர்பிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கும் நிலையில், முகநூலில் புது குண்டை போட்டிருக்கிறார் திருச்சி லால்குடியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.சௌந்தரபாண்டியன்.
திமுகவின் முதன்மை செயலரும் திருச்சியின் அசைக்கமுடியாத சக்தியாகவும் வலம் வரும் கே.என்.நேருவுக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளை வீசியிருப்பதுதான் கட்சிக்குள்ளேயே புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
”திமுக தொண்டர்களின் கோபத்தையும் மக்களின் சாபத்தையும் நீங்கள் சம்பாதித்து கொண்டதன் விளைவாக உங்களுக்கு மட்டுமே பாடம் புகட்ட வேண்டும் என்று பொது மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். இந்த தீர்ப்பால் நீங்கள் திருச்சியில் திமுகவை பலி கொடுத்துவிட்டீர்கள்.” என்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார், அவர்.
தற்போதும்கூட, கட்சி ரீதியாக தனது கருத்துக்களை பதிவு செய்வதற்கான வாய்ப்பு இருந்தும் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தரும் தருணம் பார்த்து அவர் முகநூலில் பதிவிட்டிருக்கிறார் என்றே சுட்டிகாட்டுகிறார்கள். இதற்கு முன்னரும்கூட, இதுபோல பல சந்தர்ப்பங்களில் அவரது அதிருப்தியை, கே.என்.நேருவுக்கு எதிரான விமர்சனங்களை பொதுவெளியில் வைப்பதும்; பின்னர் பதிவை நீக்குவதும்; சமாதானமாகி அவருடன் நிகழ்வுகளில் பங்கேற்பதுமாகத்தான் இருந்து வந்திருக்கிறார் என்றே சொல்கிறார்கள்.
தொடர்ந்து நான்கு முறை இதே இலால்குடி தொகுதியில் வென்றிருந்தாலும், இந்தமுறை அ.சௌந்தரபாண்டியனுக்கு தலைமை சீட் கொடுக்கவில்லை. பாரிவள்ளலுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், தேர்தல் பிரச்சாரங்களில் அ.சௌந்தரபாண்டியன் தலைகாட்டவில்லை. வேட்பாளர்தான் நேரில் சென்று அழைத்தாரே தவிர, கட்சி ரீதியாக ஒன்றிய செயலாளர் அழைப்பு விடுக்கவில்லை என்ற அதிருப்தியால்தான் அவர் பிரச்சாரத்தில் பங்கெடுக்கவில்லை என்கிறார்கள். ஒருவேளை அவர் தொகுதியை ஒரு வலம் வந்திருந்தால், ஜெயித்திருக்கலாம் என்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

குறிப்பாக, இலால்குடி தொகுதியை பொறுத்தமட்டில் பெயருக்குத்தான் கட்சி ரீதியான பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, மொத்த கண்ட்ரோலும் கே.என்.நேருதான் என்கிறார்கள்.
“உள்ளூரில் கட்சிக்கு எதிராக வேலை பார்த்தவன்கூட, அமைச்சர் ஆபிசில் சிபாரிசுக்கு நிற்கிறான். நினைச்சதை சாதிச்சிட்டு போயிடுறான். கிளை செயலாளருக்கும் ஒன்றியத்துக்கும்; ஒன்றியத்துக்கும் மாவட்டத்துக்குமான தொடர்பு அறுந்துபோய் பல காலம் ஆச்சு. கிளை செயலாளர் இல்லாமல் ஒன்றியத்தை பார்க்கவோ, ஒன்றியம் இல்லாமல் மாவட்ட செயலரை பார்க்கவோ, மாவட்ட செயலர் இல்லாமல் அமைச்சரை பார்க்கவோ முடியாதுங்கிற நிலமை எப்போ வருதோ அப்போதான் இங்கே கட்சி வளரும். அடுத்து இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. போடனும். ஒரு 20,000 – 30,0000 ஓட்டுக்களை கணக்கிட்டு பத்து ஊருக்கு ஒரு ஒன்றியம்னு மாத்தனும். பரம்பரை பரம்பரையா நான் திமுக காரன்னு கெத்தா இருக்குற சாமான்யன் வீட்டு விஷேசங்களிலும் தலைவர்கள் பங்கெடுக்கனும். இதெல்லாம் செய்யாமல், இங்கே கட்சியை மீட்டெடுக்க முடியாது” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத திமுகவில் நீண்டகாலம் பயணிக்கும் தொண்டர் ஒருவர்.
பார்ப்போம் என்னதான் நடக்கிறதென்று?
– அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.