தமிழ்நாடு உரிமையை மீட்ட பேரறிவாளனின் விடுதலை..!
தமிழ்நாடு உரிமையை மீட்ட பேரறிவாளனின் விடுதலை..!
கடந்த மே18ம் நாள், பேரறிவாளன் விடுதலையை உச்சநீதிமன்றம் தனக்குள்ள வாய்ப்பின்படி (இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு 142 (Article 142) விடுதலை செய்து வரலாற்று புகழ் வாய்ந்த தீர்ப்பினை, மிகுந்த சட்டத்தெளிவுடன் மூன்று முக்கிய நீதிபதிகளான மாண்பமை நீதியரசர் எல். நாகேஸ்வரராவ், நீதியரசர் பி.ஆர்.கவாய், நீதியரசர் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் வழங்கியுள்ளனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை முறையாக விளக்கப்படுத்துவதற்கும் உகந்த தாக அமைந்துள்ளதோடு, ஆளுநர் மற்றும் அவரை இயக்கும் அதிகார வர்க்கம் ஆகியோர் அரசமைப்புச் சட்டவிதிகளுக்குப் புறம்பான வகையில் மட்டுமல்ல; (Not only Unconstitutional but also anti-Constitutional) அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான அணுகுமுறை என்பதன் மூலம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது பற்றிய அவலத்தையும் வெளிக் கொணர்ந்த ஒரு கலங்கரை வெளிச்சத் தீர்ப்பு என்றே கூறலாம்.
பேரறிவாளன் என்ற தனிநபர் விடுதலை பறிக்கப்பட்ட மனிதஉரிமைகள் மீண்டும் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதைத் தாண்டி, அரசமைப்புச் சட்டத்திற்குச் சரியான சட்ட விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அரச மைப்பு சட்டநெறி தவறிப் பிழை செய்தோரை இரக்கமின்றி வெளிப்படுத்தி – அரசமைப்பு சட்டவரைமுறைக்குள்ளே நின்று – மாநிலங்களின் உரிமை, ஆளுநர், குடியரசுத் தலைவர் போன்ற பதவியில் உள்ளோருக்கு இதில் தனித்த சிந்தனைக்கு இடமளிக்கவோ, செயல்படவோ இடமில்லை என்ற திட்டவட்டமாகக் கூறும் வகையில் இத்தீர்ப்பு வெளிவந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஆளுநரின் அரசியல் சட்ட விரோத நடவடிக்கை இதில் திட்ட வட்டமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 29 பக்கங்களைக் கொண்ட உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளைக் கொண்ட அந்த அமர்வின் தீர்ப்பு ‘அரசமைப்புச் சட்டத்தின் விதிகளை வளைக்க நினைத்த ஒன்றிய அரசின் வாதங்களை ஏற்காமல், அவற்றைப் புறந்தள்ளியுள்ளதோடு, விசாரணையின்போதே பல கேள்விகளை ஒன்றிய அரசின் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர்களை நோக்கி எழுப்பியதன் மூலம் எவருக்கும் சட்டவிளக்கம் விளங்கும் வண்ணம் அமைந்திருந்தது. ஒரு தவறைச் சரிக்கட்ட ஒன்பது தவறுகளைச் செய்தல் – என்ற சொலவடைக்கு ஒப்ப, அமைச்சரவை முடிவினைச் செயல்படுத்த ஏன் தாமதம் என்பதற்குத் தேவையற்ற விளக்கங்களைத் தந்து, திசை திருப்பிய ஒன்றிய அரசின் வாதங்கள் பற்றியும் இத்தீர்ப்பு பதிவு செய்துள்ளது.
பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கோ, ஆளுநருக்கோ கிடையாது. இராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் அமைப்பு அதனை முடிக்கவில்லை என்ற சாக்குபோக்கு கூறப்பட்டது. அதைச் சி.பி.ஐ. அறிக்கை மறுத்ததையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதோடு “தமிழ்நாடு ஆளுநருக்காக ஒன்றிய அரசு வழக்குரைஞர் வாதாடும் உரிமையை எப்படிப் பெற்றுள்ளார்”என்றும் கேட்டனர்.
