அங்குசம் பார்வையில் ‘ரெட் ஃப்ளவர்’
தயாரிப்பு : ‘காளிகாம்பாள் பிக்சர்ஸ்’ கே.மாணிக்கம். டைரக்ஷன் : ஆண்ட்ரூ பாண்டியன், ஆர்ட்டிஸ்ட் : விக்னேஷ், மனிஷா ஜஷ்னானி, அல்மாஸ் ஆதம், ஷாம், நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், அஜய் ரத்னம், சுரேஷ் மேனன், நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரா, மோகன்ராம், ஒளிப்பதிவு : தேவா சூர்யா, இசை : சந்தோஷ் ராம், எடிட்டிங் : அரவிந்தன், வி.எஃப்.எக்ஸ் டைரக்டர் : பிரபாகர், மோஷன் கிராபிக்ஸ் : ராகுல், பி.ஆர்.ஓ.: ஷேக்.
”முதல் உலகப் போரின் அழிவுகள், இரண்டாம் உலகப் போரின் அழிவுகள், ஹிட்லரின் வெறி இதெல்லாம் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? இப்படிப்பட்ட நிலையில் மூன்றாம் உலகப் போர் முடிந்து 2047-ல் மால்கம டைனஸ்டியின் கொடூர வரி விதிப்பால் இந்தியாவுக்கு ஏற்படப் போகும் பயங்கரம்” என செம மிரட்டலாகத் தான் படத்தை ஆரம்பிக்கிறார் ஆண்ட்ரூ பாண்டியன். மால்கம் டைனஸ்டி என்ற மர்ம அமைப்பின் ஏஜெண்டாக தலைவாசல் விஜய், ஆயுத வியாபாரியாக சுரேஷ் மேனன், இந்த கொடூர எதிரிகளைச் சமாளிக்க இந்தியாவின் ஏஜெண்டாக ‘ரெட் ஃப்ளவர்’ ஆபரேஷனை நடத்தும் விக்னேஷ் என கேரக்டர்களையெல்லாம் ஸ்டைலிஷாக ஸ்கிரீனில் இண்ட்ரோ கொடுக்கிறார்கள்.
‘கிரேட்டஸ்ட் ஸ்டார்’ என்ற பட்டத்தை டைட்டிலில் போட்டு சீனியர் நடிகர் விக்னேஷை டபுள் ஆக்ட்டில் நடிக்க வைத்து சந்தோஷப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் படம் முழுவதும் டிரெய்லர் ரேஞ்சுக்கு சீன்களை அடுக்கிக் கொண்டே போய் ரொம்பவே ஆயாசமாக்கிவிட்டார் ஆண்ட்ரூ பாண்டியன். படம் மொத்தத்தையும் வி.எஃப்.எக்ஸ். டைரக்டர் பிரபாகர் மற்றும் மோஷன் கிராபிக்ஸ் ராகுல் உதவியுடன் க்ளைமாக்ஸ் வரை நகர்த்திக் கொண்டு போகிறார் டைரக்டர். இரண்டேகால் மணி நேரப்படத்தில் நின்னு நிதானமா பேசுனதுன்னு பார்த்தா மொத்தமே பத்து நிமிடம் தான். மத்ததெல்லாம் டமால்..டுமீல்… டம்மு…டிம்மு…தான், கன்ஃபைட் தான்…
இந்தியப் பிரதமராக ஒய்.ஜி.மகேந்திரா, ராணுவத் தளபதியாக நாசர், விக்னேஷுக்கு கேர்ள் ஃப்ரண்டாக மனிஷா ஜஷ்னானி, அப்புறம் ஜான் விஜய், நிழல்கள் ரவி என கேரக்டர்கள் வந்துக்கிட்டே இருக்கு. இதில் பலபேர் செத்துக்கிட்டே இருக்கிறார்கள். இடையிடையே ஜைஜாண்டிக் வில்லன் ஒருவன் இளம் பெண்களை கொடூரமாக கற்பழித்து சுட்டுக் கொல்கிறான்.
என்னதான்டா நடக்குது இங்கன்னு நாம சுதாரிக்குறதுக்குள்ள க்ளைமாக்ஸ் வந்திருது. மெயின் வில்லன் லூசிபர் என்ற தலைவாசல் விஜய்யை சுட்டுக் கொல்கிறார் ஹீரோ விக்னேஷ். படத்தை ஓரளவு டெம்போவாக கொண்டு போவதற்கு மியூசிக் டைரக்டர் சந்தோஷ் ராம் ஹெல்ப் பண்ணியிருக்கார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு சல்யூட் அடிப்பதுடன் ‘ரெட் ஃப்ளவர்’ ஆபரேஷன் ஓவர்.
— மதுரை மாறன்