அங்குசம் பார்வையில் ‘ராபர்’
அங்குசம் பார்வையில் ‘ராபர்’ 41/100
தயாரிப்பு : ‘இம்ப்ரஸ் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ்’ எஸ்.கவிதா & ‘மெட்ரோ புரொடக்ஷன்ஸ்’ ஆனந்த கிருஷ்ணன். டைரக்ஷன் : எஸ்.எம்.பாண்டி. கதை-திரைக்கதை: ஆனந்த கிருஷ்ணன். தமிழ்நாடு ரிலீஸ் : ‘சக்தி பிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன். நடிகர்-நடிகைகள் : சத்யா, டேனியல் ஆன்னி போப், ஜெயப்பிரகாஷ், தீபா சங்கர், சென்றாயன், ‘ராஜாராணி’ பாண்டியன். ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார், இசை : ஜோஹன் ஷெவனேஷ், எடிட்டிங் : என்.பி.ஸ்ரீகாந்த், ஸ்டண்ட் : ‘மெட்ரோ’ மகேஷ், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : சிவக்குமார். பி.ஆர்.ஓ. : திரைநீதி செல்வம்.
ராபெர்ரின்னா வழிப்பறிக் கொள்ளை. ராபர்னா வழிப்பறிக் கொள்ளையன். பத்துப் பதினைந்தாண்டுகளுக்கு முன்பு, சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் பட்டப்பகலிலும் சென்னை மாநகரில் அதிகாலையிலும் பெண்களின் கழுத்துச் செயினை அறுத்துக் கொண்டு ஓடும் கொள்ளைக் கும்பலின் அட்டகாசம் பெரியளவில் இருந்தது. சிசிடிவி கேமராக்கள் செயல்படாத இடங்கள் தான் இந்த கொள்ளைக் கும்பலின் க்ரைம் ஸ்பாட். டைரக்டரின் இந்த வாய்ஸ் ஓவரில் தான் படம் ஆரம்பிக்கிறது.
கட் பண்ணா சென்னை புழல் ஜெயிலில் இருக்கும் சென்றாயன், பெண்களை கதிகலங்க வைத்த ஒரு பக்கா ராபரின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். அந்த அயோக்கிய ராபர் தான் நம்ம ஹீரோ சத்யா. படிச்ச படிப்புக்கு தனது கிராமத்தில் சரியான வேலை கிடைக்காததால், தாய் தீபா சங்கரிடம் ஆசிவாங்கிவிட்டு சென்னை மாநகருக்கு வந்து கால்செண்டர் ஒன்றில் வேலை பார்க்கிறார். அங்கு வேலை பார்க்கும் பெண்ணைக் கரெக்ட் பண்ணப் பார்க்கிறார். “அவ உனக்கு தோதுப்பட்டு வரமாட்டா, கைநிறைய பணம், காஸ்ட்லியான கிஃப்ட், காஸ்ட்லி கார் இதெல்லாம் இருக்குறவன் தான் அவளுக்குப் பிடிக்கும்” என்கிறான் அலுவலக நண்பன் ஒருவன்.
ஈஸியா காசு கிடைக்க ஒரே வழி பெண்களிடம் செயின் பறிப்பு தான் என்ற முடிவுக்கு வந்து திருட்டுக் களத்தில் இறங்கி ராபர் ஆகிறான். நினைத்த பெண்களிடமெல்லாம் குஜாலாக இருக்கிறான். பெத்த தாய்க்கு பணத்தை வாரியிறைக்கிறான். இவன் சேரும் ஆட்கள், இவனிடம் சேரும் ஆட்கள் எல்லாமே திருட்டுக் கும்பல் தான்.
செயின் பறிப்பு, குஜிலிகளிடம் சத்யா குஜால் என இடைவேளை வரை திரைக்கதை திக்குமுக்காடி, நம்மையும் ரொம்பவே திக்குமுக்காட வைக்கிறது. ஒரே ஒரு கான்ஸ்டபிள் மட்டும் [ ராஜா ராணி பாண்டியன் ] அவ்வப்போது தலைகாட்டுகிறார். போனா போகுதுன்னு ஒரு சீனில் இன்ஸ்பெக்டர் வருகிறார்.
இடைவேளைக்குப் பின்பு ஸ்கூட்டியில் செல்லும் ஒரு இளம் பெண்ணிடம் சத்யாவும் அவனது கூட்டாளியும் செயினைப் பறிக்க, அவள் இவன்களைத் துரத்த சாலை விபத்தில் சாகிறாள். அந்தப் பெண்ணின் அப்பா ஜெயப்பிரகாஷ் கதைக்குள் வந்த பிறகு தான் படம் சுமாராக சூடுபிடிக்கிறது. தனது மகளைக் கொன்ற சத்யாவை ஜெ.பி.யும் பாண்டியனும் தூக்கிப் போய் அடைத்து வைத்து சித்ரவதை செய்யும் போது தான், அப்பாடா… இப்பவாவாது ஒரு முடிவுக்கு வந்தாய்ங்களேன்னு மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. க்ளைமாக்ஸ் செம நச்சுன்னு இருந்துச்சு.
ஹீரோ சத்யா இன்னும் பல பரீட்சைகள் எழுதி நல்ல மார்க் வாங்கி பாஸாகவேண்டியுள்ளது. இப்போதைக்கு பார்டர் மார்க்கில் தான் பாஸாகியுள்ளார். போலீசின் புத்திசாலித்தனத்தை க்ளைகாஸில் கரெக்டாக கனெக்ட் பண்ணிவிட்டார் டைரக்டர். அதே சமயம் ஐ.டி.கம்பெனிகளின் ஹெச்.ஆர்.கள் மீது டைரக்டருக்கும் கதாசிரியருக்கும் என்ன கடுப்போ, கோபமோ தெரியல. பகலில் ஐ.டி.கம்பெனி ஹெச்.ஆராகவும் இரவில் செயின் பறிப்புக் கும்பலின் பாஸாகவும் டேனியல் ஆன்னி போப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
எடுத்த படத்தில் இருப்பதைத் தான் விமர்சனம் பண்ண வேண்டும். அது தான் நியாமும் கூட. அப்படி எடுத்திருக்கலாம், இப்படி எடுத்திருக்கலாம் என்று கோளாறெல்லாம் சொல்லக் கூடாது தான். இருந்தாலும் படம் முழுவதும் கொள்ளையனாக வரும் ஹீரோவுக்கு லைட்டாக ‘லவ் எபிசோட்’ இருந்தால் தான், பார்வையாளனுக்கு கொஞ்சமே கொஞ்சமேனும் ஹீரோவின் கேரக்டர் மீது பச்சாதாபம் வரும். ஆனால் இதில் சத்யாவின் கேரக்டர் மீது டோட்டலாக ’நெகட்டிவ் ஷேட்’ விழுந்துவிட்டது. இதான் சரி என டைரக்டர் எஸ்.எம்.பாண்டி நினைத்திருந்தால், அதற்குமேல் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.
-மதுரை மாறன்