அதோடு, பொது மன்னிப்பு வழங்கக் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் என்ற அரசமைப்புச் சட்டம் கூறாத ஒரு வாதத்தை ஒன்றிய அரசின் வழக்குரைஞர் முன் வைத்தபோது, “அப்படியானால் இதற்கு முன் ஆளுநர்கள் மூலம் – அமைச்சரவையால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு, விடுதலைகள் அனைத்தும் செல்லத்தக்கவைகளா? செல்லத்தகாதவைகளா?” என்று அதிரடியான கேள்விகளையெல்லாம் கேட்ட பிறகுதான் அரசமைப்புச் சட்டவிதி 161 (Article-161) இறுதியானது என்ற விளக்கத்தையும் அதில் சரியான நீதி கிடைக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கருதினால் தலையிட்டு, தவறிய நீதியை வழங்க உரிமை பெற்றுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்திய அரசமைப்புச் சட்டமுறை முழுவதும் இங்கிலாந்து நாட்டின் அமைச்சரவை முறையை அடிப்படையாகக் கொண்டது என்பதால், இங்கே குடியரசுத் தலைவரும், ஆளுநரும் அதிகார அமைப்புகளின் தலைவர்களே தவிர, அமைச்சரவை முடிவை மீறித் தனித்த/சொந்த மனநிலையில் முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது எனத் திட்டவட்டமாகத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
பேரறிவாளன் விடுதலை குறித்து (18.5.2022) உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம்:
(அ) அரசமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும் நிலையில், மாநில அமைச்சரவையின் ஆலோசனைகள் ஆளுநரைக் கட்டுப்படுத்தும் என்று இந்த நீதிமன்றத்தின் தொடர்ச்சியான தீர்ப்புகளினால் வகுக்கப்பட்ட சட்டங்கள் நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
(ஆ) குறிப்பாக மாநில அமைச்சரவை கைதியை விடுவிக்க முடிவெடுத்து ஆளுநருக்குப் பரிந்துரைகளை வழங்கியதற்குப் பின்னர், சட்டப்பிரிவு 161-ன் கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தாதது அல்லது கைதிக்குக் கூறப்படாத அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் விவரிக்க முடியாத தாமதம் ஆகியவை இந்த நீதிமன்றத்தின் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதாகும்.
(இ) அப்படிப் பரிந்துரை செய்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடியரசுத் தலைவருக்குத் தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையைப் பற்றி ஆளுநர் குறிப்பிடுவதற்கு எந்தவிதமான அரசியல் சாசனச் சான்றும் இல்லாதது; நமது அரசமைப்புச் சட்டத்தின் திட்டத்துக்கு விரோதமானது என்று நீதிமன்றம் கருதுகிறது.
சட்டப்பிரிவு 142இன்படியான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சுருக்கம்:
மேல்முறையீட்டாளரின் (பேரறிவாளன்) நீண்ட காலச் சிறை வாசம், சிறையிலும், பரோலின் போதும் திருப்திகரமாக நடந்து கொண்டமை, அவரது மருத்துவப் பதிவுகள், அவரது கல்வித் தகுதிகள், சட்டப்பிரிவு 161-இன் கீழ் இரண்டரை ஆண்டுகளாக அவரது மனு நிலுவை யில் உள்ளதைக் கணக்கில் எடுத்துக்
கொண்டு, மாநில அமைச்சரவையின் பரிந்துரையை, ஆளுநரின் பரிசீலனைக்கு மாற்றுவது பொருத்தமானதாக நாங்கள் கருதவில்லை.
அரசமைப்பின் 142ஆவது பிரிவின் கீழ் எங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 1991-ஆம் ஆண்டு குற்ற எண்.329 தொடர்பாக மேல்முறையீட்டாளர் தண்டனையை அனுபவித்ததாகக் கருதப்பட வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
ஏற்கெனவே பிணையில் இருக்கும் மேல்முறையீட்டாளர், உடனடியாக விடுதலை செய்யப்படுகிறார். அவரது பிணை பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று மூன்று நீதிபதிகளும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர் உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார் என்ற செய்தி காலை 10.45 மணிக்குத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டவுடன், தமிழ்நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கினர். இனிப்பு களை வழங்கி விடுதலையைத் தமிழர்கள் கொண்டாடினார்கள். பேரறிவாளன் விடுதலையைத் தாண்டி, தீர்ப்பில் சொல்லப்பட்ட 3 செய்திகள் மிகவும் இன்றியமையாதவை.
1. குடியரசுத் தலைவர், ஆளுநர் இவர்கள் ஆட்சித் தலைவர்கள்தான். அமைச்சரவை எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். தங்களுக்குக்கென்று தனித்த சிந்தனையோடு செயல்பட முடியாது.
2. தமிழ்நாடு ஆளுநர், அமைச்சரவை முடிவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் 2.5 ஆண்டுகள் காலதாமதம் செய்து அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
3. தண்டனை காலம் முடிந்தவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது.
இந்நிலையில் மாநில அமைச்சரவையின் முடிவைக் குடியரசுத்தலைவருக்கு எந்தப் பிரிவையும் குறிப்பிடாமல் அனுப்பி வைத்தது முறையற்ற செயல். தீர்ப்பில் சொல்லப்பட்ட மேற்கண்ட 3 செய்திகள் மாநிலங்களை அடக்கி ஆளலாம் என்று நினைக்கும் ஒன்றிய அரசுக்குக் கொடுக்கப்பட்ட சவுக்கடி. ஒன்றிய அரசின் கங்காணியாகச் செயல்பட்டால் போதும் என்று நினைக்கும் ஆளுநர்களுக்குக் கொடுக்கப்பட்ட சவுக்கடியும்கூட. இதனால் மாநிலங்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆளுநர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூவிக்கொண்டிருந்த வலதுசாரிகளுக்குத் தலையில் வைக்கப்பட்ட ‘குட்டு.
8 ஆண்டுகள் காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட பேரளிவாளனின் தீர்ப்பு, மாநில உரிமைகள் மீட்கப்பட்டதாகவும் அமைந்திருந்த மகிழ்ச்சி யோடுதான், பேரறிவாளன் விடுதலையைத் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதே உண்மை.