இப்படி, ஊருக்கொரு சங்கம் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் நாடு ?
இப்படி, ஊருக்கொரு சங்கம் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் நாடு?
விவசாய நிலத்தை பிளாட்டுகளாக மாற்றுவதற்கு முன்பாக, பூமி பூஜைக்கு அடுத்து நடுவது இன்ன நகர் என சுட்டும் பெயர்ப்பலகையைத்தான். பிளாட் விற்று, குடித்தனக்காரர்கள் வந்தவுடன் அவர்களும் முதலில் வைப்பது மற்றொரு பெயர்ப் பலகையைத்தான். தற்போது, முதலில் வைத்த ”நகர்” என்பதோடு, ”நலச்சங்கம்” என்றொரு சொல் மட்டும் புதிதாக சேர்ந்திருக்கும்.
அபார்ட்மெண்டாக இருந்தால் மாதாந்திர பராமரிப்புத் தொகை வசூலிப்பது; துப்புறவு, காவலர், பிளம்பிங், எலக்ட்ரிக்கல், லிஃப்ட் பராமரிப்பது என்பதாக சுருங்கியிருக்கும். பத்துக்கும் மேற்பட்ட பிளாட்டுகளை கொண்ட “நகர்” களாக அமைந்துவிட்டால், அணுகுசாலை தொடங்கி, பாதாள சாக்கடை, குடிநீர் விநியோகம், தெருவிளக்கு எரியாத பிரச்சினை வரையில் சகலத்தையும் எதிர்கொண்டாக வேண்டும்.
இதுபோன்ற ”நலச்சங்க” நிர்வாகிகளாக இருப்பவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற ஆசிரியர் அல்லது ஏதேனும் ஓர் அரசு ஊழியராகத்தான் இருப்பார்கள். அல்லது, சீனியர் சிட்டிசன்களாகத்தான் இருப்பார்கள். பல இடங்களில் பெயருக்கு ஒரு சங்கம் என்பதாக இருக்கும். ஆக-15, ஜன-26 ஆகிய இரண்டு நாட்களோடு அவர்களது கடமையும் முடிந்ததாக இருக்கும்.
இதுபோன்று உருவான பல நலச்சங்கங்கள் பலவும் இன்னும் பெயர்ப்பலகை அமைப்பாகவே சுருங்கி நின்றாலும், விரல்விட்டு எண்ணும் சில துடிப்பான நலச்சங்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பல பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்து ஊருக்கு நல்லது செய்த நலச்சங்கங்களும் நிறையவே இருக்கின்றன தமிழகத்தில். குறிப்பிட்டு சொல்லும்படியான, ஒரு ”நல்ல சங்கமாக” இயங்கிவரும் நலச்சங்கத்தில் ஒன்றுதான், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 25-ஆவது வார்டில் அமைந்துள்ள ”ரெங்காநகர் குடியிருப்போர் நலச்சங்கம்”.
அரசு ஊழியர்கள், சிறு – குறு தொழிலாளர்கள் என சுமார் 350 குடும்பங்கள் வசிக்கும் அழகான சிறுநகர் அது. 1998-ஆம் ஆண்டு கேப்டன் இருதயசாமி, ஓய்வு பெற்ற பி.டி.ஓ. சந்தியாகு, ஆசிரியர் சுப்பன் ஆகியோரால் தொடங்கப்பட்டதுதான் இந்த ரெங்காநகர் குடியிருப்போர் நலச்சங்கம்.
மற்ற குடியிருப்போர் நலச்சங்கங்களைப் போல, சுதந்திர தின விழாவையும், குடியரசு தின விழாவையும் நடத்தியதோடு நில்லாமல், பல்வேறு நலத்திட்டப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது இந்த நலச்சங்கம். “முத்து பாலி கிளினிக்” உடன் இணைந்து பல் மருத்துவ முகாம்; மகாத்மா கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனை முகாம்; காவேரி மருத்துவமனையுடன் இனைந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் என மருத்துவ முகாம்கள் பலவற்றை நடத்தியிருப்பதோடு, ரங்கா நகரில் வசிக்கும் மருத்துவர்களையெல்லாம் அழைத்து அவர்களின் சேவைகளை பாராட்டி கௌரவித்திருக்கிறது, இந்த சங்கம்.
தெருவிளக்கு, குடிநீர் விநியோகம், தூய்மைப்பணிகள் என அனைத்திலும் கவனம் செலுத்திய இந்த சங்கம் திருச்சி மாநகராட்சியிடமிருந்து “litter free zone” என்ற கேடயத்தை பரிசாக வென்றிருக்கிறது.
10, 12 பொதுத்தேர்வை எதிர்கொண்டு சிறந்த மதிப்பெண்கள் பெறும் ரங்காநகரைச் சேர்ந்த மாணவர்களை பாராட்டி பரிசுகளை தொடர்ந்து வழங்கிவருகிறது, இந்த நலச்சங்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலில் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை அருகில் உள்ள “நடுவக்கோட்டை” கிராம மக்களின் மறுவாழ்வில் பங்களித்திருக்கிறது, இந்த நலச்சங்கம்.
நலச்சங்கத்தின் நற்பணிகளின்பால் ஈர்க்கப்பட்ட, ரெங்காநகர் வாசியும் வழக்கறிஞருமான என்.ஆர்.முருகேசன், தனது பங்களிப்பாக ஆயிரம் சதுர அடி காலி மனையை சங்கத்திற்கு தானமாக வழங்கியிருக்கிறார் என்பதிலிருந்தும் இந்த சங்கத்தின் மாண்பை புரிந்து கொள்ளலாம்.
அந்த ஆயிரம் சதுர அடி காலி மனை இன்று அழகான கட்டிடமாக மாறி, நகர் சார்ந்த பல நிகழ்ச்சிகள் நடைபெறும் பொது அரங்கமாக மாறி பயன்பட்டு வருகிறது.
முன்னுதாரணமான இந்த நலச்சங்கத்திற்கு, தற்போது அழகன் என்பவர் தலைவராக இருந்து வருகிறார். தமிழரசன் செயலாளருமாகவும்; முத்துக்கிருஷ்ணமூர்த்தி பொருளாளராகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுடன் 20 உறுப்பினர்களில் 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல, பொதுநல சேவையோடு ஊருக்கொரு சங்கம் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் நாடு? என்றே வியக்க தோன்றுகிறது !
– ரேஷிகா
👌👌