பிளாஷ்பேக் : தனித்தொகுதியாக தேர்தல் களம் கண்ட ஸ்ரீரங்கம் !
ஸ்ரீரங்கம் அப்படின்னு சொன்னாலே, ஆச்சாரமான பிரிவினர் வசிக்கும் பகுதி. உலக பிரசித்திபெற்ற ரெங்கநாதர் திருக்கோயில் அமைந்த பகுதி. முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா போட்டியிட்ட நட்சத்திர அந்தஸ்து பெற்ற சட்டமன்ற தொகுதி என்பதாகத்தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.
ஆனால், ஒரு காலத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தனித்தொகுதியாக இருந்திருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
கடந்த 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மட்டும், ஸ்ரீரங்கம் தனித்தொகுதி என்ற வகைப்பாட்டில் எதிர்கொண்டிருக்கிறது. அந்த தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் ஜோதி வெங்கடாச்சலம் போட்டியிட்டு வென்றிருக்கிறார். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் முதல் பெண் வேட்பாளரும் அவரே. இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டதும் காமாட்சி அம்மாள் என்கிற பெண் வேட்பாளர்தான்.
ஜோதி ரங்கூனை சேர்ந்தவர். அவரது கணவர் வெங்கடாச்சலம் அடிப்படையில் ஒரு தொழிலதிபர். சென்னையை பூர்வீகமாக கொண்டவர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகு, ஜோதி வெங்கடாச்சலம் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். 1962-இலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக எழும்பூர் தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறார். ராஜாஜியின் அமைச்சரவையில், மதுவிலக்கு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். காமராஜர் ஆட்சி காலத்தில் பொது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். இதனை தொடர்ந்து கேரளாவின் பெண் ஆளுநராகவும் பதவி வகித்திருக்கிறார் ஜோதி வெங்கடாச்சலம்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி 1971 தேர்தலில் தனித்தொகுதியாக களம் கண்டது என்ற தகவல் எதுவுமே விக்கிபீடியா, ஏ.ஐ. உள்ளிட்டு எவற்றிலும் இடம்பெறாமல் போனது ஆச்சரியமானதுதான். இந்த தகவலை, பேராசிரியர் ஒருவர் பட்டியலினத்தை சேர்ந்த தனது உறவினர்தான் திமுகவின் வேட்பாளராக 1971 தேர்தலில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பதாக, அவர் சொன்ன தகவலில் இருந்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலிருந்துதான் நாம் உறுதிபடுத்த முடிந்தது. இந்த யதார்த்தம், டிஜிட்டல் தளங்களை நாம் எந்த அளவுக்கு நம்பலாம்? நம்பக்கூடாது? என்பதற்கான சிறந்த படிப்பினையாகவும் அமைந்துவிட்டது.
அடுத்து, இந்த தொகுதி என்றால், இந்த சமூகத்தினர்தான் என்று சாதிய கண்ணோட்டத்தில் குறிப்பிட்ட சாதியை முன்னிறுத்தி வேட்பாளர்களை தெரிவு செய்யும் அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனநிலையைத்தான் வாக்காளர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஸ்ரீரங்கம் தொகுதியின் கடந்த கால வரலாறும், மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் சமீபத்திய அனுபவமும் எடுத்துரைக்கின்றன.
முழுமையான வீடியோவை காண








Comments are closed, but trackbacks and pingbacks are open.