திருச்சி நெ.1 டோல்கேட் குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தும் ’குடி’மகன்கள் !
திருச்சி நெ.1 டோல்கேட் குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தும் ’குடி’மகன்கள் !
பல்லடம் பகுதியில், வீட்டிற்கு முன்பாக கும்பலாக அமர்ந்து சாராயம் குடித்ததை தட்டிக் கேட்டதற்காக, வீட்டின் உரிமையாளர்கள் நால்வர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள்ளாக, அதேபோன்றதொரு சம்பவம் மீண்டும் நடந்துவிடக் கூடாதென்று பதைபதைக்கிறார், திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்த அ.வை. தங்கவேல்.
சென்னை, நாமக்கல், சேலம், துறையூர், அரியலூர் மார்க்கமாக பயணிப்பவர்களுக்கு திருச்சி நகரின் நுழைவாயிலாக அமைந்திருக்கும் இடம்தான் நெ.1 டோல்கேட். மேற்கண்ட வழித்தடங்களில் பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் நெ.1 டோல்கேட் பகுதியை வந்தடைந்து பின்னர் அவற்றுக்கான வழித்தடத்தில் நாலாபுறமும் பிரிந்து செல்லும் பரபரப்பான ஒரு பகுதி. வாகன நெரிசல் மட்டுமல்ல; குறுக்கும் நெடுக்குமாக பயணிகளும் குவியும் கேந்திரமான ஒரு பகுதி என்றே சொல்லலாம்.
இவ்வளவு நெருக்கடி மிகுந்த சாலைகளுள் ஒன்றான நொச்சியம், மண்ணச்சநல்லூர், துறையூர், சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பயணிக்கும் வழித்தடத்தில், பேருந்து நிறுத்தத்திற்கு மிக மிக அருகாமையில் அரசு டாஸ்மாக் கடை (எண். 10503) ஒன்று செயல்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலை ஓரமாக அரசு மதுபானக்கடைகள் இயங்க தடை அமலில் இருக்கும் நிலையில், இந்த கடைக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது? பள்ளி, கல்லூரிகளுக்கும், சித்தாள் வேலை தொடங்கி அரசு அலுவல் வரையில் அன்றாடம் பணிக்கு சென்று திரும்பி வருபவர்கள் சங்கமிக்கும் இடத்தில், குடிமகன்கள் செய்யும் அட்டகாசங்கள் அறுவெறுக்கத்தக்க ரகத்தை சேர்ந்தவை.
குடித்துவிட்டு வாந்தியும் பிராந்தி பாட்டிலும் கையுமாக சாலை ஓரத்தில் கவிழ்ந்து கிடப்பது தொடங்கி, கும்பலாக வந்து குடித்து முடித்துவிட்டு நடு ரோட்டில் வாகனங்களை நிறுத்திக்கொண்டு அலப்பறை கொடுப்பது வரையில் குடிமகன்களின் அட்ராசிட்டி அளவில்லாதது.
இதில் கொடுமையான மற்றொரு விசயம் என்னவெனில், அரசு டாஸ்மாக் கடையின் பின்வாசல், ஆர்.கே.வி.நகர் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. பின்வாசலை எப்போதும் திறந்தே வைத்திருப்பதால், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கொண்டு அவர்கள் இஷ்டத்துக்கு பாட்டிலை வாங்கி கொண்டு வந்து திறந்தவெளி பார் போல ஆக்கிவிடுகிறார்கள். ஆண்கள் வேலைக்கு சென்றுவிட, பிள்ளைகள் பள்ளிக்கு சென்றுவிட குடும்ப பெண்கள் மட்டுமே வீட்டில் இருக்கும் சூழலில் வெளிக்கதவை திறக்க முடியாத அளவுக்கு வீட்டின் வாசலிலேயே அமர்ந்து மது குடிப்பதும், போதை தலைக்கேறி மட்டையாகிவிடுவதும் சர்வசாதாரணமாக அன்றாடம் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டுகிறார் ஆர்.கே.வி.நகர் குடியிருப்பு வாசியான தங்கவேலு.
ஆர்.கே.வி. நகர் பகுதி மக்களின் சார்பாக பலமுறை இதனை சுட்டிக்காட்டி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று வேதனையோடு தெரிவிக்கிறார்கள் பகுதிமக்கள். புத்தனாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்ட போதே, அப்பகுதியில் இயங்கி வந்த சாராயக்கடையை பொதுமக்களின் பங்களிப்போடு இழுத்து மூடியவர், அ.வை. தங்கவேலு. தற்போது, இந்த குறிப்பிட்ட சாராயக்கடையினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னலை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார், அவர்.
மொத்தமாக சாராயக்கடையை மூடுவது கிடக்கட்டும்; குறைந்தபட்சம் ஆர்.கே.வி.நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் கொல்லைப்புற வாசலையாவது மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். மிகமுக்கியமாக, பல்லடம் சம்பவம் போல, நடைபெறுவதற்குள்ளாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்கிறார், அ.வை.தங்கவேல்.
இப்புகார் தொடர்பாக கொள்ளிடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி ரெஜி அவர்களிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “தொடர்ந்து கண்காணித்துதான் வருகிறோம். அவ்வப்போது நானும் ஸ்பாட் விசிட் செய்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல பின்பக்க கதவு திறந்திருப்பது குறித்து இதுவரை என் கவனத்திற்கு வரவில்லை. நிச்சயம் தக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன்.” என்றார்.
– வே.தினகரன